(Reading time: 8 - 15 minutes)
Irulum oliyum
Irulum oliyum

கேட்டாள் ஸரஸ்வதி.

"ஆமாம். அவள் இங்கே எதற்காக இருக்க வேண்டும்? உன்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள், அழைத்து வந்தேன்" என்றாள் அலமு.

சாவித்திரி புக்ககத்துக்கு வந்தாள். வந்து இரண்டு மூன்று மாதங்களுக்குள் ஊருக்குப் போய்விட்டாள். மறுபடியும் ஸரஸ்வதியின் வாழ்க்கை தனியாகவே கழிந்தது. திடீரென்று தங்கம் வந்தாள், பெயரைப்போல் ஒளியை வீசிக்கொண்டு! சாவித்திரியைப்போல் இல்லாமல் கபடமற்றுப் பழகினாள். ஸரஸ்வதியுடன் பாடினாள். "ஸரஸு அக்கா!" என்று சகோதர பாவம் கொண்டாடி அருமையாக அழைத்தாள்! ஸரஸ்வதியின் மனத்தில் இடமும் பிடித்துக்கொண்டாள். பத்தரைமாற்றுப் பசும் பொன்னை உருக்கி வளைப்பது போல் தங்கத்தைப் பலவிதங்களிலும் சீர்திருத்தி சமூகத்தில் உயர்ந்தவளாகச் செய்ய முடி.யும் என்று ஸரஸ்வதி கருதினாள். அவளிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்குக் கொண்டுவரமுடியும் என்று நினைத்தாள்,

ஆனால் தங்கம் ஊருக்குப் போகப்போகிறாள். கிராமத்திலே இருண்ட ஓட்டு வீட்டின் மூலையில் ’மினுக் மினுக்' கென்று எரியும் அகல் விளக்கைப்போல் அவளும் கிராமத்திலே இருண்ட வீட்டில் மங்கிய வெளிச்சத்தைப் பரப்பிக்கொண்டு இருப்பாள். இந்தப் பெண்-சமூகத்தில் எல்லா நலங்களையும் பெற்று வாழ வேண்டிய தங்கம் - யாராவது ஒரு வயோதிகனுக்கோ, வியாதிக் காரனுக்கோ, தன் கழுத்தை நீட்டி, விவாகம் என்கிற பந்தத்தைப் பிணைத்துக் கொள்ளாமல் - இருக்கவேண்டுமே! அரும்பு வெடித்து மலர்வதற்கு முன்பே கசக்கி எறியப்படாமல் இருக்க வேண்டுமே! அப்படி - அவளைக் காப்பாற்ற யார் வரப் போகிறார்கள்?

ஸரஸ்வதியின் மென்மையான மனம் புண்ணாக வலித்தது. 'இன்று அவள் அந்த வீட்டுக் கூடத்தில் கண்ட தங்கத்தைப் போல் தமிழ் நாட்டில் ஆயிரம் ஆயிரம் 'தங்கங்கள்அவதிப்படுகிறார்கள். ஏழைப் பெண்கள் என்கிற காரணத்தினால் நசுக்கப் படுகிறார்கள் என்பதை நினைத்தபோது, ஏனோ அவள் மனத்தை ஆயிரம் ஊசிகளால் குத்தும் வேதனையை அடைந்தாள். மனத்தில் குமுறும் வேதனையுடன் ஸரஸ்வதி அங்கிருந்து சென்று தங்கம் உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு வந்தாள். அவள் கரங்களைப் பற்றிச் சேர்த்துத் தன் கைகளில் பிணைத்துக்கொண்டு, "தங்கம்! நீ ஊருக்குப் போகிறாயாமே தங்கம்? ஏன், உனக்கு இந்த ஊர் பிடிக்கவில்லையா என்ன?" என்று கேட்டாள்.

தங்கத்தின் கண்களிலும் கண்ணீர் தளும்பி நின்றது.

"பிடிக்காமல் என்ன அக்கா? இருந்தாலும், எத்தனை நாளைக்கு நான் இங்கே இருக்க முடியும்? தை பிறந்தால் எனக்கும் ஒரு வழி பிறக்காதா என்று ஏங்கிக் காத்திருக்க வேண்டாமா நான்? அத்துடன், என் ஊரில் எனக்கு ஏற்படும் இன்பம் மற்ற இடங்களில் ஏற்படுவதில்லை அக்கா.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.