(Reading time: 9 - 17 minutes)
Irulum oliyum
Irulum oliyum

“மல்லிகா... சைக்கிள் ரிக்‌ஷா கொண்டு வந்திருக்கேன். வாம்மா நம்ம வீட்டுக்குப் போகலாம்.”

பெருமாள், மீசை துடிக்க நின்றார்.

மல்லிகாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ‘அந்த ஆளைப்’ பார்த்தாள். அவர், தன் கண்களைத் துடைத்துக் கொள்வதைக் கண்டாள். அவர் கைகால்கள் தாமாக ஆடுவதை, அவள் உணர்ந்தாள். ஏதோ ஒரு உணர்வு உந்த, மெள்ள, மிக மெள்ள, அவரை நோக்கி நடந்தாள். மெள்ள நடந்த மகளை, அவர் வேகமாகப் போய் அணைத்துக் கொண்டார். பிறகு ஒரு குழந்தை போல் கேவிக் கேவி அழுதார். பிறகு தன் அழுக்காடை பட்டு, மகளின் மேனி மாசுபடக் கூடாது என்று நினைத்தவர் போல் சற்றே விலகிக் கொண்டு, அவள் இரு கரங்களை மட்டும் பற்றிக் கொண்டு, “வாம்மா போகலாம். உனக்கு எந்தக் குறை வச்சாலும், இந்தப் பாவி... அன்பில் மட்டும் குறை வைக்க மாட்டேன்” என்று சொல்லிக் கொண்டு, அவர் நடக்க, மல்லிகா, அம்மாவை மலங்க மலங்கப் பார்த்துக் கொண்டே நடந்தாள். அவள் மடியில் புரண்டு அழவேண்டும் போல் அவளுக்குத் தோன்றியது. தன்னை வளர்த்தவளைக் கட்டிக் கதற வேண்டும் போல அவளுக்குத் தோன்றியது. என்றாலும் தந்தையின் பின்னால் நடந்தாள். ஒரு கையில் போட்டிருந்த தங்க வளையலையும், கழுத்தில் தொங்கிய செயினையும் கழற்றி, ஊஞ்சல் பலகையில் போட்டுவிட்டு நடந்தாள். ராமனுக்காக நடந்தாள். சரவணனுக்காக நடந்தாள். வளர்த்த அப்பா வரட்டும் என்று காத்திருக்கும் உணர்வில்லாமலே நடந்தாள்.

இதற்குள், வெளியே இருந்து வந்த ராமனுக்கு, முதலில் விஷயம் புரியவில்லை. பேயடித்தவள் போல் நின்று கொண்டிருந்த சித்தியும், கலங்கியவாறே போகும் மல்லிகாவையும் பார்த்ததும், அவனுக்கு விஷயம் புரிந்து விட்டது. பெருமாளை மேலும் கீழுமாகப் பார்த்தான். ஆசாமியை அடித்து விடலாம்...

“யோவ்... இன்னாதான்யா உன் மனசிலே நெனைப்பு? இது உன் பொண்ணாகவே இருக்கட்டும். அதுக்கினு ஒரு ‘கொல்கை’ இல்லையா? சின்ன நய்னா இல்லாத சமயத்துல, வூட்டுக்குள்ளே பூந்து, கலாட்டா பண்ணிட்டு ஒரு பொண்ண கடத்திக்கினு போனால், இன்னாய்யா அர்த்தம்? யோவ், அவள விடுறியா இல்ல செமத்தையா வாணுமா?”

பெருமாள், சற்று நின்று அவனை முறைத்தார். மல்லிகா, அப்பாவின் முதுகுப் பக்கம் பதுங்கிக் கொண்டாள். அவனை கால்கள் இரண்டையும் சேர்த்துப் பிடித்து, தலை கீழாகத் தூக்கி நெற்கதிரை அடிப்பது போல் அடிக்கலாமா என்று கூட நினைத்தார். இருந்தாலும், மகள் கணக்கில் தானும் ஒரு ரவுடி என்பது தெரியக்கூடாது என்பது போல், “உனது வேலையைப் பார்த்துக்கிட்டுப் போய்யா...” என்று கத்திவிட்டு, அப்படி, படித்த மகளுக்கு எதிராகக் கத்தியிருக்கக் கூடாது என்பது போல் லேசாக வெட்கப்பட்டுக் கொண்டே நடந்தார்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.