(Reading time: 8 - 15 minutes)

  கரையில் இருந்து பார்த்ததைவிட அன்று நடுக்கடலில் இருந்து பார்த்த போது, சிவந்த சூரியன், மேகங்களோடு கடலுக்குள் விழப்போகிறது என்று தோன்றுமளவுக்கு நீலக்கடலில்,ஒரு மாலை பொழுதில் படகில் இருந்த நங்கூரத்தை கடலில் இறக்கிவிட்டு, மீன்வலைகளை தண்ணீரில் வீசத் தொடங்கினோம். 

இதுவரை அமைதியாகவே இருந்த கடலம்மா. அவளின் மற்றொரு முகத்தை காண்பிக்க ஆரம்பித்தாள். 

மிதமான காற்றும், சாரல் மழையும் தொடங்கியது. நனைந்திடக் கூடாது என்ற எண்ணத்தில் தலையில் கோணிச்சாக்கை போட்டுக்கொண்டு குன்னியபடி படகில் உட்கார்ந்திருந்தோம். 

வலைகள் வீசியதால் பசி வயிற்றை கில்லியது. அந்த சாரல் மழையில் தூக்குச்சட்டியில் இருந்த பழைய சோறும், வறுத்த நெத்திலி மீன் குழம்பின் சுவையும் இன்னும் நாக்கில் ஊரிக்கொண்டிருக்கிறது. 

காற்றின் வேகம் அதிகரித்ததும், பெரிய புயல் வருகின்ற மாதிரி இருக்கு அந்தோனி. நாம கரைக்கு திரும்பலாமென்று மச்சக்காளை அண்ணனும், வெள்ளச்சாமி சித்தப்பாவும் கூறினார்கள். 

 அதெல்லாம் சிறிது நேரத்தில காற்று நின்றுவிடும்,இன்னும் 4-நாட்களில் கிறிஸ்மஸ் பண்டிகை வருது,மீன்களுக்கு அதிகமான கிராக்கி இருக்குமென்று ஆசை வார்த்தைகள் கூறி அவர்களை படகிலே அமைதியாக உட்காரச் செய்தேன். 

தோராயமாக மணி ஒரு ஏழு இருக்கும். அடைமழை ஆக்ரோஷமாக தொடங்கியது. காற்று படகை சுழற்றி அடித்தது. நங்கூரமும் ஆழமாக பதியவில்லை.கடலில், தலையாட்டி பொம்மையாக படகு காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. ராட்சத அலைகளும் காரணம் தெரியாமல் படகை ஓங்கி அடித்துக் கொண்டிருந்தது. 

பெரிய புயலாக மாறிவிடுமோ என்று, மனதிற்குள் பயமும், பதட்டமும் அதிகமானது. 

சரி சித்தப்பா.... இனி வலைகளை இழுத்து படகில் ஏத்துங்க, நாம கரைக்கு திரும்பலாமென்று ஐலேசா...ஓ...ஐலேசா... என்ற ராகத்தை பாடியபடியே வலைகளை இழுக்கும் போது, காற்றில் வலை அறுந்து கடலோடு கரைந்து போனது.

சின்னச் சின்ன பொடி மீன்கள் மட்டும் படகில் துள்ளிக்குதித்தது.

உயிர் பிழைத்தால் போதுமென்ற எண்ணத்தில் துடுப்பை இறக்கி படகை வேகமாக செலுத்தினோம்.

எதிர் காற்றின் வேகத்தால் படகு நகரவே இல்லை. கடலின் ராட்சத அலைகள் படகை மீண்டும் கடலுக்குள் இழுத்துச் சென்றது.

இங்கிருந்து 2 மயில் தூரமான நீத்ராணி மலைத் தீவுக்கு, சென்றுவிட்டால், புயலுக்கு ஒதுங்கலாமென்று மச்சக்காளை அண்ணன் கூறியதும்,வேகமாக துடுப்பு போட்டோம். அலைகளின் சத்தம் காதை கிலித்தது.

தீவு வந்ததும் நங்கூரத்தை இறக்கிவிட்டு,லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு தீவிற்குள் ஓடினோம். 

அங்கு தென்னங்கீற்றும், மரப்பட்டைகளும், இளநீர்களும் காற்றில் பரந்து கொண்டிருந்தன. 

அங்குள்ள பெரிய பாறைக்கு நடுவே சென்ற சிறிய குகைக்குள் ஓடி ஒளிந்தோம். 

எங்கள் லுங்கிகளிலும், சட்டைகளிலுமிருந்து பிழிந்த தண்ணீர் ஒரு பக்கம் ஆறாக ஓடியது.

தீப்பெட்டி குச்சிகள் நனைந்து பதத்துக்கு போனது.

வெளியில் இருப்பதைவிட குகைக்குள் கதகதப்பாக இருந்தாலும், மழையும், காற்றும் ஓயவில்லை.

குகைக்குள்ளே சிதறிக்கிடந்த வழுக்கை தேங்காய் களையும், இளநீர்களையும் கீறிட்டு உண்டு உறங்கினோம்.

மாலையில் காற்றில் ஈரப்பதம் குறைந்திருந்தது.

சூரியன்,பட்டும் படாமலும் கடலில் எட்டிப்பார்த்தான். நாங்களும் குகையைவிட்டு வெளியே வந்து பார்த்தோம்.அங்கு தீவு முழுவதும் கடல் நீர் சூழ்ந்திருந்தது.

மரங்களும்,விலங்குகளும் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தன.

எங்கள் படகும், காற்றின் வேகத்தால் நொருங்கிச் சிதறிக் கிடந்தது. 

தீவை,இப்படி சேதப்படுத்திய கடலம்மா! நம்ம தனுஷ்கோடியை என்ன பன்னாலோ என்று சித்தப்பா கூறியதும், என்னோட பூமயிலுக்கும், எம் மகனுக்கும் என்ன ஆனதோ என்று நெஞ்சு படபடத்தது. 

தீவில் இருந்த தென்னை மட்டைகளை வைத்தும் பிற மரங்களில் இருந்தும் கட்டிய பாய்மரம்,நீரில் நன்றாக மிதந்தது.பாய்மரத்தை வேகமாக ஊரை நோக்கி செலுத்தினோம்.

துடுப்பை ஒவ்வொரு தடவை போடும்பொழுது பூமயிலும், மகனும் நினைவில் தோன்றி மறைந்தார்கள். 

கடலிலிருந்து பார்த்த போது தூரத்திலுள்ள கலங்கரைவிளக்கமும் தெரியவில்லை,தேவாலயமும் தெரியவில்லை.

பதட்டம் அதிகமானது தனுஷ்கோடியை நெருங்கும் போது கிழிந்த காய்த கப்பல்களாக எங்க ஜனங்களுடைய படகுகள் உடைந்து மிதந்தது.

படகுகளுடன் சேர்ந்து மரங்கள், வீட்டு கற்கள், சடலங்களும் மிதந்தன. 

கரையை அடைந்ததும் ஊருக்குள் வேகமாக ஓடினோம். அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ்காரர்கள் எங்களை தடுத்து நிறுத்தினார்கள். 

ஐயா, எங்க குடும்பத்துக்கு என்ன ஆனதென்று தெரியவில்லையா என்று அழுதுகொண்டே கூறினோம். 

சரி.. சரி... குடும்பத்தினர் பெயரையும், வயதையும் சொல்லுங்கள் என்று ஒரு கட்டை நோட்டில் எழுதிவிட்டு மெளனமாக கிளம்பினார்கள் அந்த போலீஸ்காரர்கள். 

பின் வேகமாக சென்று எங்கள் வீட்டை பார்த்த போது, கடல்நீரும்,சகதிகலும் மட்டுமே சூழ்ந்திருந்ததே தவிர, வீடு இருந்ததற்கான அடையாலமே இல்லை. 

அக்கம் பக்கத்தில், உயிர்தப்பிய எங்களுடைய ஜனங்கள் மட்டுமே நின்று அழுது கொண்டிருந்தார்கள்.சிலர் நீரில் மிதந்து கொண்டிருந்தனர். 

ஒரு போலிஸ்காரரிடம் சிமித் விளக்கை வாங்கிக்கொண்டு ஊர் முழுவதும் தேடினேன்.

ஊரின் பெரிய கட்டிடமான தேவாலயமே இடிந்து கிடந்ததை பார்த்தவுடன் என் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. 

 பூமயிலும்,எம் மகனுமாக கூடாதென்று மிதக்கும் பிணங்களை எல்லாம் திருப்பி பார்த்தேன். 

எங்கு சென்றார்கள் என்பதே தெரியவில்லை. 

இரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று பார்த்த போது அங்கு இந்தோ-சிலோன் விரைவு ரயிலே கவிழ்ந்து,வெரும் இரும்பு ரோதைகள் மட்டும் தண்டவாளத்தில் நொருங்கி கிடந்தது. 

குஜராத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற 120-சுற்றுலா பயணிகளும் இரந்துவிட்டார்கள் என்று கணக்கு நோட்டில் எழுதினார் ஒரு போலீஸ்காரர். 

அருகிலிருந்த போலிஸ் ஏட்டையா-சிலரை அலைகள் கடலுக்குள் இழுத்துச் சென்று விட்டது நாளைக்கு நம்முடைய கப்பற்படை கடலுக்கு போறாங்க அதில் உன் குடும்பம் இருந்தாலும் இருக்கும் என்றவுடன்,உலகமே இருண்டு,தலை சுற்றியது.

 அழுதுகொண்டே நடந்து செல்லும் போது கடலோரங்களில் இருந்த சடலங்கள் மீது கடல் நண்டுகளும்,ஆமைகளும் சடலங்களைக் கடித்தும்,ஊரிக்கொண்டும் இருந்தது. 

அன்று,எங்கள் ஊர் ஜனங்கள் இரவு தங்குவதற்காக இராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபத்தில் இடம் கொடுத்தது அரசாங்கம். 

ஜனங்களோடு மண்டபத்தில் அழுதுகொண்டு உட்கார்ந்திருந்த போது மறுநாள் காலையில் தமிழக முதல்வர் பக்தவத்சலம் வருவதாக கூட்டத்தில் பேச்சு அடிபட்டது. உப்புக்கண்ணீருடன் உறங்கிக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது என்னை யாரோ தொட்டு கூப்பிடுவது போல் இருந்தது.

கண் விழித்து பார்த்த போது, என்னுடைய நாய்க்குட்டி மணி என் நெற்றியில் இருந்து வடியும் ரத்தக் காயத்தை சுவைத்துக் கொண்டிருந்தான். 

கண்ணீருடன் அவனுக்கு முத்தம் கொடுக்கும் போது, பூமயிலும், எம் மகனும் தூரத்திலிருந்து என்னை நோக்கி ஓடி வந்தார்கள். 

இருவரையும் கட்டித் தழுவினேன். மகனின் கண்ணத்தில் எச்சில் படுமளவுக்கு முத்தம் கொடுத்தேன். 

பூமயிலு- நானும் ஊர் முழுவதும் உங்களைத் தேடினேன் எங்கே இருந்தீங்க?

கண்ணீருடன்.....நேற்று சாயங்காலம் நம்ம தனுஷ்கோடிக்கு நடிகர் ஜெமினி கணேசனும், சாவித்திரியும் நீராடுவதற்காக வந்திருந்தாங்க அப்பவே காற்று அதிகமாக வீசியதால் கொஞ்ச நேரத்திலேயே இராமேஸ்வரம் கிளம்பிட்டாங்க. 

அவங்கல பார்பதற்காக நம்ம ஜனமெல்லாம் லாரில இராமேஸ்வரம் கிளம்புனாங்க அவுங்களோட நாங்களும் புறப்பட்டோம்.

அப்புறம் எட்டு மணி போல ரேடியோவில் தனுஷ்கோடியை பெரிய புயல் தாக்கிய செய்தி கேட்டதும்,எனக்கு மிகவும் பயமாக இருந்தது. நீங்க நலமுடன் திரும்பி கரைக்கு வரவேண்டுமென்று சிவன் கோயில் வாசலிலேயே வேண்டிக்கிட்டு உட்கார்ந்திருந்தோம். 

அப்போதுதான் போலீஸ்காரர்கள் தனுஷ்கோடியில் இருந்த மக்களை மண்டபத்தில் தங்க வைத்திருப்பது தெரிந்தது அப்புறம் இங்கே பிள்ளையை தூக்கிக்கிட்டு ஓடி வந்துட்டேன். 

கண்ணீரோடு...அந்தக் கடவுள்தான் நம்மை காப்பாற்றியிருக்காரு என்று உயிர் பிழைத்த எங்கள் ஜனங்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு ஆறுதல் கூறிக்கொண்டோம். 

உடுத்த துணையில்லாமலும், கோவில்களில் வாங்கிச் சாப்பிட்டதையும் இப்போது நினைத்தால் கூட உசுரு ரனமா வலிக்கிறது. 

சில நாட்கள் கழித்து தனுஷ்கோடியில் இருந்த மக்களுக்கு நடராஜபுரத்தில் வாழ்வதற்கு இடம் ஒதுக்கியது அரசாங்கம்.

தனுஷ்கோடியை மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடமாகவும் அறிவித்தது. கடல்தாய் மடியில் தவழ்ந்து வாழ்ந்த எங்களால் ரொம்ப நாட்கள் நடராஜபுரத்தில் வாழ முடியவில்லை. 

மீன் பிடித்தும், சிப்பிகள் பிறக்கி விற்றும் வருகின்ற வருமானத்தில் தான் எங்களுடைய வயிற்றை கழுவிகிட்டு இருக்கோம். 

கூலோ,கஞ்சியோ எதையாவது குடித்து வாழும் எங்களை கடலம்மா எப்போதும் கைவிடமாட்டா.

இப்போது தனுஷ்கோடிக்கு சுற்றுலா வருகின்ற மக்களிடம் கூட, நாங்கள் வாழ்ந்து மடிந்த, மறைந்த அழகான தனுஷ்கோடியின் பெருமையை கூறிக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால் இப்பொழுது இங்கே எலும்புக்கூடுகளாக வீடுகளும், உப்புக்காற்று மட்டுமே புயலின் எச்சமாக உள்ளது. 

1964-ல் ஏற்பட்ட சுனாமி பேரிழப்பு இனி ஏற்படக் கூடாதென்று ஒவ்வொரு மாதமும் இராமேஸ்வரத்துக்குச் சென்று பிரதோஷநாளன்று சிவபெருமானுக்கு விளக்கேற்றுவோம். 

ஒவ்வொரு வருடமும் டிசம்பர்-22ஆம் தேதி எங்கள் ஊர் ஜனங்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்லமாட்டோம்.

அன்றிரவு எல்லாரும் வீட்டு விளக்கை அணைத்துவிட்டு, அனைவரும் ஒரு சிமிளி விளக்கை கையிலேந்தி கடலம்மாவை பார்த்தபடியே இறந்த முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, கரையில் நின்றுகொண்டு புயலுக்கு முன்பு வாழ்ந்த வாழ்க்கையை அசை போட்டுக் கொண்டே பழைய நினைவுகளை கண்ணீருடன் கடலில் கரைத்துவிடுவோம். 

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.