(Reading time: 9 - 17 minutes)
Irulum oliyum
Irulum oliyum

ஒன்றாகத் தான் இருந்தது. சாவித்திரியின் சம்மதத்தை, ஸரஸ்வதி அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாள். கூடத்தில் இருந்தவர்கள் ஏதோ வேலையாக வெளியே சென்றதும் ஸரஸ்வதி, சாவித்திரியின் அருகில் சென்று உட்கார்ந்தாள். பிறகு சங்கோசத்துடன், ”என் அத்தானை உனக்குப் பிடித்திருக்கிறதா? சொல்லிவிடு. நான் ரகசியமாக இந்த விஷயத்தை அவனிடம் சொல்லி விடுகிறேன்" என்று கேட்டாள். சாவித்திரி மெதுவாகத் தலையை அசைத்து விட்டு மௌனமாக உட்கார்ந்திருந்தாள்.

”பெண்ணின் மன ஆழத்தை இன்னொரு பெண்ணே புரிந்து கொள்வது கஷ்டம்” என்பதை ஸரஸ்வதி உணர்ந்திருக்க மாட்டாள். சிலர் வெகுளியாக இருக்கிறார்கள். மனத்தில் ஒன்றையும் ஒளித்து வைக்கமாட்டார்கள். படபடவென்று பேசிவிடுவார்கள். சிலரின் மன ஆழத்தில் என்ன எண்ணங்கள் இருக்கின்றன -என்பதையே எவ்வளவு முயன்முலும் புரிந்து கொள்ள முடியாது. ஸரஸ்வதி வெள்ளை மனம் படைத்தவள்; கபடம் இல்லாதவள்; சூதுவாதுகளுக்கு மனத்தில் அவள் இடமே அளிக்கவில்லை.

சாவித்திரி, வார்த்தைகளையே அளந்து பேசும் சுபாவம் படைத்தவள். உள்ளத்தில் ஏற்படும் உணர்ச்சிகளை அப்படியே முகத்தில் காட்டி, ஒரு நொடிப் பொழுதில் எல்லோரையும் மட்டந் தட்டிவிடுவாள் அவள். பேசாமல் மௌனமாக உட்கார்ந்திருக்கும் சாவித்திரியை ஸரஸ்வதி கேலியாகப் பார்த்து, ”இப்பொழுது என்னிடம் ஒன்றும் சொல்ல மாட்டாய். அப்படித் தானே? அத்தானிடமே நேரில் சொல்லப் போகிறாயாக்கும்! ஹும்............" என்று பெருமூச்சு விட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றாள்.

இவ்வளவு நேரமும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பாட்டிக்கு இப்போது தான் சந்தர்ப்பம் கிடைத்தது. ” இதென்னடீது அதிசயம்! பெண் பார்க்க வந்தால் அவளைப் பாடச் சொல்றதைத் தான் கண்டதுண்டு; கேட்டதுண்டு. இங்கே தலைகீழ்ப் பாடமா பயிருக்கே! யாரோ ஒருத்தி வருகிறாள்; இல்லாத உறவெல்லாம் கொண்டாடி; புருஷா இருக்கிறதையும் பார்க்காமே பாட்டுக் கச்சேரி செய்கிறாள். இதுகளும் பேஷ் பேஷ்னு தலையாட்டுகிறதுகள்! ஹும் . . . . நன்றாகவே யில்லை" என்று சரளி வரிசை பாட ஆரம்பித்து விட்டாள். ஆனால் அவளை யாரும் சட்டை செய்வதாக இல்லை. குறை சொல்வது தான் அவள் கூடப் பிறந்த குணமாயிற்றே என்று உதறிவிட்டு, மேற்கொண்டு ஆகவேண்டியதைக் -கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

----------------

தொடரும்

Go to Irulum oliyum story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.