(Reading time: 4 - 7 minutes)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 57 - என் மீது விழ நேர்ந்தால்….!!!! - மீரா ராம்

Ilam poovai nenjil

பொழுது புலர்ந்து இருள் மறையத்துவங்கி

வானத்தில் வெளிச்சம் தென்பட ஆரம்பிக்க

குளிரில் நடுங்கிய விரல்களை பொருட்படுத்தாது

வேலையிலேயே கவனமாய் இருந்திட்டவள்

அதனை முடித்துவிட்ட நிம்மதியில் எழுந்து

“அம்மா முடிச்சிட்டேன்…” என குரல் கொடுத்துவிட்டு

நெற்றியில் விழுந்து ஓரம் செல்லமாட்டேன் என

அடம்பிடித்துக்கொண்டிருந்த கூந்தலை ஒதுக்கி

தள்ளியபடி திரும்பியவள் வண்டியின் சத்தம் கேட்டு

தூரத்தில் பார்த்திட, தூக்க கலக்கம், வேலை முடித்த களைப்பு

அனைத்தும் சேர்த்து பார்வையினை மறைத்திட

மீண்டும் அந்த வண்டியின் சத்தம் கேட்டு திரும்பியவளின்

கண்கள் விரிந்து தான் போனது ஆச்சரியத்தில்…

இத்தனை அதிகாலையில்… குளித்து முடித்து,

பொங்கல் திருநாள் அன்று மங்களகரமாய்

மஞ்சள் நிற சட்டையும், வேஷ்டியுமாய்,

நீ வந்து கொண்டிருக்க உன்னை விட்டு

கருவிழி அசைந்திடவில்லை சிறிதும்…

வரும்போது வேகமாக வருவது போல தோன்றினாலும்’

என்னைக் கடந்து செல்லும் வேளையில்

மெதுவாகவே சென்றது போல் இருந்த்து

உண்மையில் பிரமையா?... அல்லது நிதர்சனமா?...

ஒன்றும் புரியாது குழம்பி போய் உன்னையே நான்

வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்க

மருந்துக்கும் என் பக்கம் பார்வையை செலுத்தாது

சாலையிலேயே கண் பதித்து சென்றிட்டாய் நீ…

சாலையின் வளைவில் திரும்பி நீ செல்லும் வரையில்

உன்னையே நான் பார்த்துக்கொண்டிருக்க,

“என்னம்மா கூப்பிட்டியா?...” என என்னைப் பெற்றவளும்

வந்து நிற்க, அதிர்ச்சியில் ஒருகணம் உறைந்திட்டேன் நான்…

“வாடைக்காத்து அடிக்குதும்மா… முடிச்சிட்டல்ல… உள்ள வா…”

அம்மாவின் குரல் என் செவியருகில் விழ,

அப்போது தான் அம்மா அருகில் இருப்பதே நான் உணர

பதட்டத்துடன் நான் அவரை சட்டென திரும்பி பார்த்திட

என் அம்மா ஒவ்வொரு கிண்ணத்தையும் வீட்டினுள்

எடுத்துச் சென்று கொண்டிருக்க, மூச்சே அப்பொழுது தான் வந்தது…

சரி… உள்ளே போகலாம்… சித்தம் நினைத்த வேளையே

உள்ளே செல்ல அடி எடுத்த வைத்த பாதங்கள்

அப்படியே நின்றிட, ஓர்முறை திரும்பி முற்றத்தினை பார்த்திட்டேன் நான்…

உன் கடைக்கண் பார்வைக்காக ஏங்கி

இத்தானை நாட்கள் நான் தான் தவித்தேன் என்றால்

இன்று என் கையால் வரையப்பட்ட கோலத்திற்கும்

அதே நிலை தானா?... நினைத்த மாத்திரமே

மனதின் ஓரம் சுளீரென்ற வலி உண்டாக

“லூசு… உன் ஆசைப்படி உன் கோலத்தை

முதலில் பார்த்தது உன்னவர் தானே?... அப்புறம் என்ன?...”

இதயமானது வலியினையும் பொருட்படுத்தாது

உள்ளிருந்து குதூகலிக்க, முகத்தில் சட்டென

ஓர் மாற்றம் வந்திட்ட மறுகணமே

“இல்லையே… அவர் திரும்பி பார்க்கலையே…

நேரா தான போனார்….”

சிந்தனையானது பின்னோக்கி சென்றிட,

“லூசு… வண்டி மெதுவா போச்சே… அத நீ கவனிக்கலையா?..”

மீண்டும் மனமானது என்னை சமாதானப்படுத்த விழைய,

“அட ஆமால்ல… அதான் வண்டி மெதுவா போச்சா?...”

புன்னகை சட்டென நெஞ்சில் உதித்திட

சந்தோஷப்பூக்கள் பூத்து நிரம்பியது என்னுள்…

உள்ளம் அதிகாலையிலேயே கொள்ளையும் போகிட

உவகையும் என்னுள் பொங்கி வழிந்திட

வெட்கமும், நாணமுமாய் வீட்டினுள் நுழைந்தவள்

ஓர்முறை நின்று வெளியே எட்டிப்பார்த்திட

நீ முதன் முதலில் பார்த்திட்ட கோலம்

என்னைப் பார்த்து சிரித்திட்டது சட்டென…

“போதுமடா… இது போதும்…”

உதடுகளும் உரைத்திட,

உள்ளிருந்து மனமோ “ஆமா இன்னைக்கு இது போதும்…”

நிறைவாய் கூறிட, நான் போட்ட கோலத்தின் மேலேயே

பொறாமையும் வந்திட்டது எனக்கு…

எத்தனையோ நாட்கள் கிடைக்காத பேறு

அதற்கு ஓர்நொடியில் இன்று கிடைத்திட்டதே…

ஆம்… எனக்கு வரமும் கிடைத்திட்டால்

ஓர் பொழுது வாழ்ந்திடும் கோலமாய்

நான் மண்ணில் பிறந்திடுவேனே….

உன் கடைக்கண் பார்வை மட்டும்

என் மீது விழ நேர்ந்தால் !!!....

பூ மலரும்

Ilam poovai nenjil 56

Ilam poovai nenjil 58

{kunena_discuss:1088}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.