(Reading time: 1 - 2 minutes)

கவிதை - கொரோனா ஏன்? - ரவை

கண்ணுக்குத் தெரியாத
கிருமியொன்று உலகையே
பந்தாடுது,பார்! மானிடனே!
பகுத்தறிந்து கொள்வாயே!
மண்ணுக்குள்தலை புதைத்து
மறைந்திருந்து தப்பிக்க
மானுடனை தூண்டியதோர்
மாற்றத்தை சிந்திப்பாய்!

விண்ணையளந்து மார்தட்டி
வாய்கிழிய பேசி மகிழ்ந்த
உன்னையேநீ எண்ணிப்பார்!
ஓடிஒளிந்திருக்கும் நேரத்தில்!
கண்ணுக்குத் தெரியாமல்
குவலயத்தை ஓடவிட்ட
கொரோனா கால்தொட்டு
கும்பிடவும் தயங்காதே!

சீனாவில்துவங்கி சீக்கிரமே
செகத்தினையேவென்றுவிட்ட
கிருமியினைக் கொல்வதற்கு
குண்டுகளால் இயன்றிடுமா?
அணுகுண்டும் ஏவுகணையும்
அதைவெல்ல பயன்படுமா?
அகம்பாவம் உருவெடுத்த
அற்பனே! அறிவிலியே! சிந்தி!

இனியேனும் அடக்கமுடன்
இயல்பாக இருந்திடுவாய்!
கனிவுடனே எளியவரை
கைதூக்கி உயர்த்திடுவாய்!
வீண்பெருமை பேசாமல்,
வையத்தில் பணிபுரிவாய்!
ஆண்டவன்அடி பணிந்து
அறவழியில் வாழ்ந்திடுவாய்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.