(Reading time: 15 - 29 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

நாற்காலியில் அமரச் சொன்னார். முகத்தில் புன்சிரிப்புத் தவழ, பார்வதி அடக்கமாக அவர் எதிரில் உட்கார்ந்து கொண்டான். சில விநாடிகள் அந்த அறைக்குள் ஓர் அசாதாரணமான அமைதி நிலவியது. எப்படிப் பேச்சைத் தொடங்குவது என்று பார்வதி யோசித்தாள். எடுத்த உடனேயே பாரதியைப் பற்றி அவரிடம் புகார் கூறுவது அவளுக்கே பிடிக்கவில்லை. எனவே, அவரே முதலில் பேசட்டும் என்று காத்திருந்தாள். எவ்வளவு நேரம்தான் சும்மா உட்கார்ந்திருக்க முடியும்? அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த அவருடைய மனைவியின் படத் தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். பாரதியின் ஜாடையாகவே காணப்பட்ட அந்த உருவத்தைக் கண்ட போது, பார்வதியின் கண்கள் கூசின.

சேதுபதி இலேசாகக் கனைத்துக் கொண்டு, ”ஏதாவது விசேஷம் உண்டா?' என்று கேட்டார்.

''ஆமாம்'' என்று பதிலளித்த பார்வதி, தான் கூறவந்த விஷயத்தைச் சொல்லலாமா வேண்டாமா என்று சற்றுத் தயங்கி விட்டு, ''ஒன்று மில்லை; பாரதியைப் பற்றிச் சொல்லி விட்டுப் போகத்தான் வந்தேன். அவள் நேற்று மூன்று மணிக்கு யாருடைய அனுமதியுமின்றி காலேஜிலிருந்து வெளியே போயிருக்கிறாள்...'' என்றாள்.

"அப்படியா!'' வியப்புடன் ஒலித்தது சேதுபதியின் குரல்.

''ஆமாம், அனுமதியின்றி அவள் வகுப்பை விட்டுப் போவது இதுதான் முதல் தடவை. ஆகவே, இதை ஒரு பெரிய புகாராகத் தங்களிடம் சொல்ல வேண்டாமென்று தான் முதலில் நினைத்தேன். மாணவிகளின் ஒழுக்கம் மிகவும் முக்கியமானது. ஆகவே இம்மாதிரி தவறுகளை வளர விடாமல் முளையிலேயே கிள்ளி விடுவது நம்முடைய கடமை யல்லவா? தங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டுமென்பதற்காகவே இதைச் சொன்னேன். அவள் நல்ல பெண்தான். யாராவது சிநேகிதிகளுடன் சேர்ந்து கொண்டு சினிமாவுக்குப் போயிருப்பாளோ என்பது என் சந்தேகம்...'' என்றாள் பார்வதி.

""ஆமாம், அப்படித்தான் இருக்கும். அவள் நேற்று நேரம் கழித்து வந்த விஷயம் எனக்கும் தெரியும். உடனே கூப்பிட்டு விசாரித்தபோது தான் கணக்கில் வீக் என்றும் யாரோ ஒரு ஹாஸ்டல் பெண்ணிடம் கணக்குக் கற்றுக் கொண்டிருந்ததாகவும் என்னிடம் துணிந்து ஒரு பொய்யைச் சொன்னாள்...'' என்றார் சேதுபதி.

தம்முடைய மகள் மீது அவர் கொண்டுள்ள கோபத்தைத் தணிக்க எண்ணிய பார்வதி தமாஷாகச் சிரித்துக் கொண்டே, "இல்லையே, பாரதி கூறியது பொய்யில்லையே?'' என்றாள்.

”பொய்யில்லையா? அவள் சினிமாவுக்குப் போயிருப்பாள் என்று தாங்களே சற்று முன் கூறினீர்களே!”

"ஆமாம்; அவள் கணக்கிலே 'வீக்' என்று கூறியது பொய்யில்லை என்றுதான் சொல்ல வந்தேன். சிரித்தபடியே கூறினாள் பார்வதி.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.