(Reading time: 13 - 26 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

Flexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 14 - சாவி

பார்வதியின் கார், கார்நேஷன் கல்லூரியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதைச் செலுத்திக்கொண்டிருந்த பார்வதியின் உள்ளம் தீவிரச் சிந்தனையில் ஈடுபட்டிருந்தது.

மேற்படி கல்லூரியின் தலைவர் திருவாளர் வேதாந்தத்தைப்பற்றி எண்ணும்போதே அவளுக்கு ஒருமித அச்சமும், பக்தியும் தோன்றின. அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அவளுக்கு இதுவரை ஏற்பட்டதில்லை. இதற்குமுன் அவரை இரண்டொரு முறை சந்தித்துப் பேசியிருக்கிறாள். ஆயினும், குறைந்த வார்த்தைகளுடனேயே அச்சந்திப்புகள் முடி வடைந்து விட்டன.

சாரதாமணிக் கல்லூரியின் பொன்விழா நிகழ்ச்சிக்கு அவர் வந்திருந்தபோதுகூடப் பார்வதியால் அவரிடம் பேச முடியவில்லை. அடக்கமே உருவான திருவாளர் வேதாந்தம், அமைதியே வடிவமாய் ஒரு பக்கமாகப் போய் உட்கார்ந்து கொண்டிருந்தார். நிறைகுடம் என்பார்களே, அந்தப் பெயர் திருவாளர் வேதாந்தத்தைப் பார்த்த பிறகே தோன்றியிருக்க வேண்டும்.

ஆங்கிலம், தமிழ் இவ்விரு மொழிகளிலும் அவருக்கு ஆழ்ந்த புலமையும் சரி சமமான பற்றுதலும், ஞானமும் இருந்தன. கம்பனையும் ஷேக்ஸ்பியரையும் சமநோக்குடன் சம எடையில் வைத்து ஆராய்ந்த அறிவாளர் அவர்.

நிஜாரும், கோட்டும் போட்டுக்கொண்டு, குடுமியா கிராப்பா என்று தெரியாமல் மறைத்துவிடும் தலைப்பாகை யுடன் தான் எந்நேரமும் காட்சியளிப்பார். யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. அப்படிப் பேசினாலும் பொதுவாகத் தமிழ் இலக்கியங்களைப் பற்றியோ, ஆங்கில நூல்களைப் பற்றியோதான் பேசுவார்.

எந்த மொழியில் பேசிய போதிலும் அந்த மொழிக்கே உரிய தனித் தூய்மையுடன் தான் பேசுவார். ஒரு மொழி பேசும்போது அத்துடன் இன்னொரு மொழியைக் கலந்து விடக்கூடாது என்பதில் எப்போதுமே கண்ணும் கருத்துமாக இருப்பவர.

திருவாளர் வேதாந்தத்துடன் தமிழில் பேசுவதா, ஆங்கிலத்தில் பேசுவதா என்ற கவலை ஒருபுறமும், தன்னுடைய கல்லூரி மாணவி மீனாவைப்பற்றி அவரிடம் எவ்வாறு பேச்சைத் தொடங்குவது என்ற அச்சம் இன்னொரு புறமும் பார்வதியை வாட்டிக் கொண்டிருந்தன.

"எங்கே வந்தீர்கள், என்ன விஷயம்” என்று வேதாந்தம் கேட்டால், விஷயத்தை எப்படித் தொடங்குவது?

'தங்கள் கல்லூரி மாணவன் கோபாலனைப்பற்றிப் பேச வந்திருக்கிறேன்' என்று கூறி, மீனாவின் தந்தையிடமிருந்து வந்துள்ள கடிதத்தை அவரிடம் கொடுத்து விடுவதா? அல்லது பொதுவாகச் சில விஷயங்களைப்பற்றி முதலில் பேசிக்கொண்டிருந்த பின்னர், பேச்சுக்கிடையில் தான் வந்த காரியத்தை நாசுக்காக அறிவிப்பதா?

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.