(Reading time: 10 - 20 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

அண்ணன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கும் வேண்டிய பொருளாதார வசதி இல்லாமல் மாணவிகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தது, அண்ணன் மனைவியின் மறைவு, அந்தத் துயரம் தாங்காமல் அண்ணன் தன்னை விட்டுப் பிரிந்து சென்றது, குழந்தை ராஜாவுடன் கிழவர் சாம்பசிவத்தின் ஆதரவில் வாழ்ந்தது,சேதுபதி தன்னைப் பெண் பார்க்க வந்தது, காரணம் கூறாமலே தன்னை நிராகரித்தது, தந்தைபோல் அன்பு பாராட்டிய சாம்பவம் தன்னை அநாதையாக்கி விட்டுப் பிரிந்து சென்றது, பல இன்னல்களுக்கிடையே படித்துப் பட்டம் பெற்றது, பின்னர் இதே கல்லூரியில் படிப்படியாக முன்னுக்கு வந்து, கடைசியில் பிரின்ஸிபால் ஆனது வரை எல்லா நிகழ்ச்சிகளையும் எண்ணிப்பார்த்து வியந்து கொண்டாள்.

மணி ஆறு அடித்துக் கொண்டிருக்கும்போதே பார்வதியின் கார் திருவாளர் சேதுபதியின் பங்களாவுக்குள் போய் நின்றது. வெகு நேரமாக மரத்தடி ஊஞ்சலில் உட்கார்ந்து பார்வதியின் வரவை ஆவலுடன் எதிர் நோக்கியிருந்த சேதுபதி, அவள் வருவதற்குச் சற்று முன்புதான் உள்ளே எழுந்து போனார்.

அறைக்குள் அமர்ந்திருந்த சேதுபதிக்கு வாசலில் கார் வரும் ஓசை கேட்டபோது 'ஒருகணம் எழுந்து போய் பார்வதியை வரவேற்கலாமா?' என்று தோன்றியது. அடுத்த கணமே, "சே! கூடாது; தனக்கு அவளிடம் உள்ள அந்தரங்க ஆவலை வெளியே காட்டிக் கொள்ளக்கூடாது. பாரதிக்கு டியூஷன் சொல்லிக்கொடுத்த பிறகு பார்வதி யாகவே தன்னைத் தேடி தன்னுடைய அறைக்கு வருவாள். அதுதான் வழக்கம். வழக்கப்படி இன்றும் அவளாகவே. வரட்டும். அதற்குள் நான் ஏன் அவசரப்படவேண்டும்?" என்று எண்ணியவராய் அறைக்குள்ளேயே இருந்துவிட்டார்.

அன்று டியூஷன் முடிவதற்கு வழக்கத்தைக் காட்டிலும் கால் மணி நேரம் அதிகமாயிற்று. பாடம் நடந்துகொண்டிருந்தபோது பார்வதியின் உள்ளத்தில் அமைதி இல்லை. சேதுபதியையே எண்ணி எண்ணிக் குழம்பிக் கொண் டிருந்தது.

'இன்று அவருடைய அறைக்குச் சென்று அவருடன் வெகு நேரம் பேசிக் கொண்டிருக்க வேண்டும். பேச்சுக் கிடையில் தன் உள்ளத்தில் சஞ்சலமிட்டுக் கொண்டிருக்கும் எண்ணத்தை, வெளிப்படையாகச் சொல்லிவிட வேண்டும்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.