ஒரு மணி நேரம் வரெக்கம் எத்தனையோ கேள்விகள் போட்டு, எத்தனையோ பதில்கள் கேட்டு, அம்மா பிறகு வருவாங்க என்ற நம்பிக்கை வந்தபோது சாதம் சாப்பிட ஒப்புக்கொண்டான். பத்து மணி ஆகிவிட்டது சாதம் பிசைவதற்குள். மாலை எல்லோரும் கவலையோடு உட்கார்ந்திருந்தனர். எட்டு மணி இருக்கும்போது பக்கத்து வீட்டுப் பாட்டி யாரோ வந்து சிறிது சாதம் வடித்து வைத்தாள். பெரியக்கா எழுந்து குழந்தைகளுக்குச் சாதம் பிசைந்தாள்.
நானியுடன் நானும் நான்கைந்து கவளங்கள் சாப்பிட வேண்டி இருந்தது. சாதம் ஊட்டிவிட்டு, தோள்மேல் போட்டு நடந்துகொண்டு தூங்கவைத்தேன். அவன் தூங்கிய பிறகு எழுந்து அறைக்குள் சென்றேன்.
நள்ளிரவு...வீடெல்லாம் ஒரே அமைதியாக அச்சம் சூழ்ந்திருந்தது. சித்தி இருந்து இருந்து சத்தம் போட்டு அழுதாள். சித்தி வயிறு துக்கத்தால் பற்றி எரிந்து கொண்டிருந்தது. நான் அறைக்குள் சென்று விளக்கைப்போட்டு பானு மகனுக்கு எழுதிய கடிதத்தை எடுத்தேன். எனக்கு பானு பேசிக்கொண்டிருந்தால் அப்படியே கேட்டுக்கொண்டிருக்கலாம் என்று இருக்கிறது. கடிதம் மூலமாகவாவது பானுவுடன் பேசவேண்டும். கடிதத்தில் பல இடங்களில் எழுத்துகள் கலைந்திருந்தன.---- கண்ணைத் துடைத்துக்கொண்டு கடிதம் படிக்கத் தொடங்கினேனோ இல்லையோ கேவி அழுது கொண்டே எழுந்தான் நானி. கலக்கத்துடன் வெளியே சென்றேன். அவனை மறுபடியும் தோள்மேல் போட்டு நடந்து பிறகு படுக்கவைத்தேன்.
ஏனோ எனக்கு பானு மகனுக்கு எழுதிய கடிதத்தைப் படிக்க மனம் வரவில்லை. அந்தத் தாய் மகனுக்கு என்ன எழுதினாளோ! அவன் பெரியவனான பிறகு அவனிடமே கொடுக்கிறேன் - அளவு கடந்த துக்கம் வந்தது.
பானூ! ... அம்மா! ... பானூ! ... இந்த துக்கத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. நீ இழைத்த கொடுமையை என்னால் மன்னிக்க முடியாது. உனக்காக ஏங்கும் குழந்தைக்கு இவ்வளவு அநியாயம் செய்வாயா? சுயநலத்தை விட தியாகம் எவ்வளவு உயர்ந்ததோ சிந்தித்தாயா? உன் சுயநலத்துக்காக உன்னிடம் அன்பு செலுத்துவோரை ஒரேயடியாக அழித்து விடுவதா? நீ சுகத்திலிருந்து தூரமாயிருந்தாலும்---- எனக்காக இந்த அண்ணனுக்காகப் பிழைத் திருக்கக் கூடாதா அம்மா! அப்போது என்னுடையது சுயநலம் என்கிறாயா? உன் குழந்தையை நீயே வளர்க்க முடியாமல் போய்விட்டாயா? அதற்க்கு நான் இருக்கிறேன் என்கிறாயா? இது உனக்கு நியாயமல்ல பானூ! நியாயமல்ல! நீ கட்டியதெல்லாம் காகித மாளிகையே ஆனால், அது அனுபவத்தில் முடியாமல் போனால் தவறு யாருடையது என்று சொல்கிறாய்! அது உன் துர்ப்பாக்கியம் என்று நீ ஏன் நினைக்கமாட்டாய் பானூ? இப்பொழுது நான் எவ்வளவு சொன்னால் உனக்குக் கேட்கப் போகிறது? அவ்வளவு அழுதால் உனக்குக் கருணை