(Reading time: 7 - 14 minutes)

பிரசவ அறை நோக்கி சென்ற நந்தன் வானதியை பரிசோதித்துக் கொண்டிருந்த மருத்துவரிடம்... கிருஷ்ணப்ரியாவும் ஒரு பயிற்சி மருத்துவர் என்று அறிமுகப்படுத்தி.. அவள் கற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும் என கூறி அவள் வானதியுடன் இருக்க பணிந்தான். பின்னர் பிரியாவிடம் சிறு தலையசைப்புடன் விடைபெற்றவன் தன்னறைக்கு சென்று கைகளில் தலையை ஏந்தியபடி அமர்ந்துகொண்டான். நந்தனே நேரில் வந்து பிரியாவிற்காக பேச அவள் அவனுக்கு எவ்வளவு நெருக்கமானவள் என்பதை அங்கிருந்த மருத்துவரும் செவிலியர்களும் நன்றாய் உணர்ந்திருந்தனர்.

கண்களில் கண்ணீர் வழிய அழுதுக்கொண்டிருந்த வானதியின் அருகில் வந்த கிருஷ்ணப்ரியா அவளது கைகளை பிடித்துக்கொண்டு எப்பொழுதும் உனக்கு நான் இருக்கிறேன் என்பதாய் கண்களால் தைரியமூட்ட...அதில் சற்று ஆசுவாசமான வானதி மீண்டும் பிரசவ வலி பொருக்கமாட்டாமல் பிரியாவின் கைகளை அழுத்த... வானதியின் நகம் பிரியாவின் கரங்களில் அழுந்த பதிந்து அவ்விடத்திலிருந்து இரத்தமும் வெளிப்பட... வானதியின் வலியை அவளுமே உணர்ந்தாள். 

தன்னறையில் அமர்ந்திருந்த நந்தனின் மனம் முழுவதும் அவனது கிருஷ்ணாவை பற்றிய நினைவுகளே... நந்தன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் கடைசி வருடம் பயின்றுக்கொண்டிருந்த நேரம் அங்கு முதலாமாண்டு மாணவியாக அடி எடுத்து வைத்தவள் தான் கிருஷ்ணப்ரியா. 

மேல்நிலைத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெருமளவிற்கு தேர்ந்திருந்தாள் பிரியா. மருத்துவம் பயில்வது அவளின் ஆசை, கனவு, லட்சியம் மட்டுமல்ல அவளது வாழ்வும் அதுவே. 

கல்லூரி தொடங்கிய நாள் முதல் ஒரு மாதம் வரை புதிதாய் சேர்ந்த மாணவர்களை கல்லூரியிலும், விடுதியிலும் மூத்த மாணவர்களின் அளவுக்கு மீறாத சீண்டல்கள் தொடர்ந்த படியே தான் இருந்தது. சில அத்துமீறல்களும் நடக்கவே செய்தது. காலையில் கல்லூரிக்கு வரும் மாணவிகளையும், வகுப்புகள் முடிந்து வீட்டிற்கு செல்லும் மாணவிகளையும் வழியில் நிற்கவைத்து கொச்சையான வார்த்தைகளை பேசி அசிங்கபடுத்தினர் சிலர். வழக்கம் போல கல்லூரி நிர்வாகம் அதை கண்டும் காணாமலும் இருந்தது. 

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.