முதல் நாள் இரவு வெகு நேரம் வரை கண் விழித்துப் படித்துக் கொண்டிருந்த பார்வதி அன்று பொழுது புலரும் நேரத்தில் சற்று அதிகமாகவே தூங்கி விட்டாள், தூக்கம் கலைந்து அவள் படுக்கையை விட்டு எழுந்தபோது கடிகாரத்தில் மணி ஏழடித்துக் கொண்டிருந்தது. அறைக்குள் சில புத்தகங்கள் தாறுமாறாகச் சிதறிக் கிடந்தன. 'துன்பத்துக்கும் இன்பத்துக்கும் இடையே' என்பது அவற்றுள் ஒன்று. "வித் லவ் அண்ட் ஐரணி' என்பது இன்னொன்று. அந்தப் புத்தகங்களைக் கண்டபோது அவள் இதழ்களில் இலேசான புன்முறுவல் தோன்றி நெளிந்தது.
அந்தப் புன்னகைக்குள் 'ஏதோ ஒன்று' ஒளிந்து கொண்டிருப்பதை பார்வதியைத் தவிர வேறு எவருமே அறியமாட் டார்கள்.
'இத்தனைக் காலமும் இல்லாமல் இப்போது என்னுள் புகுந்துள்ள அந்த உணர்வுக்கு என்ன காரணம்? நான் ஏன் அவரைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறேன்? அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?
சேதுபதியின் மகள் பாரதியினிடத்தில் நிஜமாகவே எனக்கு அக்கறை இருக்கிறதா? அவளுக்கு டியூஷன் சொல் லிக் கொடுப்பதில் எனக்கு ஏன் இத்தனை ஆர்வம்? அவளுக்குப் பாடம் சொல்லித் தரும் நேரங்களில் என் மனம் ஏன் அமைதியின்றி அலைய வேண்டும்? அவரைக் காண வேண்டும் மென்ற ஆவலில் என் கண்கள் ஏன் அங்குமிங்கும் சுழல் வேண்டும்? இதற்கெல்லாம் என்ன பொருள்?'
சேதுபதியின் கண்ணியமான, கம்பீரமான தோற்றம் அவள் கண்ணெதிரில் வந்து நின்றது. 'இந்தத் தோற்றத்தில் அப்படி என்ன கவர்ச்சி இருக்கிறது? என்னைக் கவர்ந்திழுக் கும் மாய சக்தி இதற்கு எங்கிருந்து வந்தது?'
ஆம்; சேதுபதியைக் காட்டிலும் கவர்ச்சி மிக்க,அழகு வாய்ந்த ஆடவர்களைப் பார்வதி சந்தித்திருக்கிறாள். வெளி நாடுகளில், எத்தனையோ அறிவாளிகளை, ஆராய்ச்சியாளர் களை, கல்வித் துறையில் புகழுடன் விளங்குபவர்களை, பட்டம் பெற்றவர்களைப் பார்த்துப் பேசியிருக்கிறாள். கருத்து அரங்குகளில் அவர்களுடன் வாதாடி இருக்கிறாள். ஆயினும் அவர்களிடமெல்லாம் காண முடியாத கவர்ச்சி, காந்த சக்தி சேதுபதியிடம் இருந்தது. அந்தக் கவர்ச்சி, ஆண் - பெண் உறவு சம்பந்தமான உடற் கவர்ச்சி அல்ல. அதற்கெல்லாம் அப்பாற்பட்ட அறிவு பூர்வமான ஒரு சக்தி அது! அதை அவளால் விளக்க