(Reading time: 22 - 44 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

ராஜா பால்பாயசத்தை உறிஞ்சிக்கொண்டே பாரதியின் அழகை அசை போடலானான்.

''உங்கள் இருவருக்கும் இன்னும் கொஞ்சம் பாயசம் போடுகிறேன்'' என்றாள் ஞானம்.

என்ன ஞானம்? இன்றைக்கு என்ன விசேஷம்? பால் பாயசம் போட்டிருக்கிறாய்?'' என்று அப்போதுதான் விசாரித்தாள் பார்வதி.

"இன்றைக்கு உங்களுக்குப் பிறந்த தினமாயிற்றே! அது உங்களுக்கு எங்கே ஞாபகம் இருக்கப் போகிறது, எந்நேரமும் கல்லூரியைப்பற்றிய நினைவுதான்.'' ஞானம் கூறினாள்.

நாற்பத்தாறு வயதா ஆகி விட்டது எனக்கு? காலம் விளையாட்டாக ஓடிவிட்டது. கல்லூரிக்கும் எனக்கும் மூன்று வயது வித்தியாசம் தான். கல்லூரிக்கு நாளை ஐம்பதாவது ஆண்டு விழா. எனக்கு நாற்பத்தேழாவது பிறந்த நாள்.''

தான் வேறு, கல்லூரி வேறு என்ற உணர்வே அவளிடம் கிடையாது.

''இந்தக் கல்லூரியிலேயே படித்து, அங்கேயே லெக்சரராக வேலை பார்த்து, இப்போது அதன் தலைவியாகவும் ஆகி விட்டேன். ஹ்ம்ம். பெருமுச்சு ஒன்றை வெளியிட்டு மனத்தில் தோன்றிய எண்ணத்தை மறைக்க முயன்றாள்.

''அத்தை உனக்கு அடிக்கடி பிறந்தநாள் வர வேண்டும்'' என்று வாழ்த்திக் கொண்டே எழுந்தான் ராஜா.

"ஏண்டா நான் சீக்கிரத்திலேயே கிழவியாகிவிட வேண்டும் என்று வாழ்த்துகிறாயா?'' என்று கேட்டாள் பார்வதி.

''பாயசத்துடன் எழுந்து விட்டாயே, மோர் சாப்பிட வில்லையா ராஜா? என்று கேட்டாள் ஞானம்.

"ஹவுஸ் புல்!'' என்று கூறிக்கொண்டே திருப்தியுடன் ஓர் எப்பம் விட்டான் ராஜா.

"உனக்கு எப்போதும் இந்த சினிமாப் பேச்சுதான்.... சரி, போய் காரை எடு; காலேஜுக்குப் புறப்படலாம், என்று அத்தை கூறி முடிக்கு முன்பே, 'ஓ.கே!'' என்று வாசலுக்குப் பாய்ந்து ஓடினான் ராஜா.

பார்வதி வாசல் ஹாலுக்கு வந்து நின்று பகவானையும், தேவியையும் அண்ணாந்து பார்த்து வணங்கிவிட்டுக் காரில் ஏறிக்கொண்டாள். கார் போர்ட்டிகோவை விட்டு நகர்ந்ததுதான் தாமதம், செவிட்டுப் பெருமாள் மரியாதையாக முக்காலியை விட்டு எழுந்து நின்றான்.

அத்தை! இந்தச் செவிடனுக்கு நீ வெளியே போகிற நேரம் மட்டும் எப்படியோ மூக்கிலே வியர்த்து விடுகிறது. மற்ற நேரங்களில் காதும் கேட்பதில்லை, கண்ணும் தெரிவதில்லை. பெரிய வேஷக்காரன் அத்தை இவன்!... கையில் அல்லி அரசாணி மாலையைப் பாரு!'' என்றான் ராஜா.

உன் மாதிரி 'ஹிட்ச்காக்' படம் பார்க்கச் சொல்கிறாயா, அவனை?”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.