(Reading time: 7 - 14 minutes)
Irulum oliyum
Irulum oliyum

படித்திருக்கும் மனோதத்துவமும் அவளுக்குத் தெரிய நியாயமில்லை. வான வெளியைப்போல் பரிசுத்தமானதும், தெளிந்த நீரைப்போன்ற களங்கமற்ற மனத்தைப் படைத்த தங்கம் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்துப் பெண். பெரிய பெரிய சாஸ்திரங்களையும், படிப்புகளையும் அவள் எப்படிக் கற்றிருக்க முடியும்?

மறுபடியும், அமைதியான சாலை வழியாகத் தங்கமும், ரகுபதியும் மெதுவாக நடக்க ஆரம்பித்தார்கள். ரகுபதியின் மனம் ஒரேயடியாக இருண்டு கிடந்தது. வான வீதியில் எண்ணற்ற தாரகைகள் பளிச்சிட்டன. வளர்பிறை ஆதலால் மூளிச் சந்திரன் மங்கலாகப் பிரகாசித்துக்கொண்டிருந்தான். தங்கம் அவன் அருகிலேயே வந்து கொண்டிருந்தாள். அவள் தலையில் சூட்டி இருந்த முல்லைப் புஷ்பங்களின் மணம் 'கம்' மென்று வீசியது. தொலைவில் ஊரின் ஆலய கோபுரம் தெரிந்தது. சோர்ந்த மனத்துடன், ரகுபதி எதுவும் பேசாமல் விரைவாக நடந்தான். வீட்டிலே பெரியவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்து தங்கமும் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

விரைவில் கோயிலுக்கு முன்பாக இருவரும் வந்துவிட்டார்கள். கோயிலின் வாயிற் கதவு திறந்திருந்தது. மூலஸ்தானத்தில் கோதண்டத்துடன் நிற்கும் ஸ்ரீ ராமபிரானின் உருவம் கம்பீரமாகத் தெரிந்தது. பக்கத்திலே என்றும் எப்பொழுதும் இணை பிரியாமல் வசிக்கும் சீதா தேவியைப் பார்த்தான் ரகுபதி. "ஹே பிரபு! என் மனத்தில் ஏற்பட்டிருக்கும் மாசுமருக்களைத் துடைத்துவிடு. பாபத்தில் ஆழ்ந்துவிடுவேனோ என்னவோ பகவானே!' என்று உள்ளம் உருக வேண்டிக்கொண்டான் அவன். வீட்டை அடைந்ததும் மனத்தின் பாரம் குறையாமல் போகவே, ரகுபதி தளர்ச்சியுடன் நேராக மாடியில் தன் அறைக்குச் சென்று படுக்கையில் சாய்ந்துகொண்டான்.

"உடம்பு சரியில்லையா என்ன, ரகு?"" என்று சுடச்சுட பாலைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு ஸ்வர்ணம் மகனின் நெற்றியில் கையை வைத்துப் பார்த்தாள். சில்லென்று இருக்கும் ஐப்பசி மாத்த்து இரவில் ரகுபதியின் நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பி இருந்தன. பாலைத் தாயின் கையிலிருந்து வாங்கி மேஜைமீது வைத்துவிட்டு, அவள் கரங்களைச் சேர்த்துத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டான் ரகுபதி.

"அம்மா! என்னால் நீ ஒருவித சந்தோஷத்தையும் அநுபவிக்கவில்லையே. உன்னைப் பலவிதத்திலும் நான் ஏமாற்றி விட்டேன் அம்மா. என்னை மன்னித்துவிடு" என்றான்.

" அசட்டுப் பிள்ளையாக இருக்கிறாயே ரகு? உன் மனசில் இருப்பது எனக்குத் தெரியாதா? தலை தீபாவளிக்கு ஊருக்குப் போய் வந்தால் எல்லாம் சரியாகிவிடும். பாலைச் சாப்பிட்டு விட்டுத் தூங்கு" என்று அன்புடன் கூறிவிட்டு ஸ்வர்ணம் கம்பளிப் போர்வையை உதறி ரகுபதிக்குப் போர்த்திவிட்டாள்.

------------

தொடரும்

Go to Irulum oliyum story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.