(Reading time: 6 - 12 minutes)
Irulum oliyum
Irulum oliyum

Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 38 - ஸரோஜா ராமமூர்த்தி

இருளும் ஒளியும் : 38. 'இன்னும் கோபமா?'

ழகே உருவமாக இருந்த சாவித்திரி சில மாதங்களில் எப்படித்தான் மாறி விட்டாள்? கண்களைச் சுற்றிக் கருமை படர்ந்திருந்தது. 'கொழு கொழு'வென்று இருந்த கன்னங்கள் ஓட்டி உலர்ந்து போயிருந்தன. அவளுடைய சிவப்புக்கூட மாறி விட்டதாக வீட்டில் எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள். மகளைப் பார்த்துப் பார்த்து மங்களம் தனிமையில் கலங்கினாள். ஒவ்வொரு தினம் இரவில் சாப்பிடாமலேயே போய்ப் படுத்து விடுவாள் சாவித்திரி. நொடிக்கு ஒருதரம் ஆழ்ந்த பெருமூச்சு விடுவாள். மனக் கஷ்டத்தை யாரிடமாவது கொட்டி அழுது விடலாம் என்றால் அநுதாபத்துடன் யார் கேட்கப் போகிறார்கள்? சீதா இன்னும் விளையாட்டுப் பெண்ணாகவே இருக்கிறாள். ஒரு நொடியில் விஷயத்தைச் சொல்லித் தம்பட்டம் அடித்து விடுவாள். அப்பாவிடம் போய் 'என்னை உங்கள் மாப்பிள்ளையிடம் அனுப்பி விடுங்கள்' என்று எப்படிச் சொல்வது? சந்துருவின் எதிரில் நிற்கவே அவளுக்குப் பயமாகவும், வெட்கமாகவும் இருந்தது. தப்பித் தவறி ஏதாவது சொல்லிவிட்டால், 'உன்னை யார் போகவேண்டாம் என்கிறார்கள்? புறப்படு போகலாம்' என்று மூட்டை கட்ட ஆரம்பித்துவிடுவான்.

சந்துரு ஊருக்குப் புறப்பட்டுப் போன பிறகு சாவித்திரி காரணமில்லாமல் மகிழ்ச்சி யடைந்தாள். ஒரு சமயம் கலங்கினாள். 'அவர் வந்துவிடுவார்' என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். 'வராமல் இருந்துவிட்டால் நானே போய்விடுகிறேன். பிறந்த வீட்டில் எல்லோராலும் உதாசீனம் செய்யப்படுவதை விட.. அவர் கால்களில் விழுகிறேன்' என்று வைராக்கியத்துக்கு மனசைத் தயார் செய்தாள்.

மங்களம், வெந்நீர் அடுப்பு 'பூ' என்று ஊதினால் கூட, மாப்பிள்ளை வந்துவிடுவான் என்று நம்பி மகிழ்ந்தாள். 'அடுப்பு ஊதுகிறது. உன் அகமுடையான் வந்து விடுவான் - சாவித்திரி' என்று பெண்ணைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சொன்னாள். பெற்ற மனம் பித்துக் கொண்டது என்பதற்கு அவள் ஓர் உதாரணம்.

"காக்கை கத்துகிறது. அத்திம்பேர் வரப்போகிறார்" என்று சொல்லி ஆனந்தப்பட்டாள் சீதா. அந்த வார்த்தைகளை மறுபடியும் அவள் சொல்லிக் கேட்கவேண்டும் போல் சாவித் திரிக்குத் தோன்றியது.

"ஏண்டி சாவித்திரி! அத்திம்பேர் வரும் போது நீ எந்தப் புடைவையைக் கட்டிக் கொள்ளப் போகிறாயடி? கல்யாணத்துக்கு முன்பு உடுத்திக்கொண்டாயே முதன் முதல் கனகாம்பர வண்ணப் புடைவை, அதைத்தானே?" என்று அக்காவைக் கேட்டாள் சீதா.

" போடி! அது ஒன்றும் வேண்டாம். அதைக் கண்டால் எனக்குப் பிடிக்கவில்லை. உனக்கு அதைக் கொடுத்துவிடுகிறேனடி அம்மா" என்றாள் சாவித்திரி மகிழ்ச்சி பொங்கும் குரலில்.

2 comments

  • காதலர்களாக விட்டுவிடுவோம், கதாசிரியரை அல்ல; நிறைய எழுதுங்கள்!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.