(Reading time: 6 - 11 minutes)
Irulum oliyum
Irulum oliyum

கானத்தைக் கேட்பதற்காகவே தவம் கிடக்கிறேனே' என்று சொல்லாமல் சொல்லின. புன்னகை ததும்ப நிலத்தைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந் திருந்த ஸரஸ்வதி திடீரென்று நிமிர்ந்து பார்த்து, "சாவித்திரி! பெண் பார்க்க வந்த அன்றே எங்களை எல்லாம் நீ ஏமாற்றி விட்டாய். அத்தானுடைய விருப்பப்படி என்னிடந்தான் நீ பாட்டுக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏதோ ஒரு பாட்டு உனக்குத் தெரிந்தவரையில் பாடு பார்க்கலாம்" என்று கொஞ்சுதலாகக் கூறினாள்.

எதிலும் கலந்து கொள்ளாமல் எங்கோ பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த சாவித்திரி, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்: பிறகு கடுகடுவென்றிருந்த முசுபாவத்தைச் சட்டென்று மாற்றிக் கொண்டு புன்சிரிப்புடன், "எனக்குத் தெரியாது என்று அன்றே சொல்லி இருக்கிறேனே" என்றாள்.

"பேஷ், பேஷ்... பாட்டு பாட்டு என்று மாய்ந்துபோனவனுக்கு இந்த மாதிரி மனைவியா வந்து வாய்க்க வேண்டும்? ரொம்ப அழகுதான் போ" என்று ரகுபதியின் அத்தை பரிகாசம் செய்யவே, சாவித்திரிக்கு ரோஷம் பொத்துக்கொண்டது. சிறிது அதட்டலாக, "எனக்குப் பாடத் தெரியாது என்றால் பேசாமல் விட்டுவிட வேண்டும். இது என்ன தொந்தரவு?" என்று கூறி முகத்தை 'உர்' ரென்று வைத்துக்கொண்டாள்.

இதுவரையில் பேசாதிருந்த ரகுபதி ஸரஸ்வதியின் பக்கம் திரும்பி, "ஸரஸு! நீதான் பாடேன். இதில் நான், நீ என்று போட்டிக்கு என்ன இருக்கிறது?" என்று கூறினான்.

ஸரஸ்வதி சிரித்துக்கொண்டே உள்ளே போய்த் தன் வீணையை எடுத்து வைத்துக்கொண்டு ஸ்ருதி சேர்க்க ஆரம்பித்தாள். தூரத்தில் நின்று இதுகாறும் ஸரஸ்வதியின் பரிகாசங்களைக் கவனித்துவந்த சந்துரு பந்தலுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டான்.

ஸ்ருதி சேர்த்து முடிந்ததும் ஸரஸ்வதி ரகுபதியைப் பார்த்து, "அத்தான்! எந்தப் பாட்டை வாசிக்கட்டும்?" என்று கேட்டாள். அதற்குள் ராஜமையர், ”குழந்தை! 'ஷண்முகப்-பிரியா' ராகத்தை நீ அற்புதமாக வாசிப்பாயாமே. எல்லோரும் சொல்லுகிறார்கள்: அதையே வாசி, அம்மா கேட்கலாம்" என்றார்.

வீணையின் மதுர ஒலி, அந்த மோகன நிலவிலே தேவலோகத்துக் கின்னரர்கள் எழுப்பும் யாழின் ஒலிபோல் இருந்தது. குழந்தைகள் கொஞ்சும் மழலையைப்போல் மனதுக்கு இன்பமளித்தது. மகான்களின் உபதேச மொழிகளைக் கேட்டு ஆறுதல் கொள்ளும் மன நிலையை அங்குள்ளவர்கள் அடைந்தார்கள். தெய்வ சந்நிதானத்தில் நிற்கும் பரவச நிலையைச் சிலர் அடைந்தார்கள். சந்துருவின் உள்ளம் கிளுகிளுத்தது. நொடிக்கொரு முறை அன்புடன் ஸரஸ்வதியை அவன் பார்த்த போது அவன் பார்வையின் தாக்குதலைச் சகிக்க முடியாமல் ஸரஸ்வதி தலையைக் குனிந்து கொண்டே பாடினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.