(Reading time: 10 - 19 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

கூறிவிட்டு, அகாதா விடை பெற்றுக்கொண்டாள்.

அன்று மாலை சேதுபதி வந்தபோது மணி மூன்று இருக்கும்.

கீழே அவர் ராஜாவுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு பார்வதி எழுந்து உட்கார்ந்து கொண்டாள், அவளுக்கு அவரைக் காணவேண்டும் போலிருந்தது. மெதுவாகக் கட்டிலை விட்டு இறங்கி அறைக்கு வெளியே வந்து நின்றாள்.

''அத்தை.. அத்தை ! எதுக்காக எழுந்து வந்தீங்க?'' என்று கூவியபடியே ராஜா அவளைத் தாங்கிக்கொள்ள ஓடி வந்தான்.

''ராஜா! என்னைக் கீழே படுக்க வை. எனக்கு ஏதோ மாதிரி இருக்கிறது. நெஞ்சை வலிக்கிறது. அவர் வந்திருக்கிறாரா? இவ்வளவுதான் அவளால் பேச முடிந்தது. சேதுபதி அவள் எதிரில் வந்து நின்றபோது பார்வதி அவருடன் ஏதோ பேச முயன்றாள். ஆனால் முடியவில்லை, அவள் கண்கள் அவரையே பார்த்துக் கொண்டிருந்தன. ”எனக்கு ஒரு குறையுமில்லை. தங்களுடன் பூரணமாக வாழ்ந்துவிட்ட நம்மதியுடன் நான் போகிறேன்'' அந்தப் பார்வையின் பொருள் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

அவ்வளவுதான், அடுத்த சில மணி நேரத்துக்குள், பார்வதியின் கதை முடிந்து விட்டது.

அத்தை!” வீரிட்டு அலறிவிட்டான் ராஜா. ஊரே பார்வதியின் இல்லத்தில் கூடித் தலை குனிந்து நின்றது.

'பார்வதியின் உயிர் விலை மதிப்பற்றது. அதற்காக நான் எதையும் இழக்கத் தயார்' என்று கூறிய சேதுபதி பச்சைக் குழந்தை போல் ஒரு மூலையில் விசும்பிக் கொண்டிருந்தார்.

கண்ணுக்கு லட்சணமாகக் காட்சி அளிப்பதைத் தவிர, விசிறி வாழையினால் யாருக்கும் எவ்விதப் பயனும் கிடையாது. பார்வதியின் வாழ்வும் அத்தகையதுதான். அவள் கடைசிவரை கன்னியாகவே, கண்ணுக்கு லட்சணமான காட்சிப் பொருளாகவே வாழ்ந்துவிட்டுப் போய் விட்டாள். அவளுடைய சொந்த வாழ்க்கை விசிறி வாழையைப்போல், காட்டில் காய்ந்த நிலவைப்போல், பயனற்ற ஒரு வாழ்க்கை யாக முடிந்துவிட்டது.

சாரதாமணிக் கல்லூரி, விடுமுறை முடிந்து திறக்கப் பட்டதும், மாணவிகளும் ஆசிரியைகளும் பிரார்த்தனை மண்டபத்தில் கூடி நின்றார்கள். பார்வதியின் ஆத்மா சாந்திக் காக அவர்கள் இரண்டு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்திவிட்டுக் கலைந்தனர். சில தினங்களுக்கெல்லாம் கஸ்தூரி பிரார்த்தனை மண்டபத்துக் கெதிரில் பார்வதி துளசிச் செடியாக வந்து வளர்ந்து கொண்டிருந்தாள்.

சேதுபதியின் இல்லத்தில் முன் வாசல் கூடத்தில் பார்வதியின் படம் மாட்டப் பட்டிருந்தது. அதன் முன்னால் கைகட்டி நின்று கொண்டிருந்தார் அவர். அந்த இடத்தில் தான் பார்வதி டியூஷன் சொல்லிக் கொடுப்பது வழக்கம.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.