(Reading time: 4 - 7 minutes)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 67. இது தான் காதலா….!!!! - மீரா ராம்

Ilam poovai nenjil

கைக்கடிகாரத்தை திருப்பி திருப்பி பார்த்தபடி

சாலையைப் பார்த்துக்கொண்டிருந்தேன்

சட்டென மூண்ட எரிச்சலுடன்…

“என்ன இது?... இவ்வளவு நேரமாச்சே…”

மனமானது உரைத்திட, எனக்கோ கோபம் தலைக்கேறியது…

“உங்கிட்ட யாராவது கேட்டாங்களா?...

நீ உன் வேலையைப் பாரு…”

பட்டென்று மனதிற்கு பதிலுரைத்தேன் நானும்…

“ஆமா நீ என்னையே சொல்லு…

பேச வேண்டியவங்ககிட்ட பேசிடாத…”

மனமும் முணுமுணுத்திட,

முறைக்க ஆரம்பித்த என்னையும்,

அது திசை திருப்பி விட்டது பட்டென்று…

குட்டி தேவதை ஒன்று தான் அணிந்திருந்த

அந்த அழகான பட்டுப்பாவாடையை பிடித்தபடி

தனது அம்மாவுடன் சாலையில் நடந்து போய் கொண்டிருக்க…

உள்ளமோ அவளின் சிரிப்பில் தொலைந்த நேரம்

கண்களோ அவளின் உடை நிறத்தில் விழித்துக்கொண்டது…

“இந்த நிறமா?... போச்சா?...

சும்மாவே இவ இம்சை தாங்க முடியாது…

இப்போ இந்த வண்ணம் வேறு இவ எண்ணத்தை கலைச்சிடுமே….”

இதயமானது சோர்ந்து போய் வாடியபடி

உள்ளத்தின் ஊஞ்சலில் தனியே அமர்ந்து சாய,

கால்களும் அதற்கு மேல் அங்கே நிற்க விரும்பாது

நடை போட ஆரம்பித்தது எட்டு வைத்தபடி…

கண்களானது தானாகவே கசிய ஆரம்பிக்க,

“ஆமா இப்போ கண்ணைக் கசக்கி என்ன பிரயோஜனம்?...

அவரைப் பார்க்காத மாதிரி, கண்டுக்காம நீ அலட்சியம் பண்ணின?...

அதான் அவரும் உங்கிட்ட இப்படி நடந்துக்குறார்….”

மனதின் குரலாய் அது வெளிவர,

எண்ணமோ அதை ஆமோதித்த தருணமே

நான் செய்தது தவறோ என்ற கேள்வியும் எழுந்தே விட்டது…

“அவர் மட்டும் விளையாடலாம்?... நான் விளையாடக்கூடாதா?...

ஒரு நாள் நான் கண்ணாமூச்சி ஆடினதுக்கு

கிடைச்ச பரிசு தானா இந்த ஏமாற்றம் எனக்கு?...”

உள்ளம் குமுற, கசிந்த கண்ணீர் வெளியே வந்துவிடுவேன்

என மிரட்டிற்று அது சாலை என்றும் பாராமல்…

தொண்டை கமற, கண்களும் நீர் சிந்த முயல,

நடைபோட்ட கால்களும் அதற்கு மேல் நடவேன் என நின்றிட

கைகள் உயர்ந்து கண்களை அழுந்த துடைத்துவிட்டு

நிமிர்ந்த போது கலங்கலாய் தெரிந்தது சாலையும்…

வண்டி செல்வதும் தெரியவில்லை… வருவதும் தெரியவில்லை…

கண்ணைக் கட்டிக்கொண்டு வர, சுதாரித்து நான் நடக்க

சட்டென என் அருகே வந்து நின்றது ஒரு வாகனம்…

சத்தம் கூட எழுப்ப இயலாது சித்தம் கலங்கி நானிருக்க

கண நேர இடைவெளியில் மீண்டவள்,

யாரது?... என்ற கோபத்துடன் நிமிர,

இரு சக்கர வாகனத்தில் உனக்கே உரிய மிடுக்குடன்

என்னைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாய் நீ…

பார்த்த மாத்திரத்தில், கோபம் மறைந்து

உற்சாகம் ஊற்றெடுக்க, விழியும், அதரமும்

அதை வெளிப்படுத்திற்று அக்கணமே…

புருவங்கள் வில்லாய் வளைந்து எனை நோக்கி உயர,

ஹ்ம்ம்… ஹூம்… என தலையசைத்தவளாய் தலைகுனிந்தேன் நான்…

நான் நிலம் பார்க்க, நீயும் எனைப் பார்த்திட்டாய்….

அதுதான் சமயம் என்பது போல்…

கடைக்கண் பார்வையில் அதனை நானும் உணர

வெட்கம் உந்தித்தள்ள, இதழ்கள் விரிந்து மலர,

கைகளில் வைத்திருந்த புத்தகத்தை இறுக பற்றிக்கொண்டேன்…

உன் பார்வை என் மீதே என உணர்ந்தும்

என்னால் உன்னை ஏறெடுத்துப்பார்க்க முடிந்திடவில்லை…

ஏன் பார்க்கிறாய்?... என கேள்வி எழுப்பவும் இயலவில்லை…

தாமதமும் ஏன்? என விவாதம் செய்யவும் விழையவில்லை…

ஏனடா?... காதலா?...

பார்வை ஒன்றே போதும் என மனமும்

அமைதி கொண்டதோ?...

காக்க வைத்த காத்திருப்பு பெரிதாய் தெரியவில்லை…

மோதுவது போல் வந்து நின்றதும் கண்டுகொள்ளவில்லை…

ஆசை தீர உன்னை கண் குளிர தரிசிக்கவுமில்லை…

ஏனடா?...

அருகில் நீ இருந்தும், எதிரில் உன் குறும்பு தெரிந்தும்

என்னால் ஏன் உன்னைக் காண முடிந்திடவில்லை?...

என் நாணம் ஏன் எனக்கு வஞ்சனை செய்கிறது?...

பார்க்க நினைத்த மனம் இன்று பார்த்தவுடன்

தலைகவிழ்ந்தபடி நிலம் பார்த்திடுகிறதே… ஏனடா அன்பே…

இத்தனையும் ஏன்?.. எதற்கு?..

கேள்வி பிறக்கையில் பதில் மட்டும் மௌனம் கொள்வதும் ஏனோ?...

ஹ்ம்ம்…

எனில்…

இது தான் காதலா?...

பூ மலரும்

Ilam poovai nenjil 66

Ilam poovai nenjil 68

{kunena_discuss:1088}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.