சாத்திரங்களின் அறிவுரையை நான் கேட்கமாட்டேன். என் அறிவுரையைச் சாத்திரங்கள் கேட்கவே கேட்கமாட்டா. நான் என் கணவனிடம் அன்பு செலுத்த முடியாமற் போவது, அவருக்காக என்னுடையவற்றையெல்லாம் தியாகம் செய்து வாழமுடியாமற் போவது பெருங்குற்றமே. அந்தச் சாத்திரங்களையே படித்த யமதர்மராஜன் என்னைத் தடுப்பான் போலும்!
அத்தையின் அறிகுறிகள் எனக்கு எல்லா விதங்களிலும் வந்து சேர்ந்தன. திருப்தி இல்லாத இந்த வாழ்க் கையை இனியும் என்னால் நடத்த முடியாது. அதனால் என் இலட்சியம் கூட அடிப்பட்டுப் போகலாம். என்னுடைய தனிப்பட்ட இலட்சியம் அடிபடும் நாள் நான் வீணாகப் போய்விடுவேன் அல்லவா? மகிழ்ச்சிக்கே பஞ்சமான இந்த வீட்டிலே, அன்புப்பிணைப்பை அறியாத தாய்தந்தையர் இடையில் வளரும் மகன் எவ்வளவு மென்மையானவன் ஆவான்? அறிவுள்ளவனாக எப்படி அவன் ஆவான்? அதனால்தான் என் பாபு வேறோர் இடத்தில், சாந்தி நிலையத்தில்-அன்பு இல்லத்தில் வளர்வான். நான் விடைபெறுகிறேன். இதுதான் என் இலட்சியமானால் நான் சாவது தேவையில்லை என்கிறாயா? அத என்மேல் உனக்கு இருக்கும் அளவுகடந்த அன்பின் விளைவு----அவ்வளவுதான்! ஒரு பெண் துணிந்து தனியாக வாழும் அளவுக்கு நம் சமூகம் வளரவில்லை. நாம் அவ்வளவு முன்னேறவில்லை. இருந்தாலும் சமூகத்து நிலை பற்றி எனக்கு எப்போதும் அக்கறையில்லை. நான் எப்போதானாலும் இதையேதான் செய்வேன். இது ஆவேசத்தின் விளைவு என்றால் இதுவே எனக்கு விடுதலை அளிக்கும்.
வாழ்ந்திருந்தால் எனக்கு அளவில்லாத அன்பு வேண்டும். ஒருவர் ஒன்றிப்போகும், ஒருவருக்காக ஒருவர் உயிரை விடக்கூடிய, ஒருவருக்காகவே ஒருவர் வாழ்ந்திருக்கும் அன்பு வெள்ளம் பாயவேண்டும், அதுதான் உண்மையான வாழ்க்கை! உயிரோடு இருந்தால் எனக்கு அந்த வாழ்க்கைதான் வேண்டும்.
நிலைமைகள் எதிர்க்குமானால் தாங்கிக் கொள்ளக் கூடிய பொறுமை எனக்கு இல்லை. முதலி லிருந்தே என்னிடம் உள்ள குறை அதுதான்! இறைவன் என்னைச் சகிப்புத் தன்மை இல்லாத பெண்ணாக ஆகவேண்டும் என்று சபித்து விட்டார். பார்க்கப்போனால் அந்த இறைவனும் ஓர் ஆண்தானே? ஒரு பெண்ணுக்காக எந்த ஆண்மட்டும் அன்புதானம் செய்வான்?
பார் அண்ணா! என் பாபு, தந்தை அரவணைப்பே தெரியாத என் மகன்----தாயைக்கூட இழந்து விடுகிறோம் என்பது தெரியாமல், கவலையில்லாமல் தூங்கிக்கொண்டிருக்கிறான். அவன் இனி வாழ்க்கையில் அம்மாவைப் பார்க்கமாட்டான் இல்லையா? நான் போய்விட்ட பிறகு அவன் எழுந்து அழுதால், அவங்க அப்பா தூக்கம் கெட்டதென்று கோபித்து அடித்தால்.........