(Reading time: 5 - 10 minutes)

முதியோர் இல்லங்களுக்கு மூடுவிழா நடத்துவோம்... - தங்கமணி சுவாமினாதன்

oldage

மீப காலமாய் தொலைக்காட்சியில் அடிக்கடி ஓர் விளம்பரம் பார்க்க முடிகிறது.

இரு தோழிகள் நடந்து வருவார்கள்.ஒருத்தியிடம் மற்றொரு பெண் கேட்பாள்..

"ஓனக்குக் கல்யாணம் நிச்சயமாயிடுத்தே தனிக்குடித்தனம் போக வீடு பாத்தாச்சா?

கேள்வி கேட்கப் பட்டவள் சொல்வாள்.ஓ..என் வுட்பி ரொம்ப ஸ்மார்ட் ஏற்கனவே இடம் வாங்கியாச்சு..என்றுசொல்லி ஒரு குறிப்பிட்ட ஏரியாவின் பெயரைச் சொல்லுவாள். இவ்விளம்பரத்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குக் கொஞ்சம் வருத்தமாக இருக்கும்.

இந்தக் காலப் பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது புரியவில்லை.ஒரு ஆண்-மகன் வயது இருபத்தைந்தோ அதற்கும் மேலுமோ ஒரே வீட்டில் பெற்றோர், உடன் பிறப்புக்கள் அனைவரோடும் வாழ்ந்தவனை தனக்குத் தாலி கட்டிய உடனேயே அனைவரையும் பிய்த்து எரிந்து விட்டுத் தன்னோடு தனிக் குடித்தனம் வரவேண்டு மென ஏன் எதிர்பார்க்கிறார்கள் புரியவில்லை.

அந்த ஆண் தன் பெற்றோர் வசிக்கும் வீட்டிலிருந்து தினமும் அலுவலகம் சென்று வர இயலாத தொலைவிலோ,வெளி நாட்டிலோ,வெளி மானிலங்களிலோ பணியாற்றுபவராய் இருந்தாலோ அல்லது அந்தப் பெண் வேலை பார்ப்பவராய் இருந்து இச் சூழ்னிலைகள் இருந்தாலோ தனிக்குடித்தனம் தவிற்க முடியாது.

அப்படிப் போக வேண்டிய சூழ்னிலை இருந்தால் கூட பெற்றவர்களின் மனம் காயப்படாத அளவில் அவர்களின் முழுச் சம்மதத்தோடு போவதே உசிதம்.

தற்காலத்தில் தனிக்குடித்தனம் போகவேண்டியதற்கான காரணங்களாக சொல்லப்படுபவை:

  1. கூட்டுக் குடும்பமாக இருந்தால்..ரொமான்ஸ் பண்ண முடியாது.தனிமை அதிகம் கிடக்காது.
  2. இஷ்டம் போல் வெளியில் செல்ல முடியாது,வீட்டில் சமைக்காமல் ஹோட்டலில் போய் சாப்பிட முடியாது.
  3. நினைத்தவற்றையெல்லாம் வாங்க முடியாது.
  4. அதிகம் பேர் இருந்தால் வேலை அதிகமாக இருக்கும்
  5. செலவு அதிகம் ஆகும்.
  6. பிறந்த வீட்டினர் அடிக்கடி வரமுடியாது.

பொதுவாய்ச் சொல்லப்படும் இக்காரணங்களையெல்லாம் இல்லை என்று புரம் தள்ளிவிட முடியாது.என்றாலும் உடன் பிறப்புக்கள் ஓர் எல்லைவரை தான்.

ஆனால் பெற்றவர்கள்?அவர்கள் என்ன செய்வார்கள்?எங்கே போவார்கள்?

இந்தகாலத்திலாவது பெண்கள் சுயமாய்ச் சம்பாதித்து தன் காலில் நிற்கக்கூடிய அளவுக்கு வளர்ந்து விட்டார்கள்.ஆனால் ஓரளவு வயதான பெண்களின் நிலை?

கணவர் ஓய்வூதியம் பெறுபவராக இருந்தால் கவலையில்லை.அன்றி தனியார் துறையில் இருந்து ஓய்வு பெற்றவராகவோ,ஏதும் தொழில் செய்து ஓய்ந்தவராகவோ,பணவசதி இல்லாதவராகவோ இருந்துவிட்டால் அந்த பெற்றோரின் நிலை?அவர்கள் வயதானவர்களாய் மட்டுமின்றி முதுமையின் காரணமாய் உடல் நிலை சரியில்லாதவர்களாயும் இருந்துவிட்டால்அவர்கள் கதி?

பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் சேமிப்பை பிள்ளைகளைப் படிக்கவைப்பதிலும் அவர்களுக்குத் திருமணம் செய்துவைப்பதற்கும் செலவு செய்திருப்பாரகள்.நமக்கு மகனோ,மகளோ கஞ்சி ஊத்துவார்களென்ற நம்பிக்கையில்.இப்படித் தனியாய்ப் பிரிந்துபோனால் அவர்கள் நிலை என்னவாகும்?பெற்றவர்களுக்கு மாதாமாதம் ஏதோ ஒரு தொகையினைக் கொடுத்துவிட்டால் நம் கடமை முடிந்தது என நினைப்பது சரியாகுமா?பணம் மட்டும் இருந்தால் போதுமா?அன்பு,அரவணைப்பு,பாசமாய் ரெண்டு வார்த்தைகள் பேரப்பிளைகளின் அருகாமை இதைத்தானே  வயதானவர்கள் விரும்புகிறார்கள்?

இவற்றிற்காக ஏங்கும் பெற்றொரைப் பிரிந்து செல்வது சரியாகுமா?

இருக்கவே இருக்கிறது முதியோர் இல்லங்கள்.அதில் கொண்டுபோய் சேர்த்துவிட்டு மாதாமாதம் பணம் கட்டிவிட்டால் பெற்றோர் சந்தோஷமாக இருக்க மாட்டார்களா என்ன?என்று நினைப்ப்வர்களை என்னென்பது.அங்கு அவர்களுக்கு அவர்கள் தேடும் அன்பு,பாசம் அரவணைப்பு,பேரப் பிள்ளைகளைக் கொஞ்சும் போது கிடைக்கும் சந்தோஷம் அனைத்தும் கிடைத்து விடுமா?

முதியோர் இல்லங்கள் இந்தியாவில் தமிழ் நாட்டில் தான் அதிகம் என்பது கூடுதல் வருத்தம். பக்திக்கும், நற்பண்புகளுக்கும், மரியாதைக்கும், விருந்தோம்பலுக்கும் தாய், தந்தையிடம் காட்டும் பாசத்திற்கும் பெயர் போன தமிழ் நாடா முதியோர் இல்லங்கள் அதிகமாக உள்ள மானிலங்களில் முதன்மையாக இருக்கிறது என்பதை எண்ணும் போது வேதனை அதிகமாகிறது.

வயதானவர்கள் வீட்டில் இருந்தால் யானை பலம் என்று சொல்வார்கள்.

வேலைக்குப் போய்ப் பொருளீட்டி வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளவும் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும் பயன்படும் பட்டங்களைப் பெற மட்டுமே கல்லூரிகள் பயன்படும்.ஆனால் வாழ்க்கையை செவ்வனே நடத்த எந்த யுனிவர்சிடிக்கும் போய்ப் படிக்க வேண்டாம்.வீட்டில் தாயோ தந்தையோ இருந்தால் போதும்.பட்டய அறிவைக்காட்டிலும் அவர்களின் பட்டறிவே சிறந்தது.

பெண்களும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் அந்த ஆணின் பெற்றோரோ, பெண்ணின் பெற்றோரோ இருப்பதே நல்லது.அவர்களைக் காட்டிலும் குழந்தைகளை அக்கறையோடு வேறு யாராலும் கவனித்துக் கொள்ள முடியாது.

நன்றாக கவனித்தால் தாத்தா பாட்டியோடு வளரும் பிள்ளைகள் சிறப்பாகவே வளருவதைக் காண முடியும்.

பெற்று, வளர்த்து, படிக்கவைத்து ஆளாக்கிய பெற்றோர் ஒரு நிமிடம் கூட பெற்ற பிள்ளைகளை சுமையாக நினைத்திருக்க மாட்டார்கள்.வயதான பிறகு அவர்கள் குழந்தைகளாய்.இப்போது பிள்ளைகள் அவர்களைச் சுமையாய் நினைத்தல் கூடாது. 

பிள்ளைகளை மட்டுமே குறை சொல்வது என் நோக்கமல்ல.பெரியவர்களும் கொஞ்சம் நீக்கு போக்குடன் நடந்து கொள்ளவேண்டும்.வீட்டு வந்த மருமகளை எப்போதும் குறை சொல்வதும்,அவளைப் பற்றி மகனிடம் போட்டுக்கொடுப்பதும், அவளின் உறவினர் வந்தால் முகம் கொடுத்துப் பேசாதிருப்பதும், மகன்-மருமகள் இருவரின் தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைப்பதும் பிரர்ச்சனைக்கு வித்தாகிறது.இவற்றைத் தவிற்க வேண்டும்.

இந்த காலத்திற்குக் கூட்டுக் குடும்பம் ஒத்துவராதுதான்.ஆனால் பெற்றவர்களைத் தவிற்பது சரியாகுமா? புரியவில்லை.அதுவும் பெற்றவர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்புவதை தவிற்பதே நல்லது.அது மிகவும் பாபமான செயல்.பிரர்ச்சனை இல்லாத வாழ்க்கை ஏது?அதற்காக பெற்றவர்களையே பிரர்ச்சனையாக எண்ணுதல் சரியாகுமா?

கூடுமானவரை ஒருவரோடொருவர் அனுசரித்துப் போவதே மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.

என்றைக்கு இந்தியாவில் எங்குமே முதியோர் இல்லம் இல்லை என்ற நிலை வருகிறதோ அன்னாளே கொண்டாடப் படவேண்டிய நன்னாள்.வாருங்களேன் முதியோர் இல்லங்களுக்கு மூடு விழா நடத்துவோம்.

 

இக்கட்டுரை யாருக்காவது உடன்பாடு அற்றதாக இருந்தாலோ,வருத்தம் ஏற்படக் காரணமாய் இருந்தாலோ..சாரி. படித்ததற்கு நன்றி...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.