(Reading time: 13 - 26 minutes)

அவளை புரிந்துகொண்டவர்களுக்கு அவள் ஒரு குழந்தை, எனினும் மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டியவள். அவளை புரிந்து கொள்ளாதவர்களுக்கோ அவள் ஒரு குழப்பவாதி.  

 

குளியலறை சென்றவள் அவளுக்கு தேவையான அனைத்தும் உள்ளே இருக்க எப்படி இதெல்லாம் இங்கே வந்தது என்று யோசிக்க கூட தோன்றாமல் குளித்து முடித்து நந்தன் வாங்கி வைத்திருந்த புடவையை அணிந்து மீண்டும் கட்டிலில் அமர்ந்துக்கொண்டாள். பிரியா கட்டிலில் அமரவும் நந்தன்  அறை கதவை தட்டவும் சரியாக இருந்தது. 

 

அவள் குளியலறை நோக்கி செல்கையிலே நந்தனும் அவளுக்கு சிற்றுண்டி வாங்க சென்றுவிட்டான். கதவை திறந்தவள் மீண்டும் அமைதியாய் அமர்ந்துக்கொண்டாள். நந்தனோ "என்ன இன்னைக்கு முழுக்க மௌனவிரதம் ஏதும் இருக்க போறியா??" என்று தன் பார்வையை கூர்மையாக்கி கேட்டான். அவளிடம் பதில் இல்லை உணவு பொட்டலத்தை பிரித்து அவள் முன் வைத்தவன் "எப்படியும் நேத்து இருந்து நீ சாப்பிட்டு இருக்க மாட்ட. அது தான் இட்லி வாங்கிட்டு வந்தேன் சாப்பிடு.." என்ற அவனது குரல் பாசமாய் ஒலித்தது. 

 

ஆனால் அதை எல்லாம் கவனிக்கும் மனநிலையில் தான் அவள் இல்லை. தன் இரு கைகளையும் கோர்த்து முட்டிக்காலை அணைத்தவாறு  அதனுள் முகத்தினை  ஒரு புறமாக சாய்த்தபடியே சுவற்றை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தவள் நந்தன் என்ற ஒருவன் அங்கு இருக்கிறான் என்பதையே மறந்திருந்தாள். 

 

"கிருஷ்ணா......" என்று நந்தன் மறுபடியும் அதட்ட... திடுக்கிட்டவளாய் திரும்பி நந்தனை பார்க்க அவனோ சாப்பிடு என்றான். வேண்டாம் என்று தலையாட்டியவளிடம் மீண்டும் அதே வெறித்த பார்வை. "கடவுளே இவளை எப்படியாவது மாத்த என்கூட நீ தான் பா துணை இருக்கணும்" என்று மனதினுள் கடவுளிடம் முறையிட்டவன், இட்லியை பிட்டு அவளது வாயருகில் கொண்டுவந்தான். 

 

வாயை இறுக மூடி இருந்தவளிடம் "உன்னோட பிடிவாதத்தை சாப்பாட்டுல காட்டாத.... நீ சாதிக்க நினைக்குறதுல காட்டு... இப்போ வாயை திற" என்று மிரட்டியவனை கண்டு அவளது கண்களில் நீர் திரண்டது. நந்தனுக்கு தெரியாமல் தன் கண்ணீரை துடைத்துக்கொண்டவள் அவனிடம் இருந்த இட்லியை தன் கைகளில் பெற்று... அவன் வாங்கி வைத்திருந்த நான்கு இட்லியையும் தானே உண்டு முடித்தாள். 

 

பிரியாவும் தனக்கு யாரவது ஊட்டி விட மாட்டார்களா என்று ஏங்கியவள் தான்.... ஆனால் இன்று ஏனோ நந்தன் ஊட்டிவிட முற்பட்ட பொழுது அதை வாங்கிக்கொள்ள தான் அவளது மனம் முரண்டு பிடித்தது. நந்தனின் மனதிலோ "நீ செய்யுற ஒவ்வொன்னும் என் மனசை எவ்வளவு காயபடுத்துனு உனக்கு தெரியலையா கிருஷ்ணா.... இல்ல நான் உன்னை வெறுக்கணும்னு இப்படி எல்லாம் செய்ரியா....? ஆனா என்னைக்கும் உன்னை என்னால வெறுக்க முடியாது கிருஷ்ணா.... என்று ஒரு பட்டிமன்றமே நடத்திக்கொண்டிருந்தான். 

 

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.