(Reading time: 7 - 14 minutes)

பிரியாவும் கல்லூரியில் ஒன்றி இருந்தாள். ஆசிரமத்தில் வளர்ந்ததாலோ என்னமோ அவள் அதிகம் தனிமை விரும்பியாகவே இருப்பாள். ஆசிரமத்தில் கூட தேவையானவற்றிற்கு மட்டுமே பேசுவாள். அவளை அதிகம் பேச வைப்பவள் வானதி தான். கல்லூரியிலும் அவளுக்கென அதிக நண்பர்கள் கிடையாது. அவள் தங்கியிருந்த ஆசிரமம் கல்லூரியிலிருந்து பத்து கிலோமீட்டர் தான் என்பதால் விடுதியில் சேராமல் தினமும் பேருந்தில் சென்று வருவாள். பயணம் செய்வது பிரியாவிற்கு மிகவும் பிடித்தமான ஒன்று. 

கல்லூரியில் பிரியா இருவரிடம் மட்டுமே அதிகம் பேசுவாள். ஒருவள் காவியா சற்று கலகலப்பானவள், ஒரு அண்ணன், ஒரு தங்கை என அழகானதொரு நடுத்தர குடும்பம். அவளிடம் பேசிய எவரையும் தன் பேச்சினாலே வசியப்படுத்தி விடுவாள். மற்றொருவள் சந்தியா பெரிய இடத்து வாரிசு, ஆனால் அந்த பகட்டு தோற்றம் அவளிடம் இதுவரை இருந்ததில்லை. 

ஒருநாள் மாலை கல்லூரி முடிந்து மூவரும் ஒன்றாய் பேருந்து நிறுத்தம் நோக்கி செல்கையில் ஒரு கும்பல் அவர்களை வழி மறித்து நிற்க மூவரும் பயம் என்ற உணர்வு சற்றும் இல்லாமல் நின்றிருந்தனர். "என்ன செய்து விட போகிறார்கள்!!" என்ற தைரியத்தில் கிருஷ்ணப்ரியாவும், "நான் பேசியே இவங்களை எல்லாம் ஓட விட்டுருவேன்" என்ற நினைப்பில் காவியாவும், "தன் பெரியப்பா பையனும் அதே கல்லூரியில் பயிற்சி மருத்துவராய் பணிபுரிகின்ற நம்பிக்கையில்" சந்தியாவும் தத்தம் யோசனையில் அசராமல் அந்த கும்பலை எதிர்நோக்கினர். 

"மாமா நந்துக்கு ஒரு போன் பண்ணுங்களேன்" என்ற கேள்வியுடன் தன் காதல் கணவனிடம் கேட்டார் அகல்யா. நந்தகோபாலன்(NG) _ அகல்யா தம்பதியினருக்கு மூன்று மக்கட்செல்வங்கள் மூத்தவன் ஆதிநந்தன்(ஆதி), அடுத்ததாக மீராநந்தன்(நந்து), கடைக்குட்டி யாழிசை(யாழ்). நந்தகோபாலன் செல்வ வளம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர். தன் தந்தை சண்முகவேலனின் கடும் உழைப்பால் உருவான SV பட்டு சாம்ராஜ்யத்தை விடுத்து தன் உழைப்பால் சாதிக்க வேண்டும் என நினைத்தவர். தன் எண்ணப்படி தலை சிறந்த இருதய மருத்துவர் என்ற பெயரையும் பெற்றிருந்தார். 

சண்முகவேல் தன் மகனுக்கென நந்தன் மருத்துவமனையை உருவாக்கி கொடுத்தார். ஆதிநந்தன் தன் தாத்தாவிற்கு துணையாய் தொழில் படிப்பில் தேர்ந்து அவர் உருவாக்கிய சாம்ராஜ்யத்தை உள்நாட்டில் மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் அதன் பெயர் நிலைத்து நிற்கும்படி திறம்பட செயல்பட்டுக் கொண்டிருந்தான். ஆதியின் மனைவி முத்தமிழ் அவர்களின் காதலுக்கு பிறந்தவள் ஒருவயது நிரம்பிய தமிழினி. மீராநந்தன் தன் தந்தையை முன்மாதிரியாக ஏற்று அவரைப்போலவே மருத்துவத்துறையில் சாதிக்க நினைத்தான். அவன் தன் மேற்படிப்பை முடித்துவிட்டு தந்தைக்கு உதவியாக மருத்துவமனையை நிர்வாகிக்க தொடங்கி இருந்தான். 

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.