(Reading time: 13 - 26 minutes)

அதை கேட்ட நந்தனின் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்து இறுக்கம் வந்து குடிகொண்டது. ஆதி இதுவரை தன் தம்பியை இப்படி உண்மையை மறைத்து பேசி கண்டதில்லை. அவனை பொறுத்தவரை உண்டு என்றால் உண்டு.... இல்லை என்றால் இல்லை... "என்ன டா ஒண்ணுமே சொல்லல..." என்ற அண்ணனிடம் "ஈவ்னிங் வந்து எல்லாம் சொல்றேன் டா... அம்மா, அப்பா கேட்டா மட்டும் நைட்டே வந்துட்டு இப்போ தான் போன்னேன்னு சொல்லிடு....." என்ற நந்து ஆதியின் பதிலை கூட எதிர்பார்க்காமல் வேகமாய் சென்றுவிட்டான். 

 

பெற்றவர்கள் வருந்தக்கூடாது என்று உண்மையை மறைக்க... அதே உண்மை பிறர் வாயிலாக அவன் பெற்றவர்கள் அறிந்தால் அவனின் மேல் வைத்த நம்பிக்கை என்னவாகும் என்பதை ஏனோ அந்த நொடி அவன் யோசிக்க மறந்தான். நந்து செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த ஆதி "வர வர இவன் சரியே இல்லை இன்னைக்கு ஈவ்னிங் எல்லாத்தையும் கேட்கனும்" என்று தன் மனதில் முடிவெடுத்துக்கொண்டான். பாவம் ஆதிக்கு தெரியவில்லை இன்று இரவும் நந்தன் வீட்டிற்கு வர போவதில்லை என்று. 

 

வண்டியை அவன் செலுத்திய வேகத்தில் பத்து நிமிடத்தில் மருத்துவமனையை அடைந்திருந்தான். தன்னறைக்குள் புகுந்தவனை தொடர்ந்து வந்த செவிலி "சார் இன்னைக்கு ஒரு ஆபரேஷன் இருக்கு..." என்று கூற "டாக்டர் நான்சி வருவாங்க. இன்னைக்கு எனக்கு இருக்க எல்லா கேசும் அவங்களையே பார்க்க சொல்லுங்க... இப்போ நீங்க கிளம்பலாம்." என்று சொல்லிவிட்டு பிரியா இருக்கும் அறை நோக்கி சென்றான். 

 

மணி எட்டை தாண்டியும் மயக்கம் தெளியாமல் இருக்கும் ப்ரியாவை கண்டவன் ஒரு தாய்மை உணர்வோடு அவளருகில் அமர்ந்து அவளை எழுப்பினான். "கிருஷ்ணா......" "கிருஷ்ணா...." அவளிடமிருந்து எந்த பதிலுமில்லை. பின் அவளது கன்னத்தில் தட்டி தட்டி ஒரு வழியாய் விழிக்க வைத்துவிட்டான். கண்களை சுருக்கி தான் எங்கு இருக்கிறோம் என்று சுற்றி முற்றி பார்த்தவள் இரவு நடந்த அனைத்தும் ஒவ்வொன்றாய் நினைவு வர வெறித்த பார்வையோடே எழுந்து அமர்ந்திருந்தாள். 

 

கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் இல்லை.... அதுவும் பாலைவனமாய் வறண்டு விட்டது போல. நந்தனிடமும் ஒரு வார்த்தை கூட பேச அவள் முனையவில்லை. சிறிது நேரம் அமைதி காத்தவன் "எவ்வளவு நேரம் மேடம் இப்படியே உட்கார்ந்து இருக்க போறீங்க??" என்ற அவனின் கேள்விக்கு அவளிடம் மௌனமே பதிலாய். 

 

இன்பமோ, துன்பமோ, காதலோ, ஊடலோ, வருத்தமோ, அழுகையோ யாவுமே அளவுக்கு அதிகமானால் அங்கு மௌனம் மட்டுமே விடையாய் கிடைக்கும். 

 

"ம்ப்ச் இப்படி பார்த்துட்டே இருந்தா எல்லாம் சரி ஆகிடுமா.... இல்ல இறந்துபோன வானதி தான் திரும்ப வந்துடுவாளா? இன்னைக்கு உன்னோட ட்ரைனிங் கடைசி நாள்... எழுந்து கிளம்பு இன்னைக்கு போய் எல்லாத்தையும் நல்ல படியா முடிச்சுட்டு வா" என்று அதட்டினான் நந்தன். அவனை ஒரு வெற்று பார்வை பார்த்தவள் அமைதியாய் குளியலறை நோக்கி சென்றுவிட்டாள். 

 

ப்ரியாவின் பார்வையில் "என் தங்கச்சியவே என்னால காப்பாத்த முடில... இதுல ட்ரைனிங் முடிச்சு நான் என்ன பண்ண போறேன்" என்ற கேள்வி இருந்ததோ என்னவோ.... ஆனால் நினைப்பதை வெளியே சொல்லிவிட்டால் அது க்ரிஷ்ணப்ரியா அல்லவே. அவன் அறிந்தவரை பிரியா மிகுந்த அழுத்தமானவள் அவள் வாயை திறந்து சொன்னால் மட்டுமே அவள் என்ன நினைக்கிறாள் என்பது தெரியும். 

 

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.