(Reading time: 18 - 35 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

நாலு பேர் கண்டால் கேலிக்கு இடம் என்பதை அவள் மனம் குத்திக் காட்டிற்று.

அந்த நிலையில் ராஜாவின் கையை அப்படியே விட்டுச் செல்லத் துணிவின்றித் தவித்தபோது, சட்டென உதித்த யோசனையைச் செயல்படுத்துவதுபோல் தன் இடுப்பில் செருகியிருந்த மெல்லிய கைக்குட்டையை எடுத்து, ஃபயர் பக்கெட்டிலிருந்த தண்ணீரில் நனைத்துப் பரபரவென்று அவன் கட்டை விரலைச் சுற்றிக் கட்டிவிட்டு, "இதோ இங்கேயே இருங்கள். நான் போய் முதல் உதவிப் பெட்டியை எடுத்து வருகிறேன்'' என்று கூறிக்கொண்டு ஓட்டமாக ஓடிவிட்டாள்.

ராஜாவின் கையில் பட்டது இலேசான அடிதான். ஆயினும் அவன் கத்திக் கூச்சலிட்டுப் பாரதியுடன் நெருங்கிப் பேசுவதற்கும் பழகுவதற்கும் அதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டான்.

பாரதி அந்த இடத்தை விட்டு நகர்ந்ததுதான் தாமதம், அடுத்த கணமே அவன் அந்தக் கைக்குட்டையை எடுத்து மடித்துத் தன் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டான்.

# # #

ல்லூரியின் பொன் விழாவுக்குத் தலைமை தாங்கப் போகும் பிரதம நீதிபதி அவர்களையும், ஹாஸ்டலைத் திறந்து வைக்க அன்புடன் இசைந்துள்ள திருவாளர் சேதுபதி அவர்களையும் சிறந்த முறையில் வரவேற்பதற்கான திட்டங்களை மானசீகமாக வகுத்துக் கொண்டிருந்தாள் பார்வதி.

வாசலில் அவர் காரில் வந்து இறங்கும்போது இரண்டு மாணவிகள் விரைந்து சென்று காரின் கதவைத் திறந்து வரவேற்க வேண்டும். அவர் கீழே இறங்கி வரும்போதே இன்னொரு மாணவி பன்னீர் தெளித்துச் சந்தனமும் கற்கண்டும் வழங்க வேண்டும். வேறொருத்தி ஒற்றை ரோஜா மலரை எடுத்து அவரிடம் தரவேண்டும். அப்போது டேப் ரிக்கார்டரிலிருந்து ஒலிப்பரப்பாகும் ராஜரத்தினம் பிள்ளையின் தோடி ஆலாபனை இலேசாகக் காற்றில் மிதந்து வர வேண்டும். வாசலில் வாழை மரங்களுடன் கூடிய வரவேற்பு வளைவுகளும், மாவிலைத் தோரணங்களும், காகிதப்பூக் கொடிகளும் கட்டிவைக்க வேண்டும். மரங்களில் சின்னஞ்சிறு மின்சார விளக்குகள் பழுத்துக் குலுங்குவது போல் ஒளி வீச வேண்டும்.

வாசல் கேட்டிலிருந்து விழா நடைபெறப் போகும் புதிய ஹாஸ்டல் கட்டடம்வரை வழிநெடுகத் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டு வைக்க வேண்டும். பாதைக்கு இரண்டு பக்கங்களிலும் மாணவிகள் மஞ்சள் நிற யூனிபாரத்தில் வரிசையாக அணிவகுத்து நிற்கவேண்டும்.

விழா ஆறரை மணிக்குத் தொடங்கப் போவதால், அவர் பத்து நிமிடங்கள் முன்னதாகவே வந்து விடுவார். ஏறக்குறைய நீதிபதியும் அதே நேரத்துக்குள் வந்து விடலாம்.

One comment

  • :clap: nalla rammiyamaana epi.manathukku amaithi koduppathu polirukku :clap: eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.