(Reading time: 22 - 44 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

கல்லூரி ஆண்டு விழா என்றைக்கு அத்தை?''

" நாளைக்குத்தான். விழாவைச் சிறப்பாக நடத்தும் பொருட்டு எங்கள் கல்லூரிக்கு மூன்று நாள் விடுமுறை விட்டிருக்கிறேன் ராஜா! உனக்கு இன்றும் நாளையும் லீவு தானே! நீயும் இப்போது என்னுடன் கல்லூரிக்கு வரலாம். நீ பெரிய என்ஜினீயர் படிப்பு படிப்பவனாயிற்றே! புதிய ஹாஸ்டல் கட்டடத்தை வந்து பார். அத்துடன் கல்லூரியில் 'டெகரேஷன்' வேலை நடந்து கொண்டிருக்கிறது. உனக்கு இதிலெல்லாம் ஒரு ’டேஸ்ட்' உண்டே !...''

பெண்கள் கல்லூரிக்குள் நான் வரலாமா, அத்தை?''

''தாராளமாக வரலாம்; அங்கே இப்போது கலை நிகழ்ச்சிக்காக ஒத்திகை நடந்து கொண்டிருக்கும். பாரதியும் இன்னும் சில பெண்களும் மட்டுமே வந்திருப்பார்கள். அவர்களைக் கண்டால் நீதான் வெட்கப்படுவாய்! ரொம்ப வாயாடிப் பெண்கள்!'' என்றாள் பார்வதி.

''பாரதியா? யார் அத்தை அது? எஸ். பாரதி, பி.எஸ்ஸி. ஸெகண்ட் இயர் ஸ்டூடன்ட்தானே! 'ஸ்லிம்' மாக சினிமா ஸ்டார் நூடன் மாதிரி இருப்பாளே, அந்தப் பெண்ணா?

''அவளை உனக்கு எப்படித் தெரியும், ராஜா?'' அத்தையின் விழிகள் வியப்பால் மலர்ந்தன.

"ரேடியோ க்விஸ் புரோக்ராமுக்கு அடிக்கடி வருகிற பெண்தானே? நானும் அவளும் க்விஸ் மாஸ்டரின் கேள்வி ஒன்றுக்கு ஒரே சமயத்தில் சேர்ந்தாற்போல் பதில் கூறினோம். மாஸ்டர் அத்தப் பெண்ணுக்குத்தான் 'பாயின்ட்' கொடுத்தார். பிறகு என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே "லேடீஸ் ஃபஸ்ட்' என்று சொல்லிக் கண் சிமிட்டினார்.”

"அதென்னடா அப்படிப்பட்ட கேள்வி?" அத்தை கேட்டாள்.

ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாய் வாழ்வமிந்த நாட்டிலே........’ இந்தக் கவிதையைப் புனைந்த கவிஞன் யார்?' என்பது கேள்வி. பாரதி என்று நாங்கள் இருவரும் பதில் கூறினோம். ’சபாஷ்' என்று கூறிய மாஸ்டர், 'உன் பெயர் என்னம்மா?' என்று அந்தப் பெண்ணைக் கேட் டார் 'பாரதி' என்று நாணத்துடன் பதில் கூறினாள் அவள். அப்போது தான் எனக்கு அந்தப் பெண்ணின் பெயர் தெரியும்' என்று கூறினான் ராஜா.

'வெரி ஷ்ரூட் கர்ல்! இவ்வாண்டு சாரதாமணிக் கல்லூரி நடத்திய அழகுப் போட்டியிலும் கூட அவளுக்கே முதல் பரிசு கிடைத்திருக்கிறது. இதற்காக ஆண்டுவிழாவின் போது பரிசாகக் கொடுப்பதற்கென்று ஒரு பெரிய வெள்ளிக் கோப்பைகூட வாங்கி வைத்திருக்கிறோம். அது மட்டுமல்ல. கலை நிகழ்ச்சியில் குறத்தி டான்ஸ் ஆடப்போகிறாள் அவள்......'' என்று கூறினாள் பார்வதி.

குறத்தி வடிவத்தில், குதூகலத்தின் எல்லையில், வாலிபத்தின் எக்களிப்போடு, ராஜாவின் மனக்கண் முன் தோன்றினாள் பாரதி.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.