(Reading time: 8 - 15 minutes)
Aariloru pangu
Aariloru pangu

Flexi Classics தொடர்கதை - ஆறிலொரு பங்கு - 04 - சுப்ரமணிய பாரதியார்

ல்கத்தாவுக்கு வந்து சில தினங்களிலிருந்து விட்டு, பாரிஸாலுக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கு போய் வழி விசாரணை செய்து கொண்டு அசுவினி குமார தத்தருடைய வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். வீட்டு வாயிலில் ஒரு பெங்காளி பாபு நின்றுகொண்டிருந்தார். அவரிடம் "அசுவினி பாபு இருக்கிறாரா?" என்று கேட்டேன்.

"இல்லை. நேற்றுத்தான் புறப்பட்டுக் காசிக்குப் போயிருக்கிறார்" என்றார்.

"அடடா!" என்று சொல்லித் திகைத்து நின்றேன். எனது காஷாய வுடையைக் கண்ட அந்த பாபு உபசார மொழிகள் கூறி உள்ளே அழைத்துப் போய், தாகசாந்தி செய்வித்து விட்டு, "யார், எவ்விடம்” என்பதை யெல்லாம் விசாரணை செய்தார்.

நான் எனது விருத்தாந்த மெல்லாம் தெரிவித்துவிட்டு, என் மனதிலிருந்த நோக்கத்தையும் சொன்னேன். “பாரும், பாபு, நம்மில் ஆறி லொரு பங்கு ஜனங்களை நாம் தீண்டாத ஜாதியாக வைத்திருப்போமானால் நமக்கு ஈசன் நல்ல கதி கொடுப்பாரா?' என்று என் வாயிலிருந்து வாக்கியம் கேட்டவுடனே அவர் முகத்தில் மிகுந்த வருத்தம் புலப்பட்டது. முகத்தைப் பார்த்தால் கண்ணீர் ததும்பி விடும்-போலிருந்தது.

தீண்டாத வகுப்பினரின் நிலையைக் கருதித்தான் இவ்வளவு பரிதாப மடைகிறார் போலுமென்று நான் நினைத்து “ஐயா, உம்முடைய நெஞ்சுபோல இன்னும் நூறு பேருடைய நெஞ்சிருக்குமானால் நமது நாடு செம்மைப் பட்டு விடும்.” என்றேன்.

“ஸ்வாமீ, தாங்கள் நினைக்கிறபடி அத்தனை கருணை யுடைய நெஞ்சம் எனக்கு இன்னும் மாதா அருள் புரியவில்லை, ஹீன ஜாதியாரைக் காக்கவேண்டு மென்ற விஷயத்தில் எனக்குக் கொஞ்சம் சிரத்தை யுண்டென்பது மெய்யே, அசுவினி பாபுவுடன் நானும் மேற்படி வகுப்பினருக்கு நன்மை செய்வதில் சிறிது உழைத் திருக்கின்றேன், ஆயினும் என் முகத்திலே தாங்கள் கவனித்த துக்கக் குறி நம்மில் ஆறிலொரு பங்கு ஜனங்கள் இப்படி அவலமாய் விட்டார்களே யென்பதைக் கருதி ஏற்பட்டதன்று. தாங்கள் சொன்ன வாக்கியம் சில தினங்களுக்கு முன்பு இங்கு வந்திருந்த ஒரு மந்த்ராஜி*யம்மாளின் வாயிலிருந்து அடிக்கடி வெளி வரக் கேட்டிருக்கிறேன், தாம் அது சொன்னவுடனே எனக்கு அந்த அம்மாளின் நிலை ஞாபகம் வந்தது. அவளுடைய தற்கால ஸ்திதியை நினைத்து. வருத்த முண்டாயிற்று. அடடா! என்ன குணம்! என்ன வடிவம்! இவ்வளவு பாலியத்திலே நமது தேசத்தினிடம் என்ன அபரிமிதமான பக்தி!" என்று சொல்லித் திடுக்கென்று பேச்சை நிறுத்திவிட்டார்,

 

* “மந்திராஜி யம்மா' என்பது மதிராஸ் பிரதேசத்து ஸ்திரீ என்று பொருள் படும். மதிராஸ் என்பதற்கு வட நாட்டார் மந்திராஜ் என்பார்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.