(Reading time: 14 - 27 minutes)

“சரி நந்து நீ வா உங்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவரிடம் “ஓகேப்பா” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான். தன் தந்தை தன்னிடம் எதை பற்றி பேச போகிறார் என்று யூகித்தவனாய் மனதினுள் ஒரு முடிவெடுத்துக்கொண்டான். பத்து நிமிடத்தில் தன் மருத்துவமனையை வந்தடைந்தவன் வேகமாய் இறங்கி தன் தந்தையை காண, அவரோ “பிரியா எங்க நந்து?” என்ற கேள்வியை முன்வைத்தார்.

 

“கீழ சந்தியா, காவியா கூட இருக்கா பா… இப்போ கொஞ்சம் நார்மல் ஆகிட்டா” என்றான் நந்தன். “சரி நந்து. வானதி உடலை தகனம் செய்ய ஆளுங்களை வர சொல்லிருக்கேன் வா போகலாம்” என்று நந்தனையும் அழைத்துக்கொண்டு வானதியின் உடல் வைக்கப்பட்டிருந்த அறை நோக்கி சென்றார். வானதியின் இறப்பை பற்றி அவருக்கு எப்படி தெரியும் என்று நந்தன் தன் தந்தையிடம் கேட்கவில்லை. மருத்துவமனை பற்றிய அனைத்து விபரமும் அவர் அறிவார் என்பது நந்தனுக்கு தெரிந்த ஒன்று.

 

சற்று நேரத்தில் வானதியின் உடலை ஏற்றிக்கொண்டு அந்த வாகனம் தகனமேடைக்கு சென்றது. தோழிகள் மூவரிடமும் விபரத்தை கூறியதும் நால்வருடன் பயணித்தது நந்தனின் கார். நந்தனுக்கு முன்பே அவனின் தந்தை அவ்விடத்தை அடைந்திருந்தார். அன்னை ஆசிரமத்தில் அவரே அனைத்தையும் செய்து முடித்துவிடுவதாய் கூறியிருந்தார். நந்தன் ப்ரியாவிற்காக பார்த்தால் அவரோ நந்தனுக்காக பார்த்தார்.

 

அனைவரிடமும் வானதியின் முகத்தை கடைசியாக பார்க்க சொல்ல ப்ரியாவின் பார்வையோ வானதியின் முகத்தை வெறித்தன. அவளது இரு தோள்களையும் அணைவாய் தோழிகள் இருவரும் பிடித்துக்கொள்ள அதில் “உனக்கு நாங்கள் இருக்கிறோம்” என்ற செய்தி மறைந்து இருந்தது. அனைத்தும் முடிந்து வானதியின் அஸ்தியை மட்டும் கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்ட நந்தகோபாலன் “நான் இதை கரைச்சுட்டு வந்துடறேன் அவங்க ரெண்டு போரையும் வீட்டுல விட்டுட்டு ப்ரியாவை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போ” என்று தன் மகனிடம் கூறினார்.

 

அதனை மறுத்து “அப்பா நான் செய்றேன்” என்று பேச வந்த மகனை தடுத்து, “வானதியும் எனக்கு ஒரு பொண்ணு மாதிரி தான். நான் பார்த்துகிறேன் நீ கிளம்பு” என்று கூறி தன் காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். தோழிகள் இருவரும் ப்ரியாவை தங்களுடன் தங்கவைத்துக்கொள்வதாய் கூற, நந்தனோ “எங்க இருந்தா என்ன டா எல்லாம் ஒன்னு தான்” என்று மறுத்துவிட்டான். காவியாவையும் சந்தியாவையும் அவர்களது இல்லத்தில் இறக்கிவிட்டு தன் இல்லம் நோக்கி வாகனத்தை செலுத்தினான்.

 

நந்தன் பிரியாவிற்கு அதில் விருப்பமா என்று கேட்க அவளோ எந்தவொரு பதிலும் சொல்லாமல் வெளியே தெரிந்த இருட்டை வெறித்துக் கொண்டிருந்தாள். தன் வீட்டின் முன்பாக காரை நிறுத்தியவன் அவளை இறங்க சொல்ல தான் எங்கிருக்கிறோம் என்பதறியாமல் திரு திருவென முழித்தாள். “நம்ம வீடு தான் வா போகலாம்….” என்று நந்தன் கூற அவனை முறைத்து விட்டு “உங்க வீடு” என்று திருத்தினாள். “சரி என்னோட வீடு……வா…” என்று மறுபடியும் அழைக்க, “இல்லை என்னோட வீட்டுக்கே நான் போறேன்” என்று திரும்பி நடந்தவளை கைபிடித்து “இந்த நிலைல உன்னை தனியா விட முடியாது ஒழுங்கா உள்ள வா” என்று மிரட்டினான்.

 

அவனது மிரட்டலுக்கு சற்றும் அசராமல் “என்னால உங்களுக்கு தொல்லை தான் விடுங்க. உங்க வேலையை நீங்க பாருங்க… என்னோட வேலையை நான் பார்த்துட்டு போறேன்” என்று அப்பொழுதும் வீம்பாய் முறுக்கிக்கொள்பவளை எப்படி தன் வீட்டில் இருக்க வைப்பது என்று நினைக்கையில் அவனுக்கு அலுப்பாய் இருந்தது. நந்தகோபாலன் தன் மனைவியிடம் அலைப்பேசியில் அனைத்தும் கூற சரியாய் அப்பொழுது வெளியே இவர்கள் இருவரின் வாக்குவாதமும் அகல்யாவிற்கு கேட்க அவரே வெளியே வந்தார்.

 

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.