(Reading time: 7 - 14 minutes)
Irulum oliyum
Irulum oliyum

Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 35 - ஸரோஜா ராமமூர்த்தி

இருளும் ஒளியும் : 35. ' நான் ஏழைப் பெண்'

தீபாவளிப் பண்டிகைக்கு அப்புறம் கிராமம் மறுபடியும் அமைதியில் ஆழ்ந்துவிட்டது. தங்கம் முன்னைப்போல ’ரகுபதி' யிடம் அதிகம் பேசுவதில்லை. 'படித்தவர் என்று சொல்லிக் கொள்கிறாரே தவிர, கொஞ்சமாவது நல்லது கெட்டது தெரிய வில்லையே இந்த அத்தானுக்கு!' என்று நினைத்துக்கொண்டாள் தங்கம். ஏற்கனவே ஊரார் அவளைக் கல்யாணம் ஆகாமல் குதிர் மாதிரி நிற்பதாக வர்ணித்து வந்தார்கள். குதிரை மாதிரி திரிவதாகவும் கதை கட்டியிருந்தார்கள். வாயாடி என்று வேறு நாமகரணம் சூட்டி இருந்தார்கள். கன்னாபின்னா' என்று பல்லைக் காட்டும் கிராமத்து வாலிபர்களுக்குத் தங்கத்தைக் கண்டாலே சிம்ம சொப்பனம்! ஏரிக்கரையில் அவளிடம் அசம்பாவிதமாக நடந்து கொண்ட வாலிபன் ஒருவனுக்குத் தங்கத்தை நினைத்த போதெல்லாம் முதுகிலே யாரோ சாட்டையால் 'சுளீர் , சுளீர்' என்று அடிப்பது போல் பிரமை ஏற்படுவதுண்டு. துணிகளைத் துவைக்கும் தங்கத்தின் எதிரில் சிரித்துக் கொண்டே நின்றதன் பலனை அனுபவித்திருந்தான் அவன். தங்கம் அவனை ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை. பச்சைத் தண்ணீரில் புடைவையை நனைத்து முறுக்கிப் பிழிந்து கல்லின் மீது 'பட் பட்டென்று அடித்தாள். வேகமாக சுழற்றிச் சுழற்றி வீசினாள். 'சுளீர்' என்று ஜலம் வேகமாக வாலிபனின் முகத்தில் தெறித்தன. அவன் முதுகைத் திருப்பிக்கொண்டு நின்றபோது 'சுரீர்' என்று முதுகில் தெறித்தன. அவன் திரும்பிப் பார்த்தபோது தங்கம் புடைவையை முறுக்கிப் பிழிந்து கையை ஓங்கிக் கொண்டு நின்றிருந்தாள். வாலிபனின் எண் சாண் உடம்பும் ஒரு சாணாகக் குறுகியது. அன்றுமுதல் தங்கத்தை அவன் கோவிலில் வணங்கும் பர தேவதையாக நினைத்தான். அவள் இருக்கும் திசைக்கே ஒரு கும்பிடு போட் டான்! அவள் ரொம்பவும் கண்டிப்புக்காரி என்பதைக் கிராமத்து ஏழை ஜனங்கள் புரிந்து கொண்டிருந்தார்கள். தங்கம்மா எத்தனை வருசம் கல்யாணம் கட்டிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை அம்மா. அது துரோபதை மாதிரி தன்னைத்தானே காப்பாத்திக்கும். அஞ்சு புருசன் இருந்தும் துரோபதை அம்மாளை யாரம்மா காப்பாத்தினாங்க? நம்ப தங்கம்மாவுக்கு அந்தச் சாமர்த்தியம் இருக்குது. அர்ச்சுன ராஜாமாதிரி நல்ல புருசனா அதுக்குக் கிடைப்பாங்க. கவலைப்படாதீங்க!' என்று அலமுவுக்கு ஆறுதல் கூறுவார்கள்.

சிப்பியிலே நல்முத்து விளைகிறது. பட்டுப் புழுவில் அதி அற்புதமான பட்டு உற்பத்தியாகிறது. சேற்றிலே செந்தாமரை மலர்கிறது. ஈசன் வண்ண மலர்களில் மட்டும் துவைத் தேக்கி வைக்கவில்லை. அழகு விளைவதற்கு நல்ல இடங்கள் தாம் வேண்டும் என்பதில்லை. சமதிருஷ்டியுடன் அவன் எல்லா இடங்களிலும் அழகைத் தேக்கி வைத்திருக்கிறான். படித்த பெண்களுக்கு இல்லாத சில அரிய பண்பாடுகள் தங்கத்தினிடம் நிரம்பி இருந்தன.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.