(Reading time: 2 - 3 minutes)

கவிதை - விலகட்டும் துயரம் - இரா.இராம்கி

விலகட்டும் உங்கள் வாழ்வின் 

பெருந்துயரம்;

இனி அடையட்டும் உங்கள் வாழ்வு, 

பெரும் உயரம்;

 

உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போனது உழவனின் தேகம்;

உலகிற்கே உணவூட்டும் உழவனுக்கு 

இனி கிடைக்கட்டும் உழைப்பிற்கேற்ற உயர்ந்ததோர் ஊதியம்;

 

நெய்தல் நில நாயகம்!

நெடுநாட்கள் கூட, நின் மீன்பிடி படகு ஆழ்கடலில் தங்கும்;

உன் வாழ்வில்,

தினம் நிகழும் பல போராட்டம்,

இனியாவது நாளும் வீசட்டும் வசந்தம்;

 

இயந்திரங்கள் வந்த பின்னும்

உனதிருகைகள் நெசவு செய்யும்;

உனதுழைப்பு ஆடையாய் எங்களுடல் தழுவி, மானம் காக்கும்;

உனதுழைப்பை உறிஞ்சும் போக்கு ஒழியட்டும்,உன் வாழ்வில் இனி வண்ணங்கள் மிளிரட்டும்;

 

கட்டிடத்தொழில் செய்வோர்தம் உழைப்பெனும் பலமான அஸ்திவாரம்-அது, நாம் வசிப்பதற்கு நல்குதே நல்லதோர் உறைவிடம்;

உம் உழைப்பெனும் தூலியில் அனைவருக்கும்  கிட்டும் தூக்கம்;

உம் தினக்கூலி உயர்ந்து

பகலவன் கண்ட பனி போல், விலகட்டும் உமது துயரம்.

 

உணவு உடை உறைவிடம்,

நம் வாழ்வில் வேறென்ன வேண்டும்;

வாழ்வின் மிகக்கடின காலங்கள் 

இதை நமக்கு நன்றாகவே உணர்த்தும்;

 

உலகிற்கு அடிப்படைத் தேவை நல்கும் 

உங்கள் வாழ்வில் விலகட்டும் துயரம்;

இனி உங்கள் வாழ்வு, 

ஏற்றம் காண வேண்டும்

அந்த இமயத்தின் உயரம்;

 

உண்மையாய் உழைக்கும் மக்கள் யாவரது வாழ்விலும்,

மடியட்டும் துயரம்;

இனி அவர்கள் வாழ்வு

அடையட்டும்

புதியதோர் சிகரம். 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.