(Reading time: 14 - 28 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

நான் கூட அதைத்தான் சொன்னேன். இப்போது என்னடா அவசரம் வந்து விட்டது? வயசு ஐம்பது தானே ஆகிறது! இன்னும் பத்து வருஷம் போகட்டுமே' என்றேன்'' என்று ராஜா சிரித்துக் கொண்டே கூறினான்.

"ராஜா! சின்னையனுக்கு அப்படி என்ன வயசாகிவிட் டது? மிஞ்சினால் ஐம்பது இருக்கும். அது ஒரு வயசா? சாப்பிட்டு முடிந்ததும் செக்குப் புத்தகத்தைக் கொண்டு வா, கையெழுத்துப் போட்டுத் தருகிறேன். உடனே அவனுக்குப் பணத்தைக் கொடுத்தனுப்பு'' என்றாள் பார்வதி.

வயதாகிவிட்ட பிறகும் கலியாணம் செய்து கொள்ளும் வழக்கம் மேல் நாடுகளில் தான் உண்டு என்று கேள்விப் பட்டிருக்கிறேன். வர வர நம் நாட்டிலும் இது சகஜமாகி விட்டது...'' என்று முணுமுணுத்தான் ராஜா.

உனக்கு இதில் என்ன ஆட்சேபனை..?” பார்வதி கேட்டாள்.

எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. தங்களுடைய வயதுக்கேற்ப இன்னொரு வயதான மங்கையாகப் பார்த்து ஜோடி சேர்த்துக் கொள்ளாமல், இளம் பெண்களின் வாழ்வைப் பாழாக்கி விடுகிறார்களே என்பதை எண்ணும் போது தான்...''

அவரவர்கள் வயதுக்கேற்ற முறையில் ஜோடி சேர்த்துக் கொள்ள வேண்டும்... அவ்வளவுதானே?' ராஜாவின் பதில் பார்வதிக்குத் திருப்தியை அளித்தது. சேதுபதியின் வயதோடு தன் வயதை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டாள். சரியான பொருத்தம்தான். அவருடைய ஆழ்ந்த அறிவு, கண்ணியமான தோற்றம், அடக்கமான குணம், வார்த்தைகளை நிறுத்துப் போட்டுப் பேசும் தன்மை,குற்றமற்ற குழந்தைச் சிரிப்பு - எல்லாமே தனக்குப் பொருத்தமாக அமைந் திருப்பதாகத் தோன்றியது அவளுக்கு.

''கல்லூரிக்கு நேரமாகி விட்டது; நான் புறப்படுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே வாசலுக்குச் சென்ற பார்வதி, பகவான் பரமஹம்சரையும் தேவியையும் வணங்கி விட்டுக் காரை எடுத்தாள். அவள் உள்ளத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருக்க முயன்றபோதிலும் அவளால் முடியவில்லை.

கார், வாசலைத் தாண்டியபோது செவிட்டுப் பெருமாள் வழக்கம்போல் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினான். ஆனால் அவன் ஏதோ மாதிரியாகத் தன்னைக் கவனிப்பது போல் பட்டது அவளுக்கு.

கார் கல்லூரி காம்பவுண்ட் வாசல் திருப்பத்தை அடைந்தபோது மணி பத்தடிக்க ஐந்து நிமிஷம்! அதோ, காலை விந்தி விந்தி நடந்து வரும் அகாதாவும் வந்துவிட்டாளே!

ஹல்லோ, குட் மார்னிங்” என்று புன்சிரிப்போடு கூறினாள் அந்தப் பிரெஞ்சு மாது. அகாதாவின் புன்சிரிப்பில் ஏதோ அர்த்தம் இருப்பது போல் தோன்றியது பார்வதிக்கு.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.