(Reading time: 12 - 24 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

Flexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 02 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)

ஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வந்தன. மகிழ்ச்சி கரை புரண்டு வந்தது. சில வினாடிகளில் சென்று என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து தரவேண்டும் என்றும், பானுவின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் தோன்றியது. ஆனால் தந்தையார் இட்ட வேலைகளால் இரண்டு நாட்கள் ஊரைவிட்டு நகரமுடியாமல் போய்விட்டது.

இரயில் வண்டியிலிருந்து இறங்கி, சித்தப்பாவின் வீட்டை அடையும்பொழுது மாலையாகிவிட்டது. தெரு வாயிற்படியில் காலை வைத்ததும் சித்தி, சித்தப்பா, அக்காமார்கள் அனைவரும் எதிர்கொண்டு பேசினார்கள். நாங்கள் இருவரும் தேர்வில் வெற்றி பெற்றதற்காக மகிழ்ச்சி தெரிவித்தார்கள். எங்கள் வீட்டினர் நலங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். எங்கள் ஊர் விசேஷங்களையும் கேட்டனர். ஒருவர் நலங்களை ஒருவர் கேட்டுக்கொள்வதில் ஒரே ஆரவாரம்.! "கேசவ் அண்ணன் வந்தார்", "கேசவ் மாமா வந்தார்!" என்று சொல்லிக்கொண்டு வீட்டில் குழந்தைகள் எல்லாரும் அவரவர் முறைவைத்து மழலை மொழியில் கூப்பிட்டுக் கொண்டு என்னைச் சூழ்ந்து கொண்டனர். எல்லாருக்கும் இனிப்பு வழங்கி முடித்தேன். ஊது குழல்களையும் விசில்களையும் வாங்கிக்கொடுத்தேன். என் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டவுடன் குழந்தைகள் அனைவரும் ஒரு - மொத்தமாகக் காதடைக்கும்படி ஊது குழல்களை ஊதிக் கொண்டும், விசில்களை அடித்துக் கொண்டும், வீட்டைச் சந்தையாக்கத் தொடங்கிவிட்டனர். இதைக் கண்ட பானு சலித்துக்கொண்டு எழுந்து போய்விட்டாள். முதல் ஆண்டே தேர்வில் வெற்றி பெற்றுவிட்டதால் எவ்வளவோ மகிழ்ச்சியுடன் இருப்பாளென்றும், என்னைப் பார்த்த உடனேயே சிரித்துக்கொண்டு வரவேற்று கலகலவென்று பேசுவாளென்றும்.. அதெல்லாம் ஒன்றுமில்லை. ஏனோ அலட்சியமாகவும், சோகமாகவும் இருப்பதுபோல் தெரிந்தது. குழந்தைகளைத் தூண்டிவிட்டு குழந்தைகளைவிட அதிகமாகச் சத்தம்படும் பானு அவ்வளவு அலட்சியமாக இருப்பதை நான் என்றும் பார்த்த நினைவில்லை.

"ஏன் பானூ! அப்படி இருக்கறே?" என்று சிரித்துக் கொண்டே கேட்டதற்கு "ஒண்ணுமில்லே" என்று சொல்லிவிட்டாள் ஒரே வார்த்தையில். அதற்குள்ளாகவே குழந்தைகளின் சத்தத்தைப் பொறுக்க முடியாமல் வெறுப்புடன் போய்விட்டாள். எனக்கு ஒன்றும் புரிய வில்லை. சித்தி சமையலறையை நோக்கிப் போய்க் கொண்டிருக்க அவள் பின்னாலேயே நடந்துகொண்டு, "ஏன் சித்தி, பானு ஒரு மாதிரியா இருக்கறா?" என்று கேட்டேன்.

சித்தி சமையலறைக்குள் சென்று மணை ஒன்று போட்டு உட்காரச்சொன்னாள். அரிசி முறத்தை அருகில் இழுத்துக்கொண்டு உட்கார்ந்தாள். "சந்தர்ப்பங்களெப் புரிஞ்சிக்க முடியாமெ போனா எவ்வளவு படிப்பு படிச்சாலும் என்ன லாபம்டா? காலேஜ் படிப்பு படிக்கணுமாம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.