(Reading time: 11 - 22 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

மணி பதினொன்றுக்கு மேல் ஆகியும் பார்வதிக்குத் தூக்கமே வரவில்லை சந்தடிகள் குறையக் குறைய, ஊர் அடங்கி உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தது. எங்கோ தொலைவில் செல்லும் கார்களின் ஹாரன் ஒலி மட்டும் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தன அவளுக்கு.

அவர் இப்போதெல்லாம் முன்போல் இங்கே வருவதில்லையே, ஏன்? ஒரு வேளை அவர் கொண்டுவந்த மாதுளம் பழங்களை நான் ஆர்வத்துடன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாலோ? இருக்காது; அவர் தம்முடைய கையால் எடுத்துக் கொடுத்ததை நான் என் கை நீட்டி வாங்கிச் சாப்பிட்டேனே! அவருக்கு எத்தனையோ அலுவல்கள்! எவ்வளவோ காரியங்கள். அவற்றுக்கிடையில் என்னை வந்துகாண அவகாசம் சிறிதாவது வேண்டாமா?... ஒரு வேளை உண்மையிலேயே என் மீது அவருக்கு அன்பேதான் இல்லையோ? சே! ஒரு நாளும் அப்படி இருக்காது. என்மீது அவருக்கு அன்பு இல்லையென்றால் தம்முடைய தங்கை காமாட்சி அம்மாள், மகள் பாரதி இரண்டு பேரையும் இங்கே கொண்டுவந்து விட்டிருப்பாரா? காமாட்சி கூட அடிக்கடி சொல்லுவாளே, உங்களைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டால் மட்டும் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பார்'' என்று... அன்பும் அக்கறையும் இல்லையென்றால் அப்படி ஓயாமல் பேசுவாரா? டாக்டரம்மாளிடம் என் தேகநிலை பற்றி அடிக்கடி விசாரித்துக் கொண்டிருக்கிறாராமே! எனக்கு உடல் நலம் சரியில்லை என்பதற்காகத் தம்முடைய வெளியூர்ப் பயணங்களை யெல்லாம் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறாராமே! இங்கே வராமலிருப்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். அவற்றை-யெல்லாம் அவர் கூற முடியாமலிருக்கலாம்.'

பார்வதி புரண்டு படுத்துக் கொண்டாள்.

சேதுபதியை மறந்து விடுவதற்கு, என் உள்ளத்தில் புகுந்து வேரூன்றிவிட்ட அந்த எண்ணத்தை அப்புறப் படுத்துவதற்கு வழியே கிடையாதா? இப்படியே,மனத்திற் குள்ளாகவே மறைத்து வைத்து அவர் நினைவாகவே அவர் கவலையாகவே, படுத்த படுக்கையாகவே இருந்து, ஒரு நாள் மறைந்து போக வேண்டியதுதானா? இந்த எண்ணம் என்னுள்ளேயே அழிந்து போக வேண்டியது தானா? நான் ஏன் அழிய வேண்டும்? என்னை அணு அணுவாக அரித்துக் கொண்டிருக் கும் இந்த எண்ணத்தை, நான் அழியாமலேயே அழித்து விடுகிறேன். அவருடைய உள்ளத்தில் அந்த எண்ணமிருந்தா லும் நாளையோடு ழித்து விடுகிறேன். அப்புறம் நானும் அவரும் நிம்மதியாக வாழலாம். எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும்” பார்வதியின் உள்ளத்தில் ஒரு திடமான முடிவு ஏற்பட்டுவிட்டது. நீண்ட காலமாக அரித்துக் கொண்டிருந்த வேதனை அந்த விநாடியோடு தீர்ந்து போயிற்று. மிகுந்த நிம்மதியுடன் ஒரு பெருமூச்சு விட்டாள் அவள்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.