(Reading time: 11 - 21 minutes)

ப்ரியாவிற்கோ தானே வசமாய் வந்து மாட்டிக்கொண்டது போல ஒரு உணர்வு. "அமைதியா ரூம்லயே இருந்து இருக்கலாம்..... ஹெல்ப் பண்ணவா னு நானே தான் கேட்டேன் இப்போ அவங்க ரூம்க்கு போக முடியாதுனு எப்படி சொல்றது....." என்று அவள் யோசித்துக்கொண்டிருக்க.... "மேல போய் ரைட்ல சைடு செகண்ட் ரூம் டா..." என்று அவள் அதற்காக தான் காத்திருக்கிறாள் என்று அகல்யா ஊக்க வேறு வழியின்றி மாடிப்படி ஏறினாள் ப்ரியா. 

 

சமையலறையில் சுதாவோ "அம்மா நந்து தம்பியே வந்து தான காபி கேப்பாங்க..... இப்போ என்ன மா என்னென்னமோ சொல்றிங்க அந்த பொண்ணு கிட்ட ......" என்று அதுவரை தனக்கு இருந்த சந்தேகத்தை கேட்க அகல்யாவோ சிரித்தபடியே "இப்ப இருந்தே என் மருமகளை பழக்கப்படுத்துறேன் சுதா....." என்று கூறினார். "என்னது மருமகளா.... அடியாத்தி.!!!!!!" என்று தன் மோவாயில் கையை வைத்தாள் சுதா. "ஆமா டி.... ப்ரியா தான் இந்த வீட்டு மருமக.... நந்து அவளை தான் விரும்புறான் அது தான்" என்று பேச "அது இருக்கட்டும் மா..... ஆனா கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி செய்றது சரியா????" என்று கேட்க "அந்த பொண்ணு சீக்கிரம் கல்யாணத்துக்கு ஒத்துக்கணும்னு தான் டி இதெல்லாம்..... இப்போ வேலையைப் பாரு....." என்று சொல்லிவிட்டு சமையலில் கவனமானார் அகல்யா. 

 

இது தான் அந்த வீட்டில் நடக்கும் நிகழ்வு.... சுதா அந்த வீட்டில் பணிபுரிபவள் தான். ஆனால் அந்த வீட்டின் சக மனுஷி போல தான் அனைவரும் அவரிடம் பேசுவார்கள். குழந்தைகள் இல்லாத சுதாவும் அவள் கணவன் மாரிமுத்துவும் கடந்த பதினைந்து வருடங்களாக அந்த வீட்டில் வேலை பார்த்துக்கொண்டு வீட்டின் பின்புறம் உள்ள பணியாளர் குடியிருப்பில் தங்கியிருக்கின்றனர். மாரிமுத்துக்கு சில சமயங்களில் ஓட்டுநராகவும் மற்ற நேரங்களில் தோட்டக்காரனாகவும் பணி. சுதாவிற்கோ சமயலறையில்..... இருவருக்கும் மூன்று வேலை உணவும் இவர்களது இல்லத்தில் தான். 

 

தயங்கி தயங்கி மாடிப்படி ஏறிய ப்ரியாவோ நந்தனின் அறைவாசலில் நின்று "எப்படி உள்ளே போறது...?" என்று யோசித்துக்கொண்டிருந்தாள். ஆழ மூச்சை இழுத்து விட்டவள் அறையினுள் நுழைந்தாள். கிங் சூட் ரூம் போல அறையின் நடுவே பெரிய மெத்தை... கதவின் இடதுப்புறம் ஒரு சோபா அதன் அருகே அலமாரிகள்... கதவின் வலதுபுறம் கொஞ்ச தூரத்தில் இன்னொரு அறைக்கான கதவு அதுவும் திறந்து விட்டிருக்க... அங்கே படிப்பதற்கான புத்தகங்கள் ஒரு கம்ப்யூட்டர் என ஸ்டடி ரூம் போல இருந்தது. மெத்தைக்கு பக்கவாட்டில் கொஞ்சம் தள்ளி பால்கனி போன்ற அமைப்பு... அதற்கு கண்ணாடியிலான கதவு. அந்த பால்கனியில் ஒருவர் மட்டுமே அமரும்படியான இருக்கை மரத்தினால் ஆன ஒரு ஊஞ்சல் என தோட்டத்தை பார்க்கும் படி அழகாய் அமைந்திருந்தது அந்த இடம். 

 

ப்ரியாவின் கண்களோ மெத்தையில் நந்தன் இல்லாமல் இருக்க அந்த அறையை சுற்றி சுற்றி பார்த்தாள். எங்கும் அவன் தென்படாததால் பின்னே திரும்பினாள்... அங்கே நந்தனோ கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு அவளையே சுவாரசியம் பொங்க பார்த்துக்கொண்டிருந்தான். ஷார்ட்ஸும் பனியனும் அணிந்து வியர்வையை துடைக்கவென தோளில் ஒரு துண்டுடன் உடற்பயிற்சி கூடத்தில் இருந்து வந்திருப்பான் போல... உடற்பயிற்சி செய்ததால் முத்து முத்தான வியர்வை துளிகள் முகத்தில் ஆங்காங்கே திரண்டிருக்க ஆணழகனாய் நின்றுக்கொண்டிருந்தான். 

 

அவனை பார்க்க வேண்டியவளோ அவன் முன் தலையை குனிந்தபடியே நின்றிருந்தாள். நந்தனை இதுவரை மருத்துவமனையிலும் கல்லூரியிலும் மட்டுமே பார்த்திருக்கிறாள் இரவு அவளுடன் நந்தன் பேசிய பொழுதுகூட எப்பொழுதும் போன்றே உடை அணிந்திருந்தான். அவனது வீட்டில் வெகு இயல்பாய் அவள் அவனை பார்ப்பது இதுவே முதல்முறை. அவனை பார்த்த அந்த நொடியில் தலையை குனிந்தவள் தான் இன்னும் நிமிர்த்தவில்லை. 

 

"இங்க என்ன பண்ற கிருஷ்ணா???" என்ற நந்தனின் கேள்வியில் அவனை பார்த்தவள்... "நீங்க எழுந்ததும் காபி கேப்பிங்கனு அத்.... அத்தை... குடுத்துவிட்டாங்க" என்று திக்கி திணறி அவள் மொழிய... "இது என்ன டா புது கதை....... மா இது எல்லாம் உங்களோட வேலையா... தேங்க்ஸ் மா" என்று மனதினில் தன் அன்னைக்கு நன்றி சொன்னவன் அவள் அருகில் நெருங்கி வந்து காபியை மற்றும் எடுத்துக்கொண்டான். 

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.