(Reading time: 7 - 14 minutes)
Irulum oliyum
Irulum oliyum

கஸ்மாலமா பண்ணிட்டே. அதுக்கு ‘மாலு’ வெட்டுறியா... இல்லே மவனே... குடல உருவட்டுமா... நம்ம கிட்டயா டபாய்க்கிற நய்னா...” என்று சொன்னது, சொக்கலிங்கத்திற்கு அதிக பட்சமாகத்தான் தெரிந்தது. “செய்யுறதைச் செய்டா” என்றார். அவனும் செய்ய வேண்டியதைச் செய்தான். அவரது சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டு, “இன்னாய்யா சொன்னே... விட்டேன்னா ஒரு குத்து” என்று, எச்சில் துளிகளில் சாராயத் துளிகள் தெறிக்கும்படி கத்தியபோது, எதேச்சையாக அந்தப் பக்கமாக வந்த ராமன், விட்டான் ஒரு குத்து. பட்டாக்கத்தி சுருண்டு விழுந்தான். விழுந்தவன் எழுந்திருக்கும் முன்னால் விட்டான் ஒரு உதை. பட்டாக் கத்தி படுத்துக் கொண்டே, “விட்டுடு வாத்தியாரே... இவரு... உன்னோட தோஸ்துன்னு தெரியாமப் பூட்டு... அப்பா விட்டுடு... அம்மா விட்டுடு” என்று புரண்டு கொண்டே புலம்பினான்.

“அவரு என்னோட தோஸ்து இல்லடா... சொந்தமான சின்ன நய்னாடா... அவருகிட்ட மன்னுப்புக் கேள்டா கயிதே...” என்று ராமன் கழுதை மாதிரி கனைத்து, ஆள்காட்டி விரலால், சித்தப்பாவைச் சுட்டிக் காட்டிய போது, அந்த ‘கயிதே’யும் சொக்கலிங்கத்தின் கையிலும், காலிலும் விழுந்து மன்னிப்புக் கேட்டுவிட்டு, திரும்பிப் பாராமல் ஓடியது.

சொக்கலிங்கத்திற்குப் பெருமை பிடிபடவில்லை. அந்தத் தெருவுக்கே எஜமானனாகவும், திண்ணைப் பொறுக்கியாகவும் வாழும் ஆனானப்பட்ட பட்டாக்கத்தியையே, இந்த ராமன் அடக்கி விட்டான் என்றால், இவன் சாதாரண ராமன் அல்ல. ரவுடி ராமன். இவன் நமக்கு எப்போதும் தேவை!

அந்த நன்றிப் பெருக்கில், அவனுக்கு தன் வீட்டுக்குள் சகல உரிமைகளையும் கொடுத்தார், சொக்கலிங்கம்.

இதை பெரியண்ணன் மூலம் புரிய வைக்கப்பட்ட பார்வதி ஒருநாள், மல்லிகாவைப் பார்த்து “ராமன்கிட்ட ஏம்மா சிடுசிடுன்னு பேசுற. கொஞ்சம் சிரித்துத்தான் பேசேன். நீன்னா அவனுக்கு உயிரு” என்று பட்டும் படாமலும் பேசினாள்.

அம்மாவின் அபிலாஷை புரியாத மல்லிகா, “இவருகிட்ட சிரித்துப் பேசுறவள், யாருகிட்டயும் சிரித்துப் பேசுறவளாத்தான் இருப்பாள். இதுவும் இது மூஞ்சும். அப்பா சொன்னது மாதிரி சரியான ஓணான் மூஞ்சு” என்று எரிச்சலோடு சொன்ன போது, பார்வதிக்கு படு எரிச்சலாக இருந்தது. அண்ணன் வந்ததும் வராததுமாக “நான் பூடகமாய்ப் பேசிப் பார்த்தேன். இவள், சம்மதிக்க மாட்டாள் போலிருக்கே” என்ற போது, ராமசாமி, ஒரு வில்லன் சிரிப்பை உதிர்த்துக் கொண்டார்.

“பாரு... பக்குவமாகச் சொல்லிப் பாரு. மாட்டேன்னுட்டாள்னா, கழுதையை வீட்டை விட்டுத் துரத்து...”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.