(Reading time: 2 - 3 minutes)

கவிதை - அற்றது அறிந்து கடைப்பிடித்து... - இரா.இராம்கி

இத்தலைப்பு-திருக்குறளில்,மருந்து என்னும் அதிகாரத்தில், ஒரு குறளின் முதல் மூன்று சொற்கள்

***************************************

இயற்கையின் படைப்பில் மனித உடல் மா வரம்;

நாளும் பேணாவிடில்,தேயும் தினம் அதன் தரம்;

அற்றது அறிந்து கடைப்பிடித்தாலே,

அதற்கு நல்ல உரம்; 

 

நாவின் ருசிக்கு புசிக்காமல் வயிற்றின் பசிக்கு புசித்தாலே போதும்;

நல்ஆரோக்கியம் நமக்கு வாய்க்கும் நிச்சயம்;

 

நம் பாரம்பரியம் தந்ததே பல சிறுதானியம்;

அதன் அருமை அறிந்து உண்டாலே உடலுக்கு ஊட்டம்;

 

மஞ்சளும் மிளகும் மாமருந்தாம்;

மகிமை அறிந்து நாம் உணவில் சேர்க்கும் நேரம்,

மறைவாய் கிருமிகள் யாவும் ஓடுமாம்;

சுக்கும் திப்பிலியும் நோயை எதிர்க்குமாம்,

சீரகமோ செரிமானம் கூட்டுமாம்;

 

நாட்டுக்காய்கறிகளும் நல்ல கனிகளும்

நமக்கு நாளும் உடலுக்கு நலம் சேர்க்கும்;

நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும், கூடவே பலம் சேர்க்கும்;

மனதிற்கும் நல்ல திடம் சேர்க்கும்;

 

செரித்த பின் உண்ட உடலே செழிக்கும்;

அறுசுவையும் அளவாய் உண்டால் வளம் கொழிக்கும்;

நொறுங்கத் தின்றால் நம் ஆயுள் நீளும்;

சிரித்து வாழ மனதில் பாரம் யாவும் நீங்கும்;

 

அற்றது அறிந்து கடைப்பிடிப்போம்;

உற்றது உணர்ந்து உடலுக்கு சேர்ப்போம்;

கற்றது கற்றபடி கடைப்பிடிப்போம்;

பெற்றது போதுமென பெருமகிழ்ச்சி கொள்வோம்;

 

கல்லாததும் கற்று கடைப்பிடிப்போம்;

பொல்லாத பழக்கங்களை புறக்கணிப்போம்;

ஓவ்வாத அயல்நாட்டு உணவை ஓரம் கட்டுவோம்;

 

இவை யாவும் நாம் நாளும் பின்பற்றினாலே போதும்;

இம்மையில் நோயற்ற வாழ்வு நிச்சயம்;

இன்பங்கள் நம் வாழ்வில் கூடுவது சத்தியம்; 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.