(Reading time: 12 - 24 minutes)
Irulum oliyum
Irulum oliyum

Flexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 03 - சு. சமுத்திரம்

டசென்னையில், ‘வண்ணாரப்பேட்டை’ என்று வாயாலும், ‘வண்ணையம்பதி’ என்று எழுத்தாலும் அழைக்கப்படும் பகுதி; அதில் நெருக்கமான வீடுகள் கொண்ட ஒரு சுருக்கமான தெரு. அந்தத் தெருவை, கிராமத்துப் பாணியில் சொல்வது என்றால், ‘முக்கடி முடங்கடி’ என்று சொல்லலாம். சென்னைத் ‘தமிழில்’ சொல்வது என்றால் ‘முட்டுச் சந்து’. உள்ளே போகிற காரும் வண்டிகளும் நேராக, அந்தத் தெருவின் இரண்டு பக்கத்தையும், குறுக்காக அடைத்துக் கொண்டிருக்கும் ஒரு வீட்டில் போய்த்தான் முட்டவேண்டும். அந்த வீட்டை முட்டாமல் வண்டிகள் திரும்பவும் முடியாத. இந்த இலட்சணத்தில், அங்கே, ஒரு லாரியும், இரண்டு மூன்று ‘டிரக்’ வண்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

முகவரி தெரியாமல், மெயின் ரோட்டில் இருந்து வருபவர்களை, இங்கே கொண்டு வந்து, “இந்தா, முட்டு, என்பது மாதிரி, செயலற்றதாக்கும் வல்லமை, இந்தத் தெருவுக்கு உண்டு. இந்தப் பகுதி மக்களுக்கும் உண்டு. “செல்லும் செல்லாததுக்கு செட்டியார்” என்பது போல் முகவரியில் உள்ள தெருவின் விவரம் தெரியாமலும், அதே சமயம் விவரம் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளும் மனப்பான்மையுடனும், கேட்பவரிடம், “லெப்ட்ல கட்பண்ணி... ரைட்ல திரும்பி... அப்புறம் ‘சீரா’ போய்... ரைட்ல திரும்பி...” என்று சொல்பவர் சொன்னதும், அப்படிக் கேட்டுத் தொலைத்தவர்கள், இறுதியில் இங்கே வந்து தங்களைத் தாங்களே தொலைத்தவர்கள் போல், தடுமாறியது உண்டு.

என்றாலும், எப்போதும் கலகலப்புக்குப் பெயர் போன அந்த அதாவது, அந்த முனுசாமித் தோட்டத்தின் மூன்றாவது சந்து, இப்போது கலகலப்பான கலகலப்புடன் காட்சியளித்தது. குறுக்கே மறித்து நின்ற அந்த வீட்டின் வாசலில், மாவிலைத் தோரணம் கட்டப்பட்டு இருந்தது. (வாழை விலை அதிகம். வாங்கி கட்டப்படவில்லை) ஒலிபெருக்கியில், “ஓரம் போ... ஓரம் போ” என்று பாடல் ஒலித்தது. எந்த ஓரத்திலும் இடம் இல்லாத அளவுக்கு, அளவுக்கு மீறிய மக்கள் நெரிசல். மணமகளின் தந்தையும் சொக்கலிங்கத்தின் தங்கை கணவனுமான பெருமாளும், எதைச் சம்பாதிக்கவில்லையானாலும், நண்பர்களை சம்பாதித்து, தானும், அவர்களின் சம்பாதனைக்கு உட்பட்டவர் போல் தோன்றியது.

மணமேடையில் மணமக்கள், ஒருவரை ஒருவர் ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டார்கள். சுற்றி நின்றவர்கள், ஏதாவது சத்தங்கேட்டு, வேறு பக்கமாகத் திரும்பும் போதெல்லாம், இவர்கள், தைரியமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மணமகன் பேசக் கூடப் போனான். மணமேடைக்கு முன்னால், இவர்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்ப்பதற்காகவே, சினிமாவை ‘தியாகம்’ செய்து விட்டு அங்கே, முட்டிக்கால் போட்டு அமர்ந்திருந்த ‘ரெண்டாங்கெட்டான்’ வயதுப் பயல்கள் சிரித்துக் கொண்டார்கள்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.