(Reading time: 1 - 2 minutes)

 

தேடல்

 

காலவெளியில் முடிவற்று நீண்டு கிடக்கும்

ஒற்றையடி ஒருவழிப்பாதையில்

உடைகளற்று, தளைகளற்று, பின்தொடர்வாரின்றிப்

பயணிக்கும் வழிப்போக்கன்.

 

கனவுகளற்ற, கவிதைகளற்ற அப்பிரதேசத்தில்

அவனே கனவு; அவனே கவிதை.

 

பாதையோரத்தில் பச்சைப்போர்வை போர்த்திய

பசுமரங்கள் பார்த்தும்,

திசைகளற்று, விசையோடு வீசும்

காற்றின் வன்ஸ்பரிசம் உணர்ந்தும்,

ஈரம் தொலத்துவிட்ட செம்மண் பரப்பில் வீழ்ந்த

ஒற்றை மழைத்துளியெழுப்பிய மண்வாசம் நுகர்ந்தும்

அலைந்து கொண்டிருக்கும் அவனது இந்திரியங்கள்

கால்களின் வேகம் குறைக்கத் திணறுகின்றன.

 

பாதையின் தொடக்கத்தை மறந்த கால்கள்

முடிவைக் காணும் தாகத்தில்,

களைப்பற்று, இளைப்பற்று இயங்கிக் கொண்டிருக்கின்றன.

 

நீண்ட நெடும் பயணத்தில் கல்லையும், முள்ளையும்

துணையாக்கிக்கொள்ளும் கலைத்தேர்ச்சி பெற்ற

கால்கள், அதோ போகின்றன தொடுவானம் நோக்கி.

 

நடத்தலின் செறிவில் பாதையாகவே மாறிவிட்டிருந்த வழிப்போக்கனின் கரிய உடல் அந்த ஒற்றையடிப்பாதை முழுதும் விரிந்து கிடக்கிறது

அடுத்து வரும் வழிப்போக்கனை எதிர்பார்த்து.

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.