(Reading time: 11 - 21 minutes)

 

கதிரவன் தன் பொன்னிற ஒளியையும், கதகதப்பையும் கொடுத்து அழகாய் காலை வணக்கத்தை அனைவருக்கும் சொல்லிக்கொண்டிருந்தான். அகல்யாவோ தன் கணவரை எழுப்பி காபி கொடுத்துவிட்டு ப்ரியாவின் அறையில் அவளுக்கென காபி கோப்பையோடு நின்றிருந்தார். கால்களை குறுக்கி ஒரு கையால் அணைத்தபடி தலையணை இருந்தும் தன் ஒரு கையை மடக்கி அதன் மேல் தலையை வைத்து ஒரு குழந்தையை போல உறங்கிக்கொண்டிருக்கும் அவளை காணும்பொழுதே அந்த தாயுள்ளத்தில் அன்பு அலையலையாய் பொங்கியது. 

 

ப்ரியாவின் அருகில் அமர்ந்தவர், அவளது தலையை மெல்ல வருட அவரது மடியிலே தலையை வாகாய் வைத்து கொண்டாள். "ப்ரியா......" மெல்ல அவளுக்குமே கேட்டது அந்த குரல்.... "எழுந்திரு மா....." என்று தலையை வருடியபடியே அகல்யா பேச "இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்குறேன் மா....... நைட்டு லேட்டா தான் தூங்குனேன்" என்று ஏதோ கனவு காண்பதாய் நினைத்து அவள் பேசிக்கொண்டிருக்க..... "இன்னைக்கு வீட்டுல பூஜை இருக்கு டா... எழுந்திரு" என்று அவளது கன்னத்தை தட்ட, வீடு, பூஜை என்ற வார்த்தைகள் அவள் கனவிலும் புதிதாய் தெரிய கண்விழித்தாள். 

 

சுற்றி முற்றி பார்த்தவள் தான் எங்கு இருக்கிறோம் என்று உணர்ந்து சட்டென எழுந்து அமர்ந்தாள். தன் அருகில் இருந்த அகல்யாவை பார்த்தவள் "இது கனவு இல்லையா..... நிஜத்துலே நடந்ததா....." என்று மனதின் ஒரு புறம் மகிழ்ச்சி பொங்க "சாரி மா.... நான் ஏதோ கனவுனு நினைச்சு பேசிட்டேன் போல....." என்று மன்னிப்பு கோர "நீ சாரி கேக்குற அளவுக்கு இங்க ஒண்ணுமே நடக்கல டா..... இந்தா இந்த காபி குடி" என்று அருகில் இருந்த கோப்பையை நீட்டினார் அகல்யா. 

 

"மா நானே எழுந்து வந்திருப்பேன்.... கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன். நீங்க ஏன் எனக்காக இதெல்லாம் செய்யுறீங்க மா???" உறவினனாய் வந்தவள் உதவியாக இல்லாவிடினும் உபத்திரவமாக இருந்துவிட்டோமோ என்று சங்கடமாய் கேட்டாள் ப்ரியா. "வீட்டுக்கு வந்தவர்களை முறையா கவனிக்குறது தான் நம்ம வழக்கம் டா....." என்று அவளது பயம் தேவையில்லாதது என்பதாய் அகல்யாவும் பேச சற்றே நிம்மதியானாள். 

 

அவள் எதையோ கேட்க நினைப்பதாய் அகல்யாவிற்கு தோன்ற "என்ன ப்ரியா???" என்று கேட்டேவிட்டார். "இல்ல நான் உங்களை அம்மானு கூப்பிடலாமா????" என்று தயக்கமாய் அவரை ஏறிட.... அகல்யாவோ யோசிப்பது போல தன் முகத்தை வைத்துக்கொண்டார். அதற்குள் ப்ரியாவோ "அச்சோ நாம ஏன் இவங்க கிட்ட இப்படி கேட்டோம்... ஏதாவது தப்பா நினைச்சு இருப்பாங்களோ???" என்று பலமுறை தன்னுள்ளே கேட்டுக்கொண்டாள். 

 

அகல்யாவும் என்னை அம்மானு கூப்பிட ஒன்னு இல்ல நாலு பிள்ளைங்க இருக்காங்க அதுல ஐந்தாவது பிள்ளையா நீ இருக்குறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல இதை அவர் கூறும்பொழுது ப்ரியாவின் முகத்தில் இருந்த பிரகாசத்தை உணர்ந்த்தே இருந்தார். ஆனா நீ என்னை அத்தைனு கூப்பிட்டா எனக்கு இன்னும் ரொம்ப பிடிக்கும் என்று அவள் நாடியை பிடித்து அகல்யா ஆட்ட.... "இவங்க ஏன் இப்படி சொல்றாங்க????" என்று சிறிது நேரம் புரியாமல் விழித்தாள் பிரியா. அவள் முழிப்பதை கண்ட அகல்யாவோ "என்ன கூப்பிடுவ தான??" என்று கேட்க ப்ரியாவோ நாலாபுறமும் தலையை ஆட்டி வைத்தாள். அவளின் செய்கையால் அகல்யாவின் முகத்தில் புன்னகை பெரிதாய் விரிய "காபி குடி" என்று மட்டும் சொல்லிவிட்டு சமையலறை சென்றுவிட்டார். 

 

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.