(Reading time: 4 - 8 minutes)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 54 - நீ உணர்ந்திடும் நாள் வந்திடுமா….!!!! - மீரா ராம்

Ilam poovai nenjil

உடலை உறைய வைத்திடும் குளிர்…

தண்ணீர் உச்சந்தலை தனில் பட

தேகமெங்கும் சிலிர்த்து நடுங்க

முருகா என இதழ்கள் உச்சரித்து துடித்திட

மார்கழித் திங்களாம் அன்று நீராடி முடிந்து

அவசரம் அவசரமாய் கிளம்பினேன் கோவிலுக்கு…

ஈரம் தோய்ந்த கூந்தலில் சிறு முடிச்சு போட்டு

வீட்டில் விளக்கேற்றி விளக்கின் முன் அமர்ந்தேன்

கண்ணனையே மணக்க விரும்பி

நோம்பு மேற்கொண்டு அவரையே

திருமணம் முடித்தாளாம் ஆண்டாள்…

அவள் பாடிய பாசுரங்களாம் திருப்பாவையினை

நானும் மனமுருக பாடி முடித்த வேளை

செவிகளில் விழுந்தது கோவில் மணியோசை…

நேரமாச்சே… சொல்லியபடி வேகமாய் எழுந்துகொண்டவள்

கோவிலை நோக்கி பயணித்தேன் உடனேயே….

நல்ல வேளை… பூஜை எதுவும் ஆரம்பித்திடவில்லை…

ஆட்கள் வருவதற்காக மணியோசை எழுப்பியிருப்பது

அங்கே சென்ற பின்னரே தெரிய வந்தது…

ஹ்ம்ம்… புன்னகையுடன் பிரகாரத்தில் இருக்கும்

பெருமாளை சேவித்தேன் மனமுருக…

கர்ப்பகிரகத்தில் அலங்காரங்களும், மாலைகளுமாக

கம்பீரமும், தோரணையும் ஒருங்கே கொண்டு

பார்ப்பவரின் மனம் கொள்ளை கொள்ளும் வண்ணம்

இருந்திட்டவரை உள்ளத்தில் நிறுத்தி பிரார்த்தித்தேன்

என் வேண்டுதல் நிறைவேற வேண்டுமென….

மனதின் ஓரம் என்னவர் முகம் சட்டென வந்து செல்ல

கூடவே அவரின் நினைவும் வந்தாடியது என் மனஊஞ்சலில்…

இந்நேரம் எழுந்திருப்பாரோ… மாட்டாரோ…

எண்ணங்கள் அவரைச் சுற்றி வட்டமிட முனைய

கடவுளே அவருக்கு எப்பவும் துணையா இருப்பா…

பார்த்துட்டிருக்குற வேலையில அவருக்கு எந்த

பிரச்சினையும் வராம நீ தான்ப்பா துணை இருக்கணும்…

எங்கே ஆரம்பித்தாலும் மீண்டும் அவரிடத்திலேயே

என் எண்ணங்கள் வந்து நிற்க,

உன் ஆண்டாளின் விருப்பப்படி அவளையே

மணமுடித்து ஏற்றுக்கொண்டாயல்லவா?...

பின் ஏன் என் வேண்டுதலை நிறைவேற்ற மறுக்கிறாய்?...

உன் ஆண்டாளுக்கு ஒரு நீதி…

அடுத்தவருக்கு ஒரு நீதியா?...

இதெல்லாம் கடவுளான உனக்கே

அநீதியாக தென்படவில்லையா பெருமாளே…

உன்னையே பதியாக அடையவேண்டுமென

அவள் நினைத்ததை மட்டும் நீ நிறைவேற்றி வைப்பாயா?...

எனில் என்னவரையே மூச்சாகக்கொண்டு

சுவாசித்து ஜீவித்துக்கொண்டிருக்கும் என் நிலை??....

நான் நேசிப்பவருக்கும் இன்றுவரை புரிந்திடாத

அவ்வுண்மை உனக்கும் புரிந்திடவில்லையா???..

உள்ளம் குமுற ஆரம்பிக்க, அதனை அப்படியே

எனக்குள் அமிழ்த்துவிட்டு விழிகளை திறந்து

தீபாராதனையைத் தொட்டு கண்களில் ஒற்றிவிட்டு நிமிர

இருகரம் குவித்து விழிகள் மூடி பெருமாளை

சேவித்துக்கொண்டிருந்தாய் நீ….

கண்கள் சட்டென குளமாக

அதிலிருந்து உதிர்ந்தது என் கண்ணீர்ப்பூக்களும்

உன்னைப் பார்க்கும் ஆவலுடன் அக்கணமே…

இதழ்கள் தானாக விரிய,

விழிகளோ உன்னை ஆடாது அசையாது பார்த்திட்டது…

கோவிலின் மணியோசை என்னை நனவுலகுக்கு இழுத்துவர

உன்னிடமிருந்து விழிகளைப் பிரித்தெடுத்து

பெருமாளைப் பார்த்தபடி நான் கைகூப்பி நிற்க

அவர் சிரிப்பது போல் இருந்தது என்னைப்பார்த்து…

மனமானது சந்தோஷத்தில் நிறைந்துவிட,

உள்ளமும் அமைதியடைந்தது

கடவுள் என்னைக் கைவிடமாட்டார் என…

அருகில் என்னவர் இருந்தும்,

அவரின் மனதுக்கு எப்பொழுதும் போல்

தொலைவிலேயே இருந்தேன் நான்…

விரக்தி என்னை சூழும் முன்னே

கோவிலை விட்டு வெளியேற நான் நினைத்திட

“தம்பி… அந்த பொண்ணு பிரசாதம் வாங்காம போறா பாரு…

போ… போய் அவளுக்குக்கொடுத்திட்டு வா…”

கோவிலில் உள்ள பெரியவர் குரல் கொடுக்க,

நீ என்னை நோக்கி வந்திட்டாய் வேகமாய்…

உன்னை கண்கள் குளிர தரிசித்தேன்…

பிரசாதத்தினை என் கையில் தந்துவிட்டு

நீ கோவிலின் உள்ளே செல்ல

நானோ உன்னைப் பார்த்தபடியே வெளியே வந்தேன்…

பெருமூச்சும் தானாக வெளிவர,

நீ மறையும் வரை உன்னையே பார்த்திருந்தேன்…

இத்தனை நாட்களாக நான் செய்யும் ஒன்று….

உன்னைப் பார்த்து பார்த்து ரசிப்பது மட்டுமே…

ஏனோ ஓர்நாள், ஓர்நொடி கூட எனக்கு சலிப்பு

எட்டிடவில்லை இதுவரை…

கண்கள் உன்னைக் கண்டு ரசிக்கும் வரமானது

என் மனதிற்கும் கிடைத்திடுமா?...

உன்னையே எண்ணி துடித்துடும்

என் காதலையும் நீ உணர்ந்திடும் நாள் வந்திடுமா?...

பூ மலரும்

Ilam poovai nenjil 53

Ilam poovai nenjil 55

{kunena_discuss:1088}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.