(Reading time: 9 - 17 minutes)
Irulum oliyum
Irulum oliyum

"நீ பேசுகிறது நன்றாக இருக்கிறதே குழந்தை! உன் அப்பாவுக்குத் தாம் தாத்தா ஆகவேண்டும் என்று ஆசை ஏற்பட்டிருக்கிறது. நீ விவாகமே வேண்டாமென்கிறாயாம். ஒரு பெண் தனியாக வாழ்க்கை நடத்துவது கடினம் என்பது உனக்குத் தெரியாத விஷயமில்லையே. ஸ்ரீரங்கப்பட்டணம் வந்து நீ சன்னியாசினியாவதற்கு நான் ஒருகாலும் உனக்கு உதவி புரியமாட்டேன் ஸரஸ்வதி! ஆமாம்...." என்று சிரித்துக் கோபால தாஸர் ஸேரஸ்வதியை உரிமையுடன் அதட்டினார்.

ஸரஸ்வதி சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தாள். பிறகு, நண்பரைப் பார்த்துப் பணிவுடன், "இதென்ன மாமா, இப்படிப் பேசுகிறீர்கள்? எந்த விஷயத்திலும் ஆசை கொள்வதற்கு மனந்தானே காரணம்? என் மனம் என்னவோ கல்யாணத்தைத் தற்சமயம் விரும்பவில்லை. எங்கள் தமிழ் நாட்டில் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்ரீவில்லி-புத்தூரில் பெரியாழ்வார் என்னும் மகானுக்குக் கோதை என்று ஒரு மகள் கிடைத்தாள். அத்தெய்வக் கன்னி சதாகாலமும் கண்ணனையே அகத்துள் இறுத்தி பக்தி செலுத்தினாள்; காதல் கொண்டாள்; அன்பு பூண்டாள். அகத்திலே அவனுக்கன்றி வேறு ஒருவருக்கு இடம் தர மறுத்தாள்; பெரியாழ்வார், மணப்பருவம் எய்தும் தம் மகளுக்குத் தகுந்த மணாளன் கிடைக்க வேண்டுமே என்று என் தகப்பனார் விரும்பியதைப் போலத்தான் விரும்பினார். ஆனால், அவள் உள்ளத்தை ஆட்கொண்ட மணிவண்ணன் அவளையும் ஆட்கொண்டு அருள் புரிந்தான். தம் மகளால் ஒரு படி உயர்ந்து விட்டார் தந்தை!" என்றாள்.

கோபால தாஸரின் கண்கள் அருவியாக மாறி இருக்க வேண்டும். காவிரியின் பிரவாகத்தைப்போல் அவர் கண்கள் கண்ணீரைக் கொட்டின. அவர் ஸரஸ்வதியின் வார்த்தை களுக்குப் பதில் கூறாமல் புரந்தரதாஸரின் அழகிய பாடலைப் பாட ஆரம்பித்தார்:

" பிருந்தாவனத்தில் ஆடுபவன் யார்?

சந்திர வதனனைப் பார்க்கலாம் வாடி-அடி தோழி!"

தொலைவில் கீழ்வானத்தில் சந்திரிகை முளைத்துவிட்டது. ’சிலு சிலு' வென்று வீசும் மெல்லிய காற்றில் இந்த இசை வெகு தூரம் பரவி ஒலித்தது. ஸ்ரீரங்கப்பட்டண வாசிகள் இந்த இசை யைப் பல முறைகள் கேட்டு அகம் உருகி இருக்கிறார்கள். அன்றும் அப்படித்தான்.

----------

தொடரும்

Go to Irulum oliyum story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.