(Reading time: 7 - 14 minutes)
Irulum oliyum
Irulum oliyum

Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 15 - ஸரோஜா ராமமூர்த்தி

இருளும் ஒளியும் : 15 'மாலே மணி வண்ணா !'

ல நாள் முயற்சியின் பேரில் ரகுபதி அந்த ஊரில் ஒரு சிறு சங்கீத மண்டபம் கட்டி முடித்திருந்தான். அதன் திறப்புவிழாவை அவன் வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்றும் தீர்மானித்திருந்தான். மனைவியுடன் வெகு உற்சாகமாக அவன் அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆனால், பிறந்தகம் சென்ற சாவித்திரி மூன்று மாதங்களாகியும் அவனுக்கு ஒரு கடிதங்கூடப் போடாததை நினைத்துத்தான் அவன் மனம் சதா ஏங்கிக்கொண்டிருந்தது. 'சௌக்கியமாக ஊர் போய்ச் சேர்ந்தேன்' என்று கடிதம் போடும்படி அன்று ரெயிலடியில் அவளிடம் தான் கேட்டுக்கொண்டும் அவள் தன்னை மதிக்கவில்லையே என்று ரகுபதி எண்ணி வருந்தாத நாளில்லை. ஆசையுடன் வாங்கிவந்த வீணை அவன் அறையில் ஒரு மூலையில் கேட்பாரற்றுத் தூசி படிந்து கிடந்தது. அன்று நடந்த ஒரு சிறு சம்பவம் மனைவியையும் கணவனையும் பிரித்து எவ்வளவு பெரிய பிளவை ஏற்படுத்திவிட்டது! குடும்ப வாழ்க்கையில் இன்பமும், அமைதியும் நிலவ வேண்டிய நாட்களில் மன அமைதி குறைந்து வாழ்க்கையில் கசப்பல்லவா ஏற்பட்டிருக்கிறது?

மன நிம்மதியை இழந்த ரகுபதி தன் அறைக்குள் மேலும் கீழுமாக உலாவிக்கொண்டே சிந்தனையில் மூழ்கி இருந்தான். எதிரே மேஜைமீது திறப்பு விழாவுக்காக அனுப்ப வேண்டிய அழைப்பிதழ்கள் வைக்கப்பட்டிருந்தன. தான் நடத்தப் போகும் இந்த விழாவைக் குறித்துத் தன் மாமனாருக்கும் அன்றைய தபாலில் நான்கு வரி ஒரு கடிதம் எழுதிப் போட்டிருந்தான். அதில் அவரைக் கட்டாயம் வரவேண்டும் என்றும் எழுதி இருந்தான். ஒருவேளை பெண்ணைச் சமாதானப்படுத்தி அவர் அழைத்து வந்தாலும் வரலாம் அல்லவா? சாவித்திரி தன் தகப்பனாருடன் வந்துவிட்டால் பழைய விஷயங்களை எல்லாம் மறந்துவிடவேண்டும். அதைப்பற்றித் தப்பித் தவறிக் கூட அவளிடம் பிரஸ்தாபிக்கக்கூடாது என்று ரகுபதி தீர்மானித்துக் கொண்டான்.

அவன் சிந்தனையைக் கலைப்பது போல் கீழே பூஜை அறையை மெழுகிப் படத்தருகில் வித விதமாகக் கோலம் போட்டுக்கொண்டே மெல்லிய குரலில் ஸரஸ்வதி பாடிக் கொண்டிருந்தாள். மாடியில் ரகுபதியின் அறைக்கு வெளியே இருக்கும் வராந்தாவில் நின்று பார்த்தால் அறையும் நன்றாகத் தெரியும். குந்தலவராளி ராகத்தில் உருக்க மாக "மாலே மணி வண்ணா' என்கிற ஆண்டாளின் பாசுரத்தை அவள் பாடுவதைக் கேட்டு வராந்தாவின் கைப்பிடிச்சுவர் மீது சாய்ந்து நின்றுகொண்டு அதை ரசிக்க ஆரம்பித்தான் ரகுபதி. அப்பொழுது மாலை நேரம். எல்லோர் வீட்டிலும் விளக்கேற்றி விட்டார்கள். வித விதமாக ஆடைகள் உடுத்து இளம் பெண்களும் சிறுமிகளும் கையில் குங்குமச் சிமிழுடன் ஊரழைக்க வெளியே புறப்பட்டுக்கொண்டிருந்தனர்.

2 comments

  • இந்தமாதிரி கொடுமை எந்தக் குடும்பத்துக்கும் ஏற்படக்கூடாது! எல்லாம் ஒரு பெண்ணின் ஈகோவினால்!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.