(Reading time: 13 - 26 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

Flexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 06 - சாவி

கத்திக் கீரையைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துப் பசு மாட்டுக்குக் கொடுத்துக்கொண்டே, அதன் கழுத்தைத் தடவியபடி, கடமையற்ற, கல்லூரிக்குச் செல்ல வேண்டிய அவசரமற்ற ஞாயிற்றுக்கிழமையின் விடுமுறை நிதானத்தைச் சாவகாசமாக அசை போட்டுக் கொண்டிருந்தாள் பார்வதி. வாரம் முழுவதும் கல்லூரி அலுவல்களில் ஆழ்ந்து விடும் அவளுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் ஓய்வுத் தினம். ஆயினும் விடுமுறை நாட்களில் கூட அவள் வீண் பொழுது போக்குவதில்லை.

ஓய்வு நாட்களில் வீட்டிலேயே இருந்து கவனிக்க வேண்டிய வேலைகளுக்கு முதல் நாளே திட்டம் போட்டு வைத்துக்கொள்வாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. பத்து மணிக்கெல்லாம் சாப்பாட்டை முடித்துக்கொண்டு மாடிக்குச் சென்று பீரோவில் அடைந்து கிடக்கும் காகிதக் குப்பைகளையும், பழைய கடிதங்களையும் எடுத்து வெளியே போட்டு, வேண்டாதவற்றை ஒதுக்கி, வேண்டிய-வற்றை மட்டும் ஒழுங்காக அடுக்கி வைக்கவேண்டும் என்று முதல் நாளே திட்டம் போட்டு வைத்திருந்தாள்.

கடந்த மூன்று ஞாயிற்றுக்கிழமைகளாகவே இந்த வேலையை அவள் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தாள். காரணம், முப்பது ஆண்டுகளாகச் சேர்ந்துள்ள குப்பைகளைக் கிளறும்போது தன்னுடைய கடந்த கால வாழ்க்கை விநோதங்களெல்லாம், தான் அனுபவித்த இன்ப துன்பங்களெல்லாம் நினைவில் தோன்றி சஞ்சலப்படுத்துமல்லவா?

மணி ஒன்பது இருக்கும். கல்லூரி மாணவிகள் இருவர் பிரின்ஸிபால் பார்வதியின் பேட்டிக்காக வாசலில் காத்திருந்தனர். பார்வதி, உள்ளே சமையலறையில், ஞானத்துக்கு உதவியாகக் காய்களைத் திருத்திக் கொடுப்பதில் முனைந் திருந்தாள். அவளுடைய ஞாயிற்றுக்கிழமை திட்டங்களில் அதுவும் ஒன்று! காய்கள் திருத்துவதில் பார்வதிக்கு எப்போதுமே பிரியம் அதிகம்!

வாழைப்பூவின் இதழ்களை ஒவ்வொன்றாகப் பிய்த்து அதன் நீள நீளமான பூக்களைத் தனித்தனியாகப் பிரித்து எடுத்து, அந்தப் பூக்களின் இதயத்தில் ஒளிந்திருக்கும் 'கள்ளனை'க் கண்டு பிடித்து அகற்றுவது ஒரு பெரிய கலை, அன்று அதை ஒரு விளையாட்டுச் சிறுமிபோல் செய்து மகிழ்ந்து கொண்டிருந்தாள் பார்வதி.

வாழைப்பூ ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பார்வதி தன் வாழ்க்கையை எண்ணிப் பார்த்துக் கொண்டாள்.

'என் இதயத்தில் புகுந்திருக்கும் கள்ளனைக் கண்டு பிடித்து அகற்றும் சக்தி எனக்கு உண்டா?' இந்தக் கேள்விக்கு அவளால் விடை காண முடியவில்லை. கை, பூவிலுள்ள கள்ளர்களைக் களைந்து கொண்டிருந்தது. அதே சமயத்தில் மனம் தன் இதயக் கள்ளனைக் களையும் மார்க்கம் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.