(Reading time: 3 - 5 minutes)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 25 - உள்ளம் கொள்ளை போக ஆரம்பித்ததோ உன்னால்???….!!!… - மீரா ராம்

Ilam poovai nenjil

ஊதக்காற்று உடலைத் தொட்டு தழுவிச் செல்ல

உன்னை நினைத்துக்கொண்டே உதித்த கீற்றுப்புன்னகையுடன்

அணிந்திருந்த துப்பட்டாவை இழுத்து

போர்த்திக்கொண்டேன் குளிர் தாங்காமல்…

என்ன இது இப்படி குளிர்கிறதே என்றெண்ணிய கணமே

வானத்தில் கருநிறமேகங்கள் திரளாய் அணிவகுத்து

தங்களது வனப்பை காட்ட முனைப்பாக செயல்பட,

உனக்கு நான் குறைந்தவனா என்பது போல்

இடி முழக்கம் பெரும் பயத்தை உண்டுபண்ண,

செவிகளில் கைவைத்து பொத்திக் கொண்டவளின்

உதடுகள் அர்ஜூனா அர்ஜூனா அர்ஜூனா என

சொல்லி முடிக்கும் முன்னரே மனமோ

உன்னை அழைத்திருந்தது வேகமாய் கிருஷ்ணா என…

அது ஏனோ இடி இடித்தால் அர்ஜூனன் நினைவு வருவதற்கு பதில்

உன் நினைவு தான் அதிகம் எனக்குள் உலா வருகிறது…

பத்து விரல்களையும் கோர்த்து நெஞ்சோடு சேர்த்தணைக்க

உன் மூச்சுக்காற்றின் ஸ்பரிசம் என்னை தீண்டியதாய் ஓர் உணர்வு என்னில்…

மண் வாசம் நான் நுகரும் முன்னமே

உன் சுவாசம் என் நாசிக்குள் நுழைந்தது மென்மையாய்…

பலத்த இரைச்சலுடன் மழை மண்ணைத்தொட

ஜன்னலோரம் அமர்ந்திருந்தவளின் இதயமோ

ஊஞ்சலாகி ஆடத்தயாராக, நீயும் கூடவே இருந்து

காற்றைபோல் தொட்டு தொட்டு விளையாட்டு காட்டினாய் இதமாய்…

உள்ளம் துள்ளிக்குதித்து இறங்க முற்பட,

கள்ளன் நீயும் இழுத்து பிடித்துக்கொண்டாய் விட மறுப்பது போல்…

ஐய்யோ ஏனடா இப்படி பிடிவாதம் பிடிக்கிறாய்?...

இறக்கி விட்டுவிடேன் என் செல்லக்கண்ணா என

இதயம் கெஞ்சி கொஞ்ச, சற்றே இரக்கம் கொண்டாய் நீயும்…

அழகுடா கண்ணா… நெஞ்சம் குதூகலத்துடன் உரைக்க

எதுவுமே பேசாமல் கைகட்டி தோரணையுடன் நீயும் நின்று பார்க்கிறாய்…

என்னாயிற்று என மனமும் எண்ணமிட்ட வேளை

உதட்டில் தோன்றிய புன்முறுவலுடன்,

லேசாக விழி மூடி நீயும் இமைக்க

இதயம் எகிறித்தான் குதித்தது எனக்கும் சட்டென…

அதைக் கண்டதும், உன் இரு கரம் தானாக விரிய,

ஒற்றை தலையசைப்புடன் என்னை நீயும் பார்த்திட

அவ்வளவுதான்….

கைகளை சட்டென நெஞ்சில் இருந்து பிரித்து எடுத்து

முகத்தினை மூடிக்கொண்டேன் பட்டென…

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தேனோ தெரியாது…

ஜன்னலின் வழி வெளியே எட்டிப்பார்த்தேன்…

மண்ணோடு காதல் பேசிக்கொண்டிருந்த மழைத்துளிகள்

செல்வது பொறுக்காது சிணுங்கிக்கொண்டிருந்தாள் ஈரத்தில் நில தேவதை…

பார்த்ததும் முகத்தில் செம்மைப் பூக்கள் பூக்க,

வெட்கச் சிணுங்கல் என்னுள்ளும் எழ,

அப்படியே கம்பிகளில் தலைசாய்த்து, உன்னை நினைத்திட,

மீண்டும் என் உள்ளம் கொள்ளை போக ஆரம்பித்ததோ உன்னால்?... என் ராஜா!!!

பூ மலரும்……….

Ilam poovai nenjil 24

Ilam poovai nenjil 26

{kunena_discuss:1088}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.