(Reading time: 11 - 22 minutes)

அவளிடம் ஒருவன் காதலிப்பதாய் சொன்னால் மறுக்கத்தானே செய்வாள். பிரியா சாதாரணமாக மறுத்து பேசியிருந்தால் அவன் அவளை பற்றி மறுமுறை யோசித்திருக்க மாட்டானோ என்னவோ!! அவளோ இருவருக்கும் இடையில் உள்ள ஏற்ற தாழ்வுகளை பற்றி பேச அதுவே அவளை இன்னும் நேசிக்க செய்தது. காதல் ஏற்றத்தாழ்வுகள் பார்த்து வருவதில்லை என்பதை அப்பொழுது பேதையவள் அறியவில்லையே. 

 

பிரியாவோ நந்தனிடம் “எனக்கு லவ் ல லாம் நம்பிக்கை இல்லை சார். ஆனா நீங்க லவ் பன்றிங்களா னு உங்களுக்கு புரிய வைக்க முயற்சிக்கிறேன். ஒரு மூணு வருஷம் என்னை நீங்க பார்க்க கூடாது, என்னை பத்தி எந்த விபரத்தையும் யார் கிட்டயும் கேட்க கூடாது, என் கிட்ட பேச முயற்சிக்க கூடாது. என்ன டா அதே பழைய டயலாக் பேசுறானு நினைக்காதீங்க சார். எனக்கு இதுல ஒரு நம்பிக்கை இருக்கு எது சரினு படுதோ அதை நான் செய்வேன் சார். இந்த மூணு வருஷத்துல நீங்க எத்தனையோ பொண்ணுங்களை பார்ப்பீங்க பேசுவீங்க பழகுவீங்க ஆனா அவங்களை எல்லாம் கடந்தும் உங்களுக்கு என்னை பார்க்காமலே என்னோட நினைவுகள் இருந்தா அப்போ என்ன நடக்குமோ அது நடக்கும் சார். நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு தன் தோழிகள் இருவருடனும் சென்றுவிட்டாள். 

 

கல்லூரி சேர்ந்த இரண்டாம் வருட துவக்கத்திலே இத்துணை தெளிவாய் அவள் பேசுவதை கண்டவன் மனதினில் மிகவும் வியந்தான். நந்தனும் அவனை முழுதாய் அறிந்துக்கொள்ள இந்த இடைவெளி தேவை என்றே அப்பொழுது உணர்ந்தான். அதே நால்வர், அதே கல்லூரி, அதே புங்க மர நிழல், அன்று பிரியா தன் காதலை மறுத்த நொடி அவள் பேசிய பேச்சு அனைத்தும் நினைவு வர அமைதியாகவே நின்றிருந்தான் நந்தன்.

 

ஆனால் அன்று பார்த்த கிருஷ்ணப்ரியா இவள் இல்லை என்பதை மட்டும் நன்றாகவே உணர்ந்திருந்தான். அவன் மனமோ “அன்னைக்கும் என்னைக்கும் என் மனசுல நீ தான் கிருஷ்ணா” என்று அவளிடம் பேசியது. “என்ன அண்ணா ரொம்ப நேரமா அமைதியாவே இருக்கீங்க?” என்று காவியா கேட்டதில் சுயநினைவு பெற்றவன்… நினைவுகளில் மூழ்கி இருந்தவன் “ஒன்னும் இல்ல மா, நீங்க அவளை கூட்டிட்ட்டு போங்க. நான் லைப்ரரில இருக்கேன். மதியம் மட்டும் சாப்பிட வைச்சுடுங்க” என்று சொல்லிவிட்டு அவர்களின் பதிலை கூட எதிர்பார்க்காமல் வேகமாய் நூலகம் நோக்கி சென்றுவிட்டான். 

 

ஏதோ பித்து பிடித்தது போல் அங்கிருந்த கல் மேடையில் பிரியா அமர்ந்திருக்க தோழிகள் இருவரும் வழக்கம் போல அவளது நிலையை மாற்ற ஏதேதோ பேசினர். அப்பொழுது “இன்னைக்கு அபினவ்க்கு என்ன ஆச்சு தெரியுமா?” என்று சந்தியா ப்ரியாவை உலுக்க அதில் சுயநினைவு பெற்றவள் “அபினவ்க்கு என்ன ஆச்சு? சொல்லு” என்று பதட்டத்துடன் கேட்க சந்தியாவும் காவியவும் சிரித்தபடியே “இன்னைக்கு அவனுக்கு பிறந்தநாள் ஆச்சே” என்று hi fi கொடுத்தனர். 

 

“ச்சு நான் கூட பயந்தே போயிட்டேன்” என்று பிரியா பேச தன் தோழியை கொஞ்சம் மீட்டுவிட்ட சந்தோஷம் இருவரிடத்திலும். அந்த தோழிகளுக்கு தெரியும் பிரியாவிற்கு குழந்தைகள் என்றால் எவ்வளவு பிடிக்கும் என்று. அதற்காகவே கடைசி ஆயுதமாய் அபினவை பற்றி பேச்செடுத்தனர். 

அபினவ் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஐந்து வயது சிறுவன் இருதயத்தில் ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்காக ஒரு வாரத்திற்கு முன் அங்கு வந்து சேர்ந்தான். அவனது துரு துரு செய்கையும், மழலை பேச்சும் அவனிடத்தில் அனைவரையும் கட்டிப்போட்டது. 

 

காவியாவிற்கும் பிரியாவுக்கும் பொது மருத்துவ துறையில் பணி ஒதுக்கப்பட்டிருக்க சந்தியாவிற்கு குழந்தைகள் பிரிவில் பணி. ப்ரியாவை இயல்பாக்க சந்தியாவோ “இன்னைக்கு நீ என்னோட வார்டுக்கு போறியா நான் உன்னோட டூட்டி பார்த்துக்கறேன்…” என்று கேட்க… ஏன் என்று கூட கேட்க்காமல் ஒப்புக்கொண்டாள். அவளுக்கு என்ன பிரச்சனை என்றாலும் பணிபுரியும் இடத்தில் எப்பொழுதும் அதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டாள். 

 

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.