(Reading time: 3 - 5 minutes)

கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 43 - எத்தருணத்திலடா? - மீரா ராம்

Ilam poovai nenjil

கைக்கடிகாரத்தை கண்கள் பார்த்திட

பாதங்களோ நிலத்தில் நடை போட்டது வேகமாய்…

சாலையின் ஓரத்தில் சென்று கொண்டிருந்தவள்

சட்டென இருபுறமும் பார்த்துவிட்டு சாலையை கடந்திட

எதிரே இருந்த பேருந்து நிறுத்தத்தை அடைந்தேன் படபடப்புடன்…

திரும்பவும் கடிகாரத்தில் பதிந்த விழிகள் சாலையை நோக்கி திரும்ப

என்ன இது… இன்னும் காணோமே… ஒருவேளை போயிட்டோ?..

சிந்தனை பலவாறாக எனக்குள் எழ, கைப்பேசியை எடுத்து

தோழிக்கு அழைக்கலாமா என நினைத்த பொழுதே

அவள் எனக்கு அழைத்து, என் எண்ணம் சரி என கூறி,

விரைந்து வா என்றபடி அழைப்பினை துண்டித்திட,

அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் குழம்பி நிற்கையில்

என் எதிரே வந்து நின்றாய் நீ நான் எதிர்பாராத வண்ணம்…

“நீங்க இங்க எப்படி?...”

நான் விழி விரித்து கேட்டிட, நீயோ புன்னகைத்தாய்…

“யாராவது பார்த்தா அவ்வளவுதான்… முதலில் இங்க இருந்து கிளம்புங்க..”

நான் உன்னை அவசரப்படுத்த, நீயோ எதுவும் பேசாது முன்னே நடந்தாய்…

நான் உன் செய்கையில் குழம்பி நின்றிருக்க,

“என்னோடு வா… நான் விட்டுடுறேன்….” என்றாய் நீ…

“நீங்களா?.....” நான் அதிர்ந்து போக,

“உன் கூட நடந்து வரேன்… வா போகலாம்…”

அவன் நிதானமாக கூற, நானோ ஊமையாகி போனேன்…

“நேரமாகலையா?... இப்போ நடக்க ஆரம்பிச்சா தான் இன்னும்

கொஞ்ச நேரத்துக்குள்ள போக முடியும்… சீக்கிரம் வா..”

சொல்லிவிட்டு அவன் முன்னே செல்ல,

அவன் பாதம் தொடர்ந்து சென்றேன் நான் என்னவன் பின்னாடியே…

அவன் முதுகையும், அவனது நிழலையும் ரசித்தபடி நான் நடக்க,

சட்டென்று அவனது நடை நின்றது…

என்ன என என் புருவங்கள் உயர, எனக்கு பின்னாடி சில அடி

இடைவெளி விட்டு நின்று “இப்போது செல்…” என்றாய் நீயும்…

இதழ்களில் புன்னகை உதித்திட, நிலத்தில் தெரிந்த உன் நிழலை

கண்களுக்குள் பரவவிட்டபடி, நடந்தேன் நான் அமைதியாய்…

தலைக்கு குளித்து தளர பின்னியிருந்த கூந்தலில் பார்வையை

பதித்தவனாய் என் பின்னே அதரங்களில் புன்னகையுடன் வந்தாய் நீயும்…

சில நிமிட நடை பயணம்…

எனினும் இன்னும் நீளாதா என்ற ஏக்கம்

நெஞ்சம் முழுதும் வியாபித்திட துவண்டேன் நான்…

உன் கை கோர்த்து தோள் சாய்ந்து ஆள் அரவமற்ற சாலையில்

நடந்திட ஆசை இருந்தும், இன்று பல அடி இடைவெளியில்

நீயும் நானும் இருப்பதும் காதலின் ஒருவகை விளையாட்டு தானோ?..

பக்கம் வரமாட்டாயா என நினைக்கும் இதயம்

பக்கம் நீ வந்திட எண்ணினாலே துடித்து தடுமாறுகிறதே…

ஏனடா கண்ணா???…

என்னை அருகிலும் தொலைவிலும் இம்சிக்கிறாயே…

உன்னுடனே உன்னவளாய் உன்னருகில் நானும்

என்னுடனே என்னவனாய் என்னருகில் நீயும்

நினைக்கவே இனித்திடும் காலமும்

பூப்பது எத்தருணத்திலடா?... என் ராஜா!!!.......

 

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்…

எப்படி இருக்கு இந்த வாரக் கவிதை….

படித்துவிட்டு தங்களின் கருத்துக்களைக் கூறுங்கள்…

மீண்டும் அடுத்த வாரம் இளம்பூவை நெஞ்சில் கவிதைத் தொடரில் சந்திக்கலாம்…

பூ மலரும்

Ilam poovai nenjil 42

Ilam poovai nenjil 44

{kunena_discuss:1088}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.