(Reading time: 13 - 26 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

Flexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 09 - சாவி

'ணக்கம்' என்று சொல்லிக்கொண்டே சேதுபதியின் அறைக்குள் பிரவேசித்த பார்வதி, கலக்கமும் பரவசமும் கலந்த உணர்ச்சி வசப்பட்டவளாய், தெய்வ சந்நிதியில் மெய்ம்மறந்து நிற்கும் ஒரு பக்தனைப்போல் தன்னை மறந்த நிலையில் அசைவற்று நின்று கொண்டிருந்தாள். அதே நிலைதான் சேதுபதிக்கும். பார்வதியைக் கண்டதும் வழக்கமாகக் கையைக் காட்டி அமரச் சொல்லும் அவர், அன்று உண்மையிலேயே ஒரு தெய்வச் சிலைபோல் உட்கார்ந்திருந்தார்.

இந்த மௌன நிலை இரண்டு நிமிடங்கள் நீடித்தது. பார்வதி தானாகவே உட்கார்ந்திருக்கலாம், அல்லது சேதுபதியாவது அவளை உட்காரச் சொல்லி-யிருக்கலாம். ஆனால் இருவருமே ஒருவரில் ஒருவர் லயித்து, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, ஒருவருடைய இதய ஆழத்தின் அடி வாரத்தில் புதைந்து கிடக்கும் இரகசியத்தை மற்றவர் ஊடுருவி அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் வாயடைத்துப் போன ஊமைகளாகி, மெளன மொழியில் சம்பாஷித்தபடியே, தத்தம் உணர்ச்சிகளை, ஆசைகளை உள்ளத்தில் புதைந்து கிடக்கும் எண்ணங்களை வெளியிட முயலும் நடிப்புக்கலையில் இரண்டு நிமிடங்களைக் கழித்து விட்டனர். கடைசியில், சுயஉணர்வு பெற்று, உட்காருங்கள்'' என்று கூறிய சேதுபதி பார்வதியைப் பார்த்தபோது, அவள் நாற்காலியில் அமர்ந்துவிட்டிருப்பதைக் கண்டார்.

"மன்னிக்க வேண்டும்; தாங்கள் எது பற்றியோ தீவிர மாகச் சிந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில்..."

சேதுபதி சிரித்தார். அது பொருளற்ற ஒரு வறட்டுச் சிரிப்பு!

அவர் உள்ளம் எதையோ எண்ணிக் கொண்டிருந்த நிலையில் உதடு சிரிப்பைக் காட்டிக் கொண்டிருந்தது.

"தாங்கள் காலையில் வரப்போவதாகப் பாரதி சொல்லிக் கொண்டிருந்தாளே, ஏன் வரவில்லை?" என்று சேதுபதி ஆவலுடன் கேட்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த பார்வதிக்கு அவர் ஒன்றுமே கேட்காதது மிக ஏமாற்றத்தை அளித்தது.

அடுத்த கணமே, 'தன்னிடம் அவருக்கு அவ்வளவு அக்கறை இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன அசட்டுத்தனம்?' என்று எண்ணிக் கொண்டாள்.

உதட்டில் தவழ்ந்த புன்சிரிப்புக்கும் உள்ளத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த உணர்ச்சிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இன்றிச் சிந்தனையில் மூழ்கியிருந்த சேதுபதி, பார்வதியை மறந்துவிட்டவரைப் போல் காணப்பட்டாலும், அவருடைய எண்ண-மெல்லாம் அவளைப் பற்றியதாகவே இருந்தது. அவர் அவளைக் கவனிக்காதது போல் பார்த்துக் கொண்டிருந்தார். அவளை மறந்துவிட்டவர்போல் அவளையே எண்ணிக் கொண்டிருந்தார்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.