(Reading time: 10 - 19 minutes)
Irulum oliyum
Irulum oliyum

போய், “நான் ஓட்டலுக்குக் கூப்பிட்டதை தயவுசெய்து தப்பா நினைக்காதம்மா. எத்தனையோ பெண்கள் ‘போகலாமா காபிக்கு’ என்று சொல்வதை பொழுதுபோக்கா வைத்திருக்கிறாங்க. ஆனால் நீங்க அப்படிப்பட்ட இனம் இல்லை. உங்களைப் பார்த்தாலும் தப்பாக் கூப்பிடத் தோணாது” என்றான.

“பொழுதுபோக்கும் பெண்களைப் பற்றி நல்லாத்தான் தெரிந்து வச்சிருக்கீங்க. சொந்த அனுபவமா?”

“உண்டு. பிறர் சொல்வதைக் கேட்ட அனுபவமும் உண்டு. உங்ககிட்ட பேசிட்டேனா... இனிமேல் நாலு நாளைக்கு எந்தப் பெண் கூடேயும் காபி குடிக்கப் போக மாட்டேன். போகத் தோணாது. செக்ஸ் கிளாமரை, ஒரு குடும்பப் பெண்ணாலதான் விரட்ட முடியும். நான் வரேன்.”

சரவணன் சைக்கிளை சுற்றி வளைத்துக் கொண்டு அவளுக்கு எதிர்திசையில் உருட்டினான். ‘கடவுளே... இவரு நாலு நாளைக்கு மட்டுமல்ல, எப்போதும் காபி குடிக்க நாலு பேரோடு தான் போகணும். ஜதையாய் போகப்படாது’ என்று மனதுக்குள்ளேயே பிரார்த்தித்துக் கொண்டு மல்லிகா நடந்தாள். இனிமேல் திரும்பி வந்தாலும் வருவாரோ? சூதுவாது இல்லாதவர்... வந்தாலும் வருவார். அய்யோ, அப்படி வந்தால், நாலு பேர் தப்பா நினைப்பாங்களே?

சரவணன் ‘வரக்கூடாது’ என்று வெளிமனம் ஒப்புக்குச் சொல்ல, ‘இன்னும் ஒரு தடவை வரப்படாதா? சைக்கிள் தான் இருக்கே’ என்று உள்மனம், அவளை மீறித் துடிக்கும்படி நடந்து கொண்டிருந்த அவளை, பல தடவை பின்னால் திரும்ப வைத்தது. பிறகு அவள் மடமடவென்று நடக்கத் துவங்கினாள். சரவணனுடன் பல தடவை பேசியிருக்கிறாள். ஆனால் இன்று அவனின் ஒவ்வொரு சொல்லுக்கும் புதுப்பொருள் இருப்பது போல் இருந்தது... எட்டாவது வகுப்பில் படித்த அதே குறளை, கல்லூரியில் வேறு கோணத்தில் படிப்பது மாதிரி...

திடீரென்று போதாக்குறையாக தன்னருகே ஒரு சைக்கிள் நடனமிட்டுக் கொண்டு வருவதைப் பார்த்து, அவள் மகிழ்ச்சியோடும் நாணத்தோடும் ஏறிட்டுப் பார்த்தாள்.

--------------

தொடரும்

Go to Valarppu magal story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.