(Reading time: 8 - 16 minutes)
Irulum oliyum
Irulum oliyum

Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 22 - ஸரோஜா ராமமூர்த்தி

இருளும் ஒளியும் : 22. தங்கத்துடன் ரகுபதி

டுத்த நாள் அலமுவும், தங்கமும் ஊருக்குப் புறப்படுவதாக இருந்தார்கள். வீட்டைச் சுற்றிச் சுற்றி வளைய வரும் தங்கம் ஊருக்குப் போய்விட்டால் வீடு வெறிச்சோடிவிடும். தெருவில் முத்து முத்தாக யார் கோலம் போடுவார்கள்? பூஜைக்கு விடியற் காலை யார் மலர் கொய்து வைப்பார்கள்? ஸரஸ்வதி அவ்வேலைகளைச் செய்தாலும், தங்கம் செய்வதில் தனியான தொரு அழகைக் கண்டு ரசித்தான் ரகுபதி. "அத்தான்! உங்களுக்கு மிளகு வடை என்றால் ஆசையாமே" என்று கரகரவென்று அந்தப் பலகாரத்தைச் செய்து தட்டில் வைத்துக் கொண்டுவந்து வைத்தாள் தங்கம், ஒரு நாள். எல்லோருடைய மனதையும் தான் கவர வேண்டும்; எல்லோருக்கும் தான் இனியவளாக நடந்துகொள்ள வேண்டும் என்கிற ஆசையுடன் அனைவரும் மெச்சும்படியாக நடந்து கொண்டாள் அவள்.

பாவம்! நல்ல இடமாகப் பார்த்துக் கொடுத்தால் - பெண் சௌக்கியமாக வாழ்வாள். அவசரப்பட்டு எங்காவது பாழுங் கிணற்றில் தள்ளுகிற மாதிரி தள்ளி விடாதீர்கள்”. அலமு என்று ஸ்வர்ணம் தன் நாத்தனாரிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தாள்.

அன்று நடு மத்தியான்னத்தில் மாடியில் நாற்காலியில் சாய்ந்து யோசனையில் ஆழ்ந்திருந்தான் ரகுபதி. இன்று இல்லாவிடில் நாளை வருவாள் அல்லது கடிதமாவது எழுதுவாள் என்று தினம் தினம் எதிர்பார்த்து ஏமாந்து போகவே, ரகுபதியின் மனத்தில் ஒருவித அசட்டு எண்ணம் - சபல புத்தி தலை எடுக்க ஆரம்பித்தது. சர்க்கரையைவிட்டு இனிப்பை எப்படிப் பிரிக்க முடியாதோ, அம்மாதிரி தாம்பத்திய அன்பினால் இருவரின் உள்ளங்களும் பிரிக்க முடியாதபடி ஒன்றிய நேசம், சாவித்திரிக்கும், ரகுபதிக்கும் ஏற்படவில்லை. மிக மிகக் குறுகிய காலத்துக்குள் அவனுடைய வாழ்க்கை சுசந்து வழிந்தது. 'இளம் மனைவியுடன் ஆனந்தமாக வாழ்க்கை நடத்தப்போகிறோம்' என்று: அவன் கட்டிய கோட்டை தகர்ந்து விழுந்தது. அதனால், மனம் ஓடிந்து போயிருந்த அவன் மனக்கண் முன்பு தங்கம் தோன்றி மறைந்துகொண்டிருந்தாள். அவளிடம் அவனுக்கு அலாதியான ஒருவித பாசம் ஏற்படுவதை உணர்ந்தான். 'நாளைக்கு அவள் இங்கிருந்து போய்விடுவாள். நானும் அவளுடன் கிராமத்துக்குப் போய்விடுகிறேன். பிறகு?' என்று யோசித்தான் ரகுபதி, ’பிறகு என்ன? அந்தக் கர்வம் பிடித்தவளுக்குப் படிப்பினையாக ஆடம்பரமில்லாமல், ஒருவருக்கும் சொல்லாமல் தங்கத்தைக் கல்யாணம் செய்து கொண்டுவிடுகிறேன். என்னை யார் என்ன செய்யமுடியும்?' என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டான்.

கீழே ஸரஸ்வதி பைரவி ராகத்தில் அருணாசலக் கவியின் 'யாரோ இவர் யாரோ' என்கிற கீர்த்தனத்தில் சரணத்தைப் பாடிக்கொண்டிருப்பது கேட்டது. 'அந்த நாளில் சொந்தம் போல

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.