(Reading time: 12 - 23 minutes)

சில கண்ணீர் துளிகள்

 

SilaKaneerThuligal copy

அந்த மல்டிப்ளக்ஸ் ஷாப்பிங் மாலில் ஒரு காபி ஷாப்பின் வெளியே  இருந்த மேஜையில் தலைபுதைத்துப் படுத்திருந்தாள் ரம்யா. அவள் அழுகிறாள் என்பது அவளின் முதுகின் அசைவில் தெரிந்தது. யாரும் அவளைக் கண்டுகொள்ளப் போவதில்லை. எனினும் ஆறுதல் தேடி அவள் அழவில்லை. இறுதியாக இதே இடத்தில் தினேஷுடன் வந்து ஒரு திரைப்படம் பார்த்திருந்தாள். அதன் பின்னர் பிரிவு தான். அவனின் நினைவுகள் அலைமோதவும் கண்ணீர் பெருக்கெடுக்க, அழ ஆரம்பித்தவள் அழுதுகொண்டே இருந்தாள்.

திடீரென ஒரு கரம் முதுகைத் தொடவும் திடுக்கிட்டு நிமிர்ந்தாள், அவளைத் தொட்டது ஒரு பெண், கொஞ்சம் ரம்யாவின் சாயலில் இருந்த அப்பெண்ணுக்கு வயதும் ரம்யாவின் வயதே இருக்கலாம். “எக்ஸ்கியூஸ் மீ! இங்கே யாரும் வராங்களா? நான் உக்கார்ந்துக்கலாமா?” எனக் கேட்கவும், “ம்!” எனத் தலையசைத்தாள். “நீங்க தப்பா நினைக்காட்டி ஒன்னு கேட்கலாமா? நானும் உங்களைக் கொஞ்ச நேரமா பார்த்துட்டுத் தான் இருக்கேன்! அழுதுட்டே இருக்கீங்க! உங்களுக்கு எதாச்சும் ஹெல்ப் வேணுமா?” அப்பெண் கனிவுடன் கேட்க, “ஒண்ணுமில்ல, கேட்டதுக்கு தேங்க்ஸ்!” என்ற ரம்யாவிடம் தொடர்ந்து, “சரி, எனக்காக என்கூட ஒரு காபி சாப்பிடுங்க!“ என்றவள் எழுந்து போய், சூடாக இரண்டு காபிகளை ஆர்டர் செய்து கொண்டு வரச்செய்ய,  காபியைக் குடிக்கவும் ரம்யாவின் கொஞ்சம் முகம் தெளிந்தது.

“என்னோட பேர் மெர்லின். நான் இங்கே மாலில் ஐஇஎல்டிஎஸ் எக்ஸாம் எழுதறதுக்கான கோர்ஸ் படிக்க வருவேன். இதே டேபிளில் உக்கார்ந்து தான் டெய்லி காபி சாப்பிடுவேன். நீங்க இங்கே உக்கார்ந்து அழவும் என்னவோ போலிருந்தது! அதான் வந்தேன்! தொல்லையா நினைச்சா எழுந்து போயிடறேன்! இல்லைன்னா!” என்றவளிடம், “ஹாய்  மெர்லின், என்னோட பேரு ரம்யா. நான் ரொம்ப வருடம் கழிச்சு இந்த மாலுக்கு வந்திருக்கேன். இங்கே நான் அழுதிட்டு இருந்தத சுற்றிலும் யாருமே கண்டுக்கல, இத்தனை பேர் மத்தியில நீங்க மட்டும் எனக்காக வந்ததுக்கும், இந்த காபிக்கும் நன்றி. நீங்க இங்கே உக்கார்ந்து என்னோட காபி சாப்பிடுங்க!” என்றாள் ரம்யா. “ரம்யா! உங்களுக்கு சொல்றதுல ஆட்சேபம் இல்லைனா ஏன் அழுதீங்கன்னு என் கிட்ட சொல்லலாமே!உங்களுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்!” மெர்லின் கேட்கவும், சின்ன விசும்பலுடன், “என்னோட தொலைந்த காதல் நினைவுக்கு வந்ததால் அழுதேன்!” என்றாள் ரம்யா.

“தொலைந்த காதலா?” மெர்லின் கேட்க,

“ஆமா நான் தான் தொலைச்சிட்டேன். என் மேல பைத்தியமா இருந்த தினேஷை ஒரு நொடியில் உதறித் தள்ளிட்டு என் வாழ்க்கையை மாத்திக்கிட்டேன். தினேஷ் என்ற பெயர் மெர்லினிடம் சின்ன சலனத்தை உண்டு பண்ணவும், ஆவல் அதிகமான குரலில், “ஏன்? என்னாச்சு?”  என்று கேட்டாள்.

“நான் சென்னையில் வேலை பார்த்துட்டு இருந்தேன். தினேஷும் தான். எங்க குடும்பத்தில் வந்த ஒரு பிரச்சனை என் வாழ்க்கையையே மாற்றிடுச்சு. கல்லூரியில் தான் நானும் தினேஷும் சந்திச்சோம். உயிருக்கு உயிரான்னு சொன்னா வழக்கமான ஒன்னு தான், வித்தியாசங்கள் எதையும் கண்டுக்காம ஒருவரையொருவர் மனதார விரும்பின எங்க காதலுக்கு முதல் தடை ஜாதி, அடுத்த தடை வீட்டில் நடந்தஒரு பிரச்சினை, அதைத் தொடர்ந்து வந்த வற்புறுத்தல், குடும்பத்தில் இருந்தவங்க மேல நான் வச்சிருந்த பாசத்தையே எனக்கெதிரான  ஒரு ஆயுதமாப் பயன்படுத்தி என்னைப் பணிய வைக்கிறதுன்னு என்னோட காதலை நான் விடணும்னு ஒரு கட்டாயத்தில் தள்ளிட்டாங்க. நானும் அவனை விட்டு விலக ஆரம்பிச்சேன். பேசல. பார்க்கல. எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான். என்ன அவனை செஞ்சாலும் திட்டினாலும் துளி கூட என்னை வெறுக்கல.  ஆனாலும் அவன்கிட்ட பேசுறதை நிறுத்தினேன். மூச்சு விடுறதே அவனுக்காகத் தான் வாழ்ந்துட்டு இருந்தேன். செத்திடுவேன்னு தான் நினைச்சேன். ஆனால் விதி வேற மாதிரி இருந்தது.” தொடர்ந்து பேசிய ரம்யா, ஒரு நிமிட ஓய்வெடுக்க,

“ரொம்ப கஷ்டமா இருக்கு ரம்யா!” அப்புறம் என்ன பண்ணீங்க?”

“பிரிஞ்சாலும் அவனோட நினைப்பு தான் எப்பவும் இருக்கும். எதாச்சும் ஒரு மாயம் நடந்து வீட்டிலேயே எங்களைச் சேர்த்து வச்சுட மாட்டாங்களான்னு தோணும். அப்டில்லாம் எதுவும் நடக்கல. எனக்கு எப்பவும் கல்யாணமே வேண்டாம் உங்களோடவே வாழ்க்கை முழுசும் இருந்திர்றேன்னு அப்பா,அம்மாகிட்ட அழுதிருக்கேன். அப்படிலாம் நான் சொல்லக் கூடாதுன்னு எனக்கு வரன் தேடிட்டே இருப்பாங்க. எந்த வரனும் அமையக் கூடாது, அப்படி பொருந்தி வந்து என்னைப் பார்க்க வந்தால், அவங்களுக்கு என்னைப் பிடிக்கக் கூடாதுன்னு தான் நினைச்சுப்பேன்.  அப்படியே வாழ்க்கை போய்ட்டு இருந்தது! என்னால திரும்ப ஒரு சந்தோஷமான வாழ்க்கையை வாழமுடியும்னு நம்பிக்கையே இல்ல. அவன் மனசை உடைச்சா குற்றஉணர்வு என்னை அணுஅணுவாக் கொன்னுட்டே இருந்தது. பைத்தியம் பிடிக்காத குறைதான்! தற்கொலை பண்ற அளவுலாம் போகலைனாலும் உணர்ச்சியில்லாத ஒரு உடலாத் தான் இந்த உலகத்தில் இருந்தேன் அந்த சமயத்தில்!”

ஆறுதலாக அவளின் கரங்களைத் தொட்டாள் மெர்லின். அவளின் கரங்கள் மீது தனது கரத்தை வைத்தவாறு மேலும் பேசினாள் ரம்யா. அவள் கொட்டித் தீர்க்க வேண்டியதெல்லாம் மெர்லின் கேட்க வேண்டியதாயிற்று. “என்னோட காதல் இழப்பில இருந்து மீண்டு வர என்னோட தோழிகள் உண்மையிலேயே என்னை மீட்டெடுக்க ரொம்ப போராடினாங்க!” ரம்யா சொல்லவும், “பிரெண்ட்ஸ்னா அப்படித்தான்!” என்ற மெர்லினிடம், “ஆமா, உண்மைதான்! அவங்களுக்கு அதிக அக்கறை இருந்தது. என்னோடு தங்கியிருந்த ஒரு தோழி, ஷாப்பிங், பார்லர், சினிமான்னு கூட்டிட்டுப் போவாங்க. ஆனால் அதில் என் மனம் ஈடுபடவே படாது. இன்னொரு தோழி, ஒரு அறக்கட்டளை மூலம் நடக்கிற சிறப்புக் குழந்தைகள் இல்லத்துக்குக் கூட்டிட்டு போவாங்க. அந்த குழந்தைகளோட இருந்தால் நேரம் போறதே தெரியாது. அங்கே காலையில் இருந்து சாயந்திரம் வரை படிப்பு, விளையாட்டு, சாப்பாடுன்னு அவங்களோடவே நேரத்தைக் கழிப்போம்.  அப்புறம் ஒரு கோவில் தான் மனசைக் கொஞ்சமாவது அமைதிப்படுத்துச்சு. ஒவ்வொரு ஞாயிறும் அதிகாலையில் எழுந்து குளிச்சு, அபிஷேகத்துக்குப் பால் வாங்கிட்டு, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலுக்குப் போயிடுவேன். கோவிலில் அபிஷேகம் பார்த்து சாமி தரிசனம் பண்ணிட்டு, கொஞ்சம் நேரம் அங்கேயே உக்கார்ந்து இருப்பேன். அப்புறம், பக்கத்துல மார்க்கெட்ல மதியம் சமைக்க காய்கறி வாங்கிட்டுப் போவேன். என்கூட தங்கியிருந்த தோழிகள் பிரமாதமா சமைப்பாங்க. டிவில எதாச்சும் படம் பார்த்துட்டே வேலை செய்வோம். நான்  மனதை வருத்தி தனியா அழவோ, இல்லை உடலை வருத்தி, சாப்பிடாம இருக்கவோ என்னை விடவே மாட்டாங்க, எல்லாம் சரியாகிடும்ன்னு சமாதானம் சொல்லிட்டே இருப்பாங்க. காலேஜ்ல கூடப் படிச்ச அண்ணா மனநிம்மதிக்காக சாய்பாபா கோவிலுக்குப் போகச் சொல்வாங்க. அங்கேயும் போனதுண்டு. அப்படியே ரோபோ மாதிரி வேலைக்குப் போய்ட்டு வந்துட்டு இருப்பேன். மாசம் ஒரு தடவை ஊருக்குப் போவேன். அம்மா, அப்பா வரன் பார்க்கிற விவரத்தை சொல்லுவாங்க. அப்படி போனப்ப தான் மேட்ரிமோனில என்னோட கணவரின் ப்ரோபைல் விவரத்தைக் காட்டினாங்க. அம்மாவும் அப்பாவும் என்ன முடிவு பண்ணாலும் சம்மதம்னு சொல்லிட்டேன். அவருக்கு என்னைப் பார்த்ததும் புடிச்சிருச்சு. எங்க கல்யாணம் முடிஞ்சது. அப்புறம் நானும் அவரும் மட்டும் தான். நிறைய நாள் அழுதிட்டே அம்மா வீட்டுக்குப் போறேன்னு என் கணவர்கிட்ட சொல்வேன். நிறைய சண்டையும் போடுவோம். ஆனாலும் அவர் அன்பானவர், என்னை ரொம்ப நல்லாப் பார்த்துக்கணும்னு நினைப்பாரு. குழந்தையை சமாதானப்படுத்திற மாதிரி சாக்லேட், ஐஸ்க்ரீம்னு வாங்கித் தந்திட்டு இருப்பாரு. எனக்கு பொம்மைகள் புடிக்கும்னு, விதவிதமா பொம்மைகளை வாங்கிக் கொண்டு வந்து தருவாரு. எனக்குப் புடிச்சதைச் செய்யணும்னு ரொம்ப மெனக்கெடுவார். உனக்குக் கடந்த காலத்துக்குக் காயங்களோ தழும்புகளோ இருந்தால் அதுக்கு மருந்திடறதை செஞ்சுக்கோ. உன்னோட கடந்த காலம் பற்றித் துளியும் எனக்குக் கவலையில்ல, என்னோட நீ வாழப்போற எதிர்காலம் தான் முக்கியம். அதுல நீயும் நானும் எப்படி இருக்கப்போறோம் என்பது தான் என்னோட அக்கறைன்னு சொன்னார். முதல் இரண்டு வருஷம் அடிக்கடி சண்டை போட்டுட்டு இருந்தோம்.  மனவேற்றுமைகள் தான் அதிகம். நான் வேலையை விட்டு நின்னுட்டேன். என் கணவரும் நானும் நேரங்கள் அதிகமாக செலவிடத் தொடங்கவும் தான் எங்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமா புரிதல் வந்தது. அப்புறம் குழந்தை. இப்போ பையனுக்கு ஒன்பது வயசு. இரண்டு பேரும் தான் உள்ளே அனிமேஷன் படம் பார்த்துட்டு இருக்காங்க. எனக்குப் படம் பார்க்க ஆர்வமில்லன்னு தான் இங்கேயே உக்கார்ந்து இருந்தேன். இதே இடத்தில தான் நானும் தினேஷும்  முதலும் கடைசியுமா ஒரே ஒரு திரைப்படம் பார்த்தோம். எப்போ நாங்க ஐஸ்கிரீம் சாப்பிட்டாலும் அவன்கூட நான் ஷேர் பண்ணிப்பேன். கடைசி தடவையா மீட் பண்ணப்போ கூட ஐஸ்க்ரீம் தான் சாப்பிட்டோம். என்னைப் பார்த்து நாம ஷேர் பண்ணிக்கலாமான்னு கண்லயே கேட்டான். நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். இப்போ ஐஸ்க்ரீம் சாபிட்டாலும் கூட நான் என் கணவரோடவோ, மகன் கூடவோ ஐஸ்க்ரீம் ஷேர் பண்ணதேயில்ல. இதோ இந்த டேபிளில் இருந்த ஐஸ்க்ரீம் மெனுவைப் பார்த்ததும் அங்கே ஆரம்பிச்ச பழைய நினைவுகள் தான் எங்கள் காதல் வாழ்க்கையையும் பிரிவையும் நினைவுபடுத்த அழுகை வந்தது!” இவ்வளவையும் சொல்லிமுடித்த ரம்யாவை வியப்புடன் பார்த்த மெர்லின், பன்னிரண்டு வருஷம் கழிச்சா இப்படி கல்லூரிக் காதலை நினைச்சு அழுதிட்டு இருக்கீங்க. பன்னிரண்டு வருடம் போனா என்ன, பல்லாயிரம் வருடம் போனாலும், காதல் காதல் தானே,!” என்று சொன்னவள், “என்னைப் பற்றியே பேசிட்டு இருந்துட்டேன். உங்களுக்கு எத்தனை குழந்தைகள் மெர்லின், உங்கள் திருமணம் எப்படி? என்று ரம்யா கேட்கவும். “எங்கள் திருமணம் காதல் திருமணம் தான், ஜாதி, மதம் எல்லாமே தடையா நின்னுச்சு. எல்லாத்தையும் தூக்கிப்போட்டு என் மனசுக்குப் புடிச்சவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். பதினோரு வயசில் எங்களுக்கும் ஒரு பையன் இருக்கான்! நான் வெளிநாடு போக முயற்சி பண்ணிட்டு இருக்கிறதால் ஐஇஎல்டிஎஸ் கிளாஸ் வர்றேன்!” மெர்லின் சொல்லவும், “உங்களை மாதிரி எனக்குத் தைரியம் எனக்கு இருந்திருக்கணும்! ஆனால் மிஸ் பண்ணிட்டேன்! நீங்க ஆசைப்படுற மாதிரி வெளிநாடு போகும் உங்க முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்! கை குலுக்க நீட்டிய ரம்யாவிடம் கரங்களை நீட்டினாள் மெர்லின். “இதெல்லாம் மறந்துட்டு எப்பவும் நிம்மதியா இருங்க ரம்யா!” என்று மெர்லின் சொல்ல, “முழுவதுமா மறக்க முடியுமான்னு தெரியல! நினைவுகள் அவ்வளவு எளிதா மனசைவிட்டுப் போறதில்ல“ என்ற ரம்யா, “மெர்லின், நாங்க அமெரிக்கால இருக்கோம், இங்கே ஹாலிடேஸுக்குத் தான் வந்தோம். இப்போ நாங்களே கெஸ்ட்டா தான் இங்கிருக்கோம். இல்லாட்டி உங்களை வீட்டுக்குக் கூப்பிட்டுடுவேன். நீங்க அமெரிக்கா வந்தா எங்க வீட்டுக்கு வரணும்! என்றாள் ரம்யா. “அமெரிக்காவா? நாங்களா?”, என்று சிரித்த மெர்லின், “நான் யுகே தான் போக ட்ரை பண்ணிட்டு இருக்கேன்!” என்றாள்.

“மெர்லின் உங்ககிட்ட பேசினது உண்மையிலேயே என் மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு, நீங்க தப்பா நினைக்கலைனா, ஐ ஜஸ்ட் வான்ட் டு கிவ் எ ஹக்!” என ரம்யா கேட்கவும், “ஒய் நாட்!” என மெர்லின் எழவும், ரம்யாவும் எழுந்து அவளை அணைத்துக் கொண்டாள். தனது கைப்பையில் இருந்து கைநிறைய சாக்லேட்டுகளை எடுத்த ரம்யா மெர்லின் கையில் கொடுத்து, இது உங்க பையனுக்கு என்று சொல்லவும்,நன்றி சொல்லி சிறு புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டாள். “நேரமாச்சு, பையன் தேடுவான், வீட்டுக்காரரால் அவனை ரொம்ப நேரம் தனியாகச் சமாளிக்க முடியாது!” என்று மெர்லின் விடைபெற்றாள். அவள் கண்பார்வையில் இருந்து மறையும் வரை, அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரம்யா, மறுபடியும் அதே மேஜையில் தலை கவிழ்ந்து அமைதியாகப் படுத்தாள். 

தினேஷின் அண்ணன் மனைவிக்குப் போன் செய்தாள் மெர்லின், “அக்கா! உங்க கல்யாணத்தப்போ தினேஷ் கூட காலேஜ்ல படிச்ச ரம்யா வந்தாள்னு சொல்லுவீங்களே அவ இருக்க அந்த போட்டோவை அனுப்பி வைங்கக்கா வாட்ஸ்அப்பில்!” எனக் கேட்கவும், ”எதுக்கு மெர்லின், எப்பவுமே எங்க கல்யாண ஆல்பத்தில், அந்த பக்கத்தைப் பார்க்காமல் திருப்பிடுவ, இன்னிக்குத் திடீர்னு பார்க்கணும்னு ஏன் கேக்கிற?” எனவும், “சும்மாதான் அக்கா! வெயிட் பண்றேன்! அனுப்புங்க!” என்று அழைப்பைத் துண்டித்து விட்டு,  வாட்சப்பைத் திறந்து காத்திருக்க, பத்து நிமிடம் கழித்து மெர்லின் கேட்ட அந்த புகைப்படம் வந்தது. அந்த புகைப்படத்தில் இருந்தது… ரம்யா தான். மெர்லின் பார்த்த அதே ரம்யா தான்.  எடை சற்றுக் கூடியிருந்தாலும், அதே சுருள் முடி, அகன்ற கண்கள், புன்னகை நிறைந்த உதடுகள். அவளேதான். தனது கணவனின் காதலிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்திருக்கிறோம் என்பது மெர்லினுக்கு என்னவோ போலிருக்க ஒருவாறு குழம்பி நின்றாள். மால் வாசலில் அம்மா என்றவாறு அவர்களின் மகன் ஓடிவரவும், மெர்லின் வீட்டுக்கு வரத் தாமதமானதால், தினேஷும் அவனும் மாலுக்கே வந்துவிட்டனர். உள்ளே போகலாம் என்று ஓடியவனைத் தடுத்தவள்,”மாலுக்குள் இன்னொரு நாள் போகலாம் குட்டிமா, லேட் ஆகிடுச்சு!” என்று சொல்லி தினேஷையும் சீக்கிரம் கிளம்புமாறும் அவசரப்படுத்தினாள். தினேஷுக்கு அவளின் பதட்டம் புரியவில்லை என்றாலும் மகனையும் தூக்கி பைக்கில் உக்கார வைத்து வண்டியைக் கிளப்பினான். அவர்கள் போவதைப் பார்த்த ரம்யாவின் இரு கண்களின் ஓரத்தில் சில கண்ணீர் துளிகள்.

“சாரி மெர்லின், நான் யார்னு முதலிலேயே சொல்லியிருக்கணும். நீ தான் தினேஷின் மனைவின்னு பேஸ்புக்ல பார்த்திருந்தும், உன்கிட்ட பேசக்கூடாத இதெல்லாம் நான் உன்கிட்டேயே பேசுற மாதிரி ஆகிடுச்சு. நீ வர்ற இடம்னு தெரிஞ்சு தான் இங்கே வந்தேன். சும்மா உன்னைப் பார்த்து பேசணும்னு தான் வந்தேன். ஆனால் பழைய நினைவுகளால் நான் தடுமாறிக் கொண்டு இருக்கையில், நீயே என்னைத் தேடி வந்து ஆறுதல் சொல்லிட்டுப் போற. என்னோட ஹ்ம்ம். ஹ்ம்ம். உன்னோட தினேஷை நீ எப்படிப் பார்த்துப்பன்னு நீ என்கூட இருந்த கொஞ்ச நேரத்துலையே தெரிஞ்சிக்கிட்டேன். என்னை விட நீதான் தினேஷுக்கு சரியான பொருத்தம். இப்போ இருக்கிற கண்ணீர் உங்களைப் பார்த்த சந்தோஷத்தில் வந்த கண்ணீர்!” தனக்குள் பேசிக் கொண்டிருந்த ரம்யாவின் என்ன அலைகளைக் கலைத்தது அவளின் மகன் குரல், “அம்மா நீங்களும் வந்திருக்கலாம், சூப்பர் மூவி! என்னப்பா?” என்றவனை “ஆமாடா!” என்றார் சேர்த்துப் பிடித்தவாறே ரம்யாவின் கணவர் மதி. அவர்கள் இருவரும் தன்னை நன்கு கவனிக்கும் முன்பு சட்டென தனது கண்ணீர்த்துளிகளைத் துடைத்தாள் ரம்யா. மகனின் கன்னத்தைத் தட்டியவாறு, “இந்த மூவியைக் கண்டிப்பா இன்னொரு சமயம் பார்க்கிறேன் செல்லம்!” என்றவளின் மனமும் பழைய நினைவுகளில் இருந்து மீண்டெழுந்து தனது வழக்கமான எண்ண ஓட்டங்களில் ஈடுபட கணவரையும், மகனையும் ஒவ்வொரு கரத்தில் பற்றிக் கொண்டு நடக்கத் தொடங்கினாள்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.