(Reading time: 8 - 16 minutes)
Irulum oliyum
Irulum oliyum

Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 39 - ஸரோஜா ராமமூர்த்தி

இருளும் ஒளியும் : 39. கிருகப் பிரவேசம்

றுபடியும் ஸ்வர்ணம் தன் நாட்டுப் பெண்ணை வரவேற்க. ஆடி ஓடி வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். அடுத்த நாள் கார்த்திகைப் பண்டிகை. சமையலறை-யிலிருந்து ’படபட' வென்று நெல் பொரியும் சத்தம் கேட்டுக்கொண்டே யிருந்தது. பாகீரதி அம்மாமிதான் மறுபடியும் ஸ்வர்ணத்துக்கு உதவியாக வேலைகளைச் செய்ய வந்திருந்தாள். காலம் மாறிப்போய்விடும். குழந்தைகள் பெரியவர்களாகிறார்கள். வாலிப வயதுடையவர்கள் நடுத்தர வயதை அடைகிறார்கள். பிறகு கிழத்தன்மையை அடைகிறார்கள். மனிதர்கள் உருவத்தில் மாறுதல் ஏற்படலாம். குணத்திலே மாறுதல் அடையக்கூடாது. நேற்றுவரை சகஜமாகப் பழகியவர்களிடம் இன்று 'நீ யார்? உன்னால் எனக்கு என்ன ஆகவேண்டும்?' என்கிற தோரணையில் பழகக்கூடாது. பாகீரதி அம்மாமி என்றும், எப்பொழுதும் ஒரே சுபாவத்தையுடையவள். ரகுபதி மனைவியை அழைத்து வருகிறான் என்று கேள்விப்பட்ட வுடனேயே ஸ்வர்ணத்திடம் வந்தாள். 'பண்டிகைக்கு என்னால் ஆன உதவிகளைச் செய்கிறேன்' என்று கூறினாள். இவள் சாதாரணமாகத்தான் படித்திருக்கிறாள். கோர்வையாக நாலு வார்த்தைதள் கூடப் பேசத் தெரியாது. படித்த பெண்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களே; சற்றுமுன் பார்த்தவர்களை மறந்துபோய் விடுகிறார்கள்! நாமாகப் பேச முயன்றாலும் தங்களுக்கு அவசர ஜோலி இருப்பதாக ஓடிப்போய்விடுவார்கள். இது ஒரு அசட்டு நாகரிகம்!

வெல்லப் பாகின் வாசனை 'கம்' மென்று வீசிக்கொண்டிருந்தது. வேலைக்காரப் பெண் நெற்பதரையும், பொரியையும் பிரித்து எடுத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். முறத்தி லிருந்த பொரியைப் பாத்திரத்தில் கொட்டிவிட்டு ஸ்வர்ணத்தைப் பார்த்து அவள். “ஏனம்மா! சின்ன அம்மா வந்தால் திருப்பிக் கோவிச்சுகினு பிறந்த வூட்டுக்குப் போயிடுமா என்ன?" என்று கேட்டாள்.

"யார் பேரிலே அவள் கோபித்துக்கொள்ளப் போகிறாள்? நானும், ஸரஸ்வதியுந்தான் வெளியூருக்குப் போகப்போகிறோமே. கோபமோ, - சமாதானமோ இதில் தலையிட இங்கே யாரும் இருக்கப்போவதில்லை" என்றாள் ஸ்வர்ணம்.

"இந்த வீட்டுக்கு உன் சின்ன அம்மா தான் எஜமானி. இத்தனை வருஷ காலம் அதன் எஜமானியாக இருந்தது போதும். அத்தையம்மாவின் இடுப்புச் சாவி இடம் மாறப் போகிறது. வீட்டைச் சின்ன அம்மா பாத்துக்குவாங்க" என்றாள் ஸரஸ்வதி.

"பாத்துக்குவாங்க! அவ்வளவு இருந்தா இவங்களைப் பிடிக்க முடியாதம்மா. வாய்க்கு ருசியா புருசனுக்குச் சமைத்துப் போடத் தெரியாட்டியும் இதிலே ஒண்ணும் குறைச்சல் இல்லை போங்க!"

2 comments

  • தொடர் முடியப்போகும் அறிகுறிகள் தெரிகிறது. சிறப்பாக எழுது கிறீர்கள், பாராட்டு!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.